Sri Lanka

இலங்கை: ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களைப் பின்போடத் திட்டம்?

பொருளாதாரம் சீரடையும்வரை ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களை இரண்டு வருடங்களுக்குப் பின்போடுவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார வெளியிட்ட கருத்துக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சிறீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவை கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

நேற்று, மே 28, ஊடகவியலாளர் மத்தியில் பேசும்போது “ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை இரண்டு வருடங்களுக்குப் பின்போடவேண்டும். இதற்கான வாக்கெடுப்பைப் பாராளுமன்றத்தில் நடத்தியோ அல்லது தேவையானால் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பை எடுத்தோ முடிவைத் தீர்மானிக்கலாம்” என ரங்கே பண்டார தெரிவித்திருந்தார்.

இது குறித்து பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயவின் பாராளுமன்றப் பிரதிநிதி லக்ஸ்மன் கிரியெல்ல கருத்துத் தெரிவிக்கும்போது “ஆளும் கட்சியினர் தங்களால் தேர்தலில் வெல்ல முடியாது எனக் கண்டதும் மக்கள் சுதந்திரமாக வாக்களித்து தமக்கு விருப்பமான ஆட்சியைத் தெரிந்தெடுக்கும் உரிமையை நாசப்படுத்த முனைகிறார்கள். இது சட்டபூர்வமானதல்ல” எனக் கூறியுள்ளார். அதே வேளை தேர்தல்களைப் பின்போடுவதற்கு அரசியலமைப்பு இடம் கொடுக்காது எனவும் பாராளுமன்றத்தில் இதைத் தாம் இலகுவாகத் தோற்கடித்துவிட முடியுமெனவும் சமாகி ஜன பலவேகய பா.உ. கின்ஸ் நெல்சன் தெரிவித்திருக்கிறார்.

பண்டாரவின் கருத்து பற்றிக் கூறும்போது ஜே.வி.பி. கட்சியின் சட்ட ஆலோசகர் சுனில் வட்டகல, “ரங்கே பண்டார கூறுவது சட்டப்படி சரியானதல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அது முன்வைக்கும் காலக்கிரமத்தில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். அரசாங்கம் அதைச் செய்ய மறுத்தால் தேர்தல் ஆணையம் முன்வந்து அத் தேர்தல்களை நடத்தியாக வேண்டும். தேர்தல்கள் கட்டாயம் நடந்தேயாகும். இது தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பை ஜே.வி.பி. ஆதரிக்காது” எனக் கூறியுள்ளார்.

சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிந் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாமல் ராஜபக்ச பா.உ. “தேர்தல்களைப் பின்போடுவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களைப் பின்போடுவது ஒரு ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாகும்” எனத் தனது சமூக வலைத் தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.