Sri Lanka

இலங்கை: தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் எதிர்ப்பு நடவடிக்கை

வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடுகளின்போது நடைபெற்ற பொலிசாரின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (மார்ச் 19) பாராளுமன்றத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதில் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியினரும் பங்கேற்றிருந்தனர்.

இச்சமபவத்தைத் தொடர்ந்து மார்ச் 8 அன்று கோவில் அதிகாரி ரி. தமிழ்ச்செல்வன் உட்பட எட்டு தமிழ்ப் பொதுமக்கள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இச்சம்பவத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் உடனிருந்தார் என அறியப்படுகிறது. கைது செய்யப்பட்ட இவ்வெண்மரில் 24 முதல் 45 வயதுடையவர்கள் அடங்குவர். அவர்கள்: கந்தசாமி கெளரிகாந்தன், திலகநாதன் கிந்துயன், சிவம் லக்‌ஷன், துரைராஜா தமிழ்செல்வன், மகேந்திரன் நரேந்திரன், ராசரட்ணம் விநாயகமூர்த்தி, சுப்பிரமணியம் தனபாலசிங்கம் மற்றும் தம்பிராசா மதிமுகராசா ஆவார்கள். கைதுகளைத் தொடர்ந்து இவர்களில் ஐந்து பேர் தம்மை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் கோவிலின் பழமையை சேதப்படுத்தினார்கள் எனக்குற்றஞ்சாட்டி பழமைக் கட்டளை இல.9-1940 சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளார்கள். இவ்வழக்கு இன்று வவுனியா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இவ்வெண்மர் சார்பாக வழக்கறிஞர் சுகாஷ் வாதாடவுள்ளார். ஆலயத்தின் மதச்சின்னங்களை சேதப்படுத்தினார்கள் எனப் பொய்யான குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது பதியப்பட்டுள்ளதென வழக்கறிஞர் சுகாஷ் கூறியுள்ளார்.

இச்சம்பவம் சார்பாக திருகோணமலை சிவன் கோவில் முன்பு நேற்று மேலுமொரு எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்ப்ட்டிருந்தது. இவ்வேளை கோவிலில் வழிபாடுகளைச் செய்துகொண்டிருந்த பக்தர்களை பொலிசாரும், விசேட படையணியும் பலவந்தமாக இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சில நிமிடங்களுக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளைத் தாமதிக்க வைத்த இந்த எதிர்ப்பு சம்பவம் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் தலையீட்டைத் தொடர்ந்து கைவிடப்பட்டது. இவ்விடயம் தொடர்பாகத் தான் பாரபட்சமற்ற முழுமையான விசாரணையொன்றை மேற்கொள்ளவிருப்பதாக அவர் உறுதியளித்தமையைத் தொடர்ந்து இவ்வெதிர்ப்பு கைவிடப்பட்டது.

சைவர்களுக்குச் சொந்தமான வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவிலுக்கு புத்த சமயத்தவர் உரிமை கோரி வருவதும் அதே வேளை அதை ஒரு புராதன பெளத்த தளமாக தொல்லியல் திணைக்களம் அறிவித்தமையும் இப்பிரச்சினைக்குக் காரணமெனக் கூறப்படுகிறது.