இலங்கை | ஜூன் 21இல் நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு மருத்துவ வல்லுனர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு

ஜூன் 21 அன்று இலங்கை முழுவதும் நடைமுறையிலுள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அரசு எடுத்துள்ள தீர்மானத்துக்கு இலங்கை மருத்துவ வல்லுனர்கள் சங்கம் (Association of Medical Specialists (AMS)) கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது பரவி வரும் இந்திய டெல்ரா திரிபு மிகவும் ஆபத்தானது எனக் காரணம் காட்டி, ஜூன் 21 அன்று கொண்டுவரவிருக்கும் நடமாட்டக் கட்டுபாட்டு நீக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமென இச் சங்கத்தின் தலைவர் டாக்டர் லக்குமார் ஃபெர்ணாண்டோ நேற்று அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

“நாட்டில் பரவிவரும் இந்திய திரிபான டெல்ற்றாவின் விளைவுகள் பற்றித் தமது சங்கத்தின் கோவிட் குழு ஆராய்ந்ததன் பயனாக, நாட்டின் நடமாட்டக் கட்டுப்பாட்டை ஜூன் 28 வரை நீடிக்கும்படி ச்ங்கம் கேட்டுக்கொள்கிறது” என டாக்டர் ஃபெர்ணாண்டோ ‘தி ஐலண்ட்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றின்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்திய திரிபு, இதற்கு முன்னர் வந்த பிரித்தானிய திரிபைவிட, மிக வேகமாகப் பரவும் தன்மையைக் கொண்டது எனவும், தற்போது தெமட்டக்கொடவில் ஆரம்பித்திருக்கும் இத் திரிபின் மூலங்கள் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்வரை நடமாட்டக் கட்டுப்பாட்டைத் தளர்த்த வேண்டாமெனவும் மருத்துவ வல்லுநர்கள் சங்கம் அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

“டெல்ற்றா திரிபை அடையாளம் கண்ட பின்னரும் நடமாட்டக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவது நல்ல விடயமல்ல. ஏப்ரல் 8 (2021) இல் நாங்கள் பிரித்தானிய திரிபை அடையாளம் கண்ட பின்னர் மக்களைப் புதுவருடக் கொண்டாட்டங்களைக் கொண்டாட அனுமதித்திருந்தோம். தற்போது அரசாங்கம் அதே தவற்றைத் திரும்பவும் செய்கிறது” என டாக்டர் ஃபெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

“அடுத்து வரும் இரண்டு நாட்களில், அரசாங்கம் நிபுணர்களைக் கலந்தாலோசித்து சரியான முடிவை எட்ட வேண்டும். அல்லாது போகில், பெறுமதியுள்ள பல உயிர்களை நாம் இழக்க வேண்டி ஏற்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.