Sri Lanka

இலங்கை: தமிழ்நாடு அரசின் முதல் கட்ட உதவியாக 40,000 தொன் அரிசி, 500 தொன் பால் மா, மருந்துப் பொருட்கள்

மத்திய அரசு அனுமதி

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உடனடியாக அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்குவதற்கு தமிழக அரசு முன்வந்துள்ளது.

நேற்று (மே 03), தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் இந்திய மத்திய அரசின் அனுமதியுடன் மேற்கொள்ளப்படவிருக்கும் இந் நிவாரண உதவித் திட்டத்தின் முதலாவது கட்டமாக 40,000 தொன அரிசி, 500 தொன் பால் மா மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பப்படவுள்ளன எனத் தெரிவித்துள்ளார். அத்தோடு இந் நிவாரண உதவித்திட்டத்தில் பொதுமக்களும் பங்களிப்புகளைச் செய்து உதஹ்வ வேண்டுமெனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு, தூத்துக்குடி துறைமுகம் வழியாக அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்புவதற்கு அனுமதி கேட்டு தமிழக முதல்வர் மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தார். ஆனாலும் இலங்கைத் தமிழர்களுட்பட, அரசியல் ரீதியாக இம் முயற்சி பல கண்டனங்களைப் பெற்றிருந்தது.

இதன் பின்னர் ஏப்ரல் 29 அன்று தமிழக சட்ட சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைத் தீவில் வாழும் அனைத்து மக்களுக்குமான நிவாரண உதவியை உடனடியாக வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. “அயல்நாடான இலங்கையில் மக்கள் எதிர்நோக்கும் இப் பிரச்சினையை வெறும் உள்நாட்டுப் பிரச்சினை என ஒதுக்கிவிட முடியாது. நாங்கள் உதவியைச் செய்யவும் வேண்டும் அதை உடனடியாகச் செய்யவும் வேண்டும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இத் திட்டத்தைப் பிரேரித்திருந்தார்.

தமிழக அரசின் இத் தீர்மானத்தின்மீது கருத்துக்கூறிய இந்திய வெளியுறவுச் செயலாளர் திரு ஜயஷங்கர், இந் நிவாரண உதவி இலங்கையின் முழு மக்களுக்குமானதாகவும் அரசாங்கங்கங்களுக்கிடைய்லானதாகவும் இருந்தால் மட்டுமே இலங்கை அரசு அதை ஏற்றுக்கொள்ளுமெனவும் தெரிவித்திருந்தார். ஏப்ரல் 16 அன்று திரு ஜயஷங்கர் தமிழ்நாடு முதன்மைச் செயலாளருடன் இதுபற்றிப் பேசியபோது மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அனுப்பப்படும் நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசாங்கத்தால் மக்கள் தேவைகளுக்கேற்ப விநியோகிக்கப்படும் என இலங்கை தரப்புத் தெரிவித்ததாக வெளியுறவுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.