Volunteer Orgs.World

இலங்கை தண்டிக்கப்படாதவரை பின்னடைவையே சந்திக்கும் – உலகத் தமிழர் பேரவை

ஊடக அறிக்கை

செப். 14, 2023 – இலண்டன்

செப்டம்பர் 06, 2023 அன்று பிரித்தானிய சனல் – 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விவரணப் படம் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் ராஜபக்ச குடும்பத்திற்கு மிகநெருக்கமான மூத்த அதிகாரிகளின் தூண்டுதலினால் நிகழ்த்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது. இத்தாக்குதல்களின்போது ந45 வெளிநாட்டவர்கள் உட்பட 270 பேர் கொல்லப்பட்டார்கள். நாட்டில் பாதுகாப்பின்மை நிலவுகிறது என்ற பிராந்தியை உருவாக்குவதன் மூலமும் தீவிர இனவெறுப்பைத் தூண்டுவதன் மூலமுமே ராஜபக்சக்கள் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பதே இத்தாக்குதல்களுக்குக் காரணமென ஊகிக்கப்பட்டது.

இவ்வதிர்ச்சி தரும் குற்றச்சாட்டுகள் இலங்கையில் எவருக்குமே அதிர்ச்சியைத் தரப் போவதில்லை என்பதே நிதர்சனம். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் பற்றி மக்களுக்கு காட்டப்பட்ட பிம்பம் இத்தாக்குதல்கள் பற்றி அவர்களிடம் ஒரு புரிதலையோ அல்லது உடன்பாட்டையோ ஏற்படுத்தியிருந்தது. உயிரிழப்புகளும் அதிகரிக்கும் இனப் பிணக்குகளும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கொடுக்கக்கூடிய விலையெனவே அவர்கள் கருதுகின்றனர். நீதித்துறையால் உண்மையையோ நீதியையோ வழங்க முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின்மீது கட்டப்பட்ட கலாச்சாரம் இது.

மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள், கத்தோலிக்க மதத் தலைவர்கள் உட்பட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருக்கிறார்கள். உலகத் தமிழர் பேரவையும் இக்கோரிக்கையை மிகவும் உறுதியுடன் ஆதரிக்கிறது.

இம் முக்கியமான காலத்தில் உலகத் தமிழர் பேரவை ஜூன் 3, 2011 இல் சனல் 4 முன்னர் வெளியிடப்பட்ட “இலங்கையின் கொலை வயல்கள்” (Sri Lanka’s Killing Fields) என்ற படத்தையும் அது ஏற்படுத்திய தாக்கத்தையும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம். கண்கள் கட்டப்பட்ட அம்மணமான தமிழ் ஆண்களும் பெண்களும் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் காணொளி உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமல்லாது ஐ.நா. விசாரணைகளுக்கும் தடைகளுக்கும் காரணமாக அமைந்தது. ஆனாலும் அக் காணொளி பொய்யானது எனவும் அது நாட்டுக்கு எதிரான கபடநோக்குடன் தயாரிக்கப்பட்டது எனவும் கூறி இலங்கை அரசாங்கம் அதைப் புறந்தள்ளியது. போர் வெற்றியில் இன்னும் புளகாங்கிதமடைந்துகொண்டிருக்கும் பெரும்பாலான குடிமக்கள் தமது நாட்டு மக்கள் மீது நடத்தப்பட்ட இக்கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டார்கள்.

இலங்கையில் அது போர்க் குற்றங்களாலென்ன, பொருளாதாரக் குற்றங்களாலென்ன அவை எத்தனை மோசமாக இருந்தாலும் அவற்றுக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை. பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கான மறுக்க முடியாத ஆதாரங்கள் இருந்தும் ஒருவரையாவது குற்றவாளியாகக் கண்டு தண்டிக்க இலங்கைக்கு விருப்பமோ அல்லது தகுதியோ இல்லை.

இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கண்கானிப்புக்குள் கடந்த 14 வருடங்களாக இருந்து வருகிறது. இருந்தும் ஆணையாளர் ஃபோக்கர் ரேர்க்கின் செப். 06, 2023 அறிக்கையின்படி “அது போர்க்குற்றங்களாயிருந்தாலென்ன, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள், ஊழல்கள், அதிகார துச்பிரயோகங்களாயிருந்தாலென்ன இலங்கை தொடர்ந்தும் பொறுப்புக்கூறல்கள் விடயத்தில் பின்தங்கியே இருக்கிறது. நாடு முன்னேற வேண்டுமானால் இவற்றை முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ஆணையாளரின் முழுமையான அறிக்கையையும், இணைத்தலைமை நாடுகளின் அறிக்கையையும், இவ்வுரையாடலின்போதான இந்தியாவின் தலையீட்டையும் உலகத் தமிழர் பேரவை வரவேற்கின்றது. இவை அனைத்தும் நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மீதான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை தொடர்ந்தும் தவறிவருகின்றது என்பதையே படம்போட்டுக் காட்டுகின்றன.ஆணையாளரின் அறிக்கையின் முக்கிய பகுதிகளை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் முற்றாக நிராகரைப்பதென்பது இலங்கைக்குள்ளே பொறுப்புக்கூறல் நடைபெறமுடியுமென்பதற்கான சாத்தியமே இல்லை என்பதையே காட்டுகிறது. இந்நம்பிக்கையீனத்தின் அடிப்படையில் இலங்கையில் நடைபெற்ற கொடுமைகளுக்கான பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்தக்கூடியது ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கீழான இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் (Sri Lanka Accountability Project (SLAP)) மட்ட்மே. இந்த முக்கியமான வேலைத்திட்டம் மீதான ஆணையாளரின் அறிக்கைக்காக நாம் நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.

இவ்வேளையில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வட-கிழக்கில் சில தீவிரவாத பெளத்த பிக்குகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் பெளத்தர்கள் வாழாத இடங்களில் விஹாரைகளைக் கட்டுவது, உள்ளூர் மக்கள் தமது வாழ்வாதார, சமய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவாறு தடுப்பது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி சுட்டிக்காட்ட உலகத்தமிழர் பேரவை விரும்புகிறது. மத நல்லிணக்கத்தை அருகச் செய்யக்கூடிய இந்நடவடிக்கைகளை நிறுத்த அரசாங்கத்தினால் இயலாமல் இருக்கிறது. எதிர்காலத்தில் ஆணையாளர் அலுவலகம் அதிக கவனம் செலுத்தவேண்டிய விடயங்களில் இதுவுமொன்று என நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

முன்னர் நிகழ்ந்தவற்றின் மீது நடவடிக்கை எடுக்க விரும்பாமை மட்டுமல்லாது சர்வதேச விசாரணைகளைத் தடுக்க இலங்கை எடுத்துவரும் கபட முயற்சிகளுக்கு எல்லைகளே இல்லை. அழுத்தங்கள் கொடுக்கப்படும்போது ஆணையங்களை நியமிப்பது காலத்தை இழுத்தடிப்பதற்கென்பது அவற்றிலொன்று. சர்வதேச நீதிமான்கள் ஆணையம் (International Commission of Jurists) மற்றும் எட்டு பிரபல மனித உரிமை அமைப்புகள் இணைந்து செப். 04,2023 இல் வெளியிட்ட அறிக்கையின்படி 2006 முதல் 2021 வரை மனித உரிமை மீறல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணையங்கள் ஒன்றாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் பெற்றுத்தரவில்லை என்பது இந்த விடயத்தில் இலங்கையின் நெடுநாட் போக்கை எடுத்துக்காட்டுவதாக இருக்கின்றது.

சனல் 4 காணொளி மூலம் முன்வைக்கப்பட்ட பலத்த குற்றச்சாட்டுகளை பாராளுமன்ற தெரிவுக்குழு மூலம் ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரிக்க இலங்கை அரசாங்கம் முயல்வது அதன் காலா கால கண்துடைப்பு நடைமுறைகளிலொன்று என்பதில் எங்களுக்குச் சந்தேகமேயில்லை.

2015 ஆம் ஆண்டு ஐ.நா.மநித உரிமைகள் சபையில் வழங்கப்பட்ட நிலைமாறுகால நீதி மீதான வாக்குறுதிகளை நிறைவேற்றாது இலங்கை எப்படி ஏமாற்றியதோ அதே போன்றதொரு நடவடிக்கையே இது. சர்வதேச அழுத்தங்களின் காரணமாக உருவாக்கப்பட்ட இரண்டு அமைப்புக்களும் -காணாமற் போனோர் அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம்- உண்மையைக் கண்டறிவதற்கோ, நீதியை அல்லது இழப்பீட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கோ திராணியற்ற பலவீனாமான அமைப்புக்கள்.

இப் பின்னணியில், உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணையமொன்றை உருவாக்குவதற்கு இலங்கை எடுக்கும் முயற்சிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது உதவியாளர்களுக்கும் ஆறுதலைத் தராது எச்சரிக்கையைத் தருவதாகவே இருக்கிறது. இப்பொறிமுறை வெற்றிபெறப்போவதுமல்லாது 2024 இற்குப் பின்னர் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் கண்காணிப்பிலிருந்து இலங்கை தப்புவதற்கு உதவுவதாக இருப்பதாகவே சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group (ICG)) உட்பட்ட பல மனித உரிமை அமைப்புகள் கவலை கொண்டுள்ளன. செப். 07, 2023 இல் வெளியிடப்பட்ட ச.நெ.குழுவின் அறிக்கையின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் தனது போக்கில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தா விட்டால் உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணையம் வெற்றி காண்பதற்கான சாத்தியமே இல்லை எனக்கூறி அவ்வாணையத்தை சர்வதேசம் அங்கீகரிப்பதற்கு முன்னர் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைப் பட்டியலொன்றையும் வெளியிட்டிருக்கிறது.

இம் மனித உரிமை மைப்புக்களும் ஆணையாளர் அலுவலகமும் தெரிவித்த இக் கருத்துக்களுடன் பேரவை உடன்படுவதுடன் நாட்டில் நிலவும் தண்டனைக்குட்படுத்தப்படாமை என்ற கலாச்சாரத்தை ஒழிக்க தீவிரமான முயற்சிகள் எடுக்கப்படாதவரை எதிர்காலத்தில் இலங்கை மக்கள் மிக மோசமான பின்னடைவையே சந்திக்கப் போகின்றனர்.

சனல் 4 காணொளி மூலம் நாம் உய்த்துணரக்கூடிய முக்கிய செய்தி என்னவென்றால் முதலாவது சனல் 4 காணொளியில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது இலங்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இரண்டாவது காணொளிக்கான அவசியமே இருந்திருக்காது என்பதே. இரண்டாவது காணொளி மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் மோசமான குற்றங்களை இழைப்பதற்கான கள நிலவரங்களை அது உருவாக்கும். தண்டிக்கப்படாமையின் உச்சபட்ச நீசபலம் அதுவேயாகவிருக்கும்.

உள்நாட்டிலும் சர்வதேசங்களிலும் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை கொடுக்கப்படாமை என்பதை இல்லாதொழிக்க இலங்கை மக்களும் அவர்களின் தலைவர்களும் முன்வரவேண்டும் என பேரவை மனதார விரும்புகிறது.

தண்டிக்கப்படாமை என்ற கலாச்சாரத்திலிருந்து முற்றாக மீளும்வரை இலங்கையை முற்றாகத் தனது கண்காணிப்பில் வைத்துக்கொள்ளும் பொறுப்பு சர்வதேச சமூகத்தினதே என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறோம்.

ஊடகத் தொடர்பு: சுரேன் சுரேந்திரன்

தொலைபேசி: +44 (0) 7958 590196

ஸ்கைப்: surendirans

மின்னஞ்சல்: secretary@globaltamilforum.org