NewsSri Lanka

இலங்கை | தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை இல்லை


‘டெய்லி மிரர்’ பேட்டியில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை உள்ளகப் பொரிமுறை ஒன்றினால் மட்டுமே தீர்க்க முடியும் எனவும், அதற்காத் தான் புலம் பெயர் அமைப்புக்களுடன் மேசுவதற்குத் தயாராக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.நா. சந்திப்பின்போது இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோணியோ குத்தெரெஸிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது, இது தொடர்பாக டெய்லி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட புலம் பெயர் அமைப்புக்களுடன் தாம் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாரில்லை எனத் தெரிவித்துள்ளார்.

“இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் நாம் பேச முடியாது. அப்படிப் பேசினால் அது சட்டத்தை மீறுவதாகும். ஆனாலும் இதற்கும் மாற்றுக் கருத்துக்கள் உண்டு. அவர்களுடன் பேசுவது பயனளிக்கும்” என அமைச்சர் பீரிஸ் டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரவை (GTF), பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), கனடிய தமிழர் பேரவை (CTC), அவுஸ்திரேலிய தமிழர் பேரவை (ATC), கனடிய தமிழர் தேசிய அவை (NCCT), தமிழ் இளையோர் அமைப்பு (TYO) மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) ஆகிய அமைப்புக்களை இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு தடை செய்துள்ளது.

“நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக நாம் பரந்துபட்ட கருத்துக்களைக் கொண்ட அமைப்புக்கள், தனிப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். நாம் முன்னெடுத்து வரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு அது பலனளிக்கின்றது” என அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஆனால் அந்த அமைப்புகள் யார் அல்லது தனிப்பட்டவர்கள் யார் என்ற தகவலை அவர் வழங்கவில்லை.

தற்போது COP26 மாநாட்டில் கலந்துகொள்ள வெளிநாடு சென்றிருக்கும் ஜனாதிபதி ராஜபக்ச நாடு திரும்பியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. (டெய்லி மிரர்)