News & AnalysisSri Lanka

இலங்கை | தினமும் இரவு 10:00 முதல் அதிகாலை 4:00 வரை நாடு தழுவிய ஊரடங்கு

ஆகஸ்ட் 16 முதல் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருகிறது. இரவு 10:00 மணி முதல் காலை 4:00 மணி வரை நடைமுறையிலிருக்கும் இவ்வூரடங்கின்போது மக்கள் தமது வீடுகளில் இருக்கும்படி கேட்கப்பட்டுள்ளார்கள்.

கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக நடைமுறைப்படுத்தப்படும் இவ்வூரடங்கின்போது அவசிய சேவைகள் அனைத்தும் அனுமதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கிடையே மக்கள் நடமாட்டத்தைத் தடுப்பதற்காக எல்லைகளில் பொலிசாரும் இராணுவத்தினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். தடையை மீறி மாகாணங்களுக்கிடையே பயணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுமெனவும் உரிய காரணமின்றி மாகாண எல்லைகளைத் தாண்டும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுமெனவும் பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதே வேளை கோவிட் மரணங்களின் இன்றய எண்ணிக்கை 161 ஐ எட்டியுள்ளதுடன் நாட்டின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 6,000 ஐத் தாண்டியுள்ளதென அறிவிக்கப்படுகிறது.

நாட்டில் பொது முடக்கமொன்றை நடைமுறைப்படுத்தும்படி மருத்துவ சங்கங்கள் கேட்டுக்கொண்டிருந்தாலும் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்குக்கூட போதுமான பணம் இல்லாமையால் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பொது முடக்கமொன்றுக்கு அரசாங்கம் தயாராகவில்லை என பல மூத்த அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதே வேளை, நாட்டின் பல்வேறு தொழிற்சங்கங்களும், மாணவர் அமைப்புக்களும் எதிர்க்கட்சிகளும் ஆர்ப்பாட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் செய்ய முடியாதவாறு அவற்றுக்கான அனுமதியை வழஙக வேண்டாமென மாஜிஸ்திரேட்டுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.