இலங்கை ஜனாதிபதி தேர்தல் | தர்மசங்கடத்தில் தமிழர்கள்
சிவதாசன்
இன்று நண்பர் ராஜவுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு புதிய விடயமொன்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அது ஒரு அப்பட்டமான விடயம் ஆனால் அவர் தந்தது ஒரு புதிய பார்வை, புதிய சிந்தனை.
கோதபாய ராஜபக்ச

கோதபாய ராஜபக்ச அவரது சகோதரர்களைப் போல் ஒரு போதும் கரு ஊதா நிறச் சால்வை அணிவதில்லை, பார்த்திருக்கிறீர்களா? என்றார். தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அவர் தேசிய வெள்ளைச் சட்டை அணிந்ததைப் பார்த்திருக்கிறோம். அது வரை அவர் அணிந்து நாம் பார்த்திருப்பது கோட், ரை, சூட், அரைக் கை சேட் போன்றவைதான். அவர் ஒரு அதி தீவிர சிங்களத் தேசீயவாதியானாலும் அவர் தன் ‘சிங்களத்தை’ உடலில் ஒட்டிக்கொண்டு திரியவில்லை. அது அவரது ஆளுமையை (personality) வெளிக்காட்டுகிறது என்றார் ராஜா.
ரூம் போட்டு யோசிக்க வேண்டிய விடயம், என்றேன்.
கோதா ஒரு வகையில் ஒரு மன நோயாளி (psychopath). அவரிடம் நாம் கெட்ட பழக்கங்கள் எனக் கருதும் எதுவுமில்லை. (சிகரெட், மது, பெண் போன்ற விடயங்களைச் சிலர் கெட்ட பழக்கங்கள் என்று கூறுவார்கள் !) அவர் இலஞ்சம் வாங்குவதில்லை, அவரிடம் யாரும் சிபார்சு கேட்டுப் போகமுடியாது. அரசியல்வாதியாக வர வேண்டுமென்பது கூட அவருடைய ஐடியாவாக இருக்குமோ தெரியாது. அப்படியானால் போர் முடிந்த கையோடு அவர் அதைச் செய்திருக்கலாம். மஹிந்த, பசில் போன்றவர்களது அரசியல் காய் நகர்த்தல்கள் காரணமாக அவர் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். போரை வென்றவரால் தேர்தலையும் வெல்லலாம் என்ற தர்க்கரீதியான முடிவு.

கோதபாயவிற்கு இராணுவத்தினருள் மிகுந்த செல்வாக்கு உண்டு என்பது பலருக்கும் தெரியும். அதற்குக் காரணம் அவருக்கு உதவியவர்களுக்கு அவர் எப்போதும் நன்றியாக இருப்பார் என்கிறார்கள். மஹிந்த ராஜபக்சவும் இப்படியான குணம் கொண்டவர். இதனால் தான் கருணா, பிள்ளையான், டக்ளஸ் போன்றவர்கள் ‘பாவிக்கப்பட்ட பின்’ தூக்கியெறியப்படவில்லை. 600 பொலிஸ்காரரைக் கொன்றமைக்காகக் கருணா சிங்களக் கடும்போக்காளர்களால் அதிகம் வெறுக்கப்படுபவர். விமல் வீரவன்ச போன்றோர் கருணாவுக்குப் பக்கத்தில் உட்கார மறுப்பவர்கள். இராணுவத்தினருக்கு கருணாவைக் கண்ணில் காட்ட முடியாது. அப்படியிருந்தும் கருணா போன்றவர்களைத் தேவை முடிந்ததும் வெட்டி விடவில்லை. ஹிஸ்புல்லாவும் இதே நோக்கத்தில்தான் அவருக்கு ஆதரவளிக்கிறாரோ தெரியாது.
கோதபாய தீவிரமான நாட்டுப்பற்றும், சிங்களப் பற்றும் கொண்டவர். அவரைப் பகைப்பவர் யாராயினும் அவர்கள் ‘காணாமற் போவது’ வழக்கம் என்பது சிங்களவர்களுக்கே தெரியும். பழிவாங்குவதில் அவர் ஒரு நாகம். சரத் பொன்சேகா முதல் லசந்தா விக்கிரமதுங்கா வரை பெரிய பட்டியலே உண்டு. தேசத்துக்காகச் செய்யும் எதுவும் குற்றமல்ல என்னும் கொள்கை அவருடையது. அவ் விடயத்தில் அவர் யார் சொல்லையும் கேட்பதில்லை.

லசந்தா விடயத்தில், அவர் மஹிந்தவின் நெருங்கிய நண்பராக இருந்தும்கூட, கொலை நடந்து முடிந்தது. “என் தம்பி உன்னைக் கொலை செய்வதற்குமுன் எங்காவது ஓடிப்போய்விடு” என்று மஹிந்த லசந்தாவை எச்சரித்ததாகக் கதையொன்றுண்டு. வித்தியாதரன் விடயத்திலும் மஹிந்தவின் தலையீடும் அவர் தப்பியதற்கு ஒரு காரணமென்பர். நாடென்று வரும்போது சகோதரர்களையே போடக் கூடியவர் அவர் என ராஜா கூறுகிறார்.
மக்களிடத்தில், குறிப்பாகக் கிராமப்புறத்து மக்களிடமும், இனத் துவேசம் கொண்ட மக்களிடமும் அவருக்கு நிறைய ஆதரவிருக்கிறது. மகிந்த போல் அழகாகப் பேசவோ, பசிலைப் போல் ஆழமாகச் சிந்திக்கவோ அவரால் முடியாது. அவர் ஒரு செயல் வீரன். அதனால் மக்கள் அவரை நேசிக்கிறார்கள். நாட்டை நிர்வகிக்க அவரால் முடியாது. ஏனைய அரசியல்வாதிகளைப் போல் அவருக்குப் பேரம் பேசத் தெரியாது. அவரது சகோதரர்கள் சுற்றி இருக்கும்வரை அவருக்குப் பிரச்சினை இல்லை. அவர் வென்றால் அது அவரது சகோதரகளுக்காகவும், சிங்கள தேசியவாதிகளுக்குமாகவே இருக்கும்.
அவரால் தமிழருக்கு ஒரு தீர்வைக் கொடுக்க முடியாது. இது சிங்களவரது நாடு. எவரும் எங்கும் வாழலாம் என்பது அவரது கொள்கை. பர்மாவைப் போல் கலப்புக் குடியேற்றங்களைச் செய்து எந்தவொரு பிரதேசத்தையும் எவரும் உரிமை கொண்டாட முடியாமல் செய்வது அவரது நோக்கங்களிலொன்று என முன்னர் பேசிக்கொண்டார்கள்.
தமிழரைப் பொறுத்தவரையில் அவர் ஒரு கொலையாளி. தமிழரின் இரத்தம் இன்னும் காயவில்லை. இத்தனை உயிர்க்கொலைகளுக்குப் பின்னர் பெருந்தன்மையாகவேனும் தமிழருக்கு ஒரு தீர்வைத் தருகிறேன் என்று அவர் சொல்லவில்லை. அவரிடம் இரக்க குணம் இல்லை, அதை எதிர்பார்க்கவும் முடியாது. எனவே தமிழர் தரப்பு அவருக்கு ஆதரவு தருவதால் எதுவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. எனவே சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கத் தமிழர் தரப்பு எடுத்த முடிவு சரி. ஆனால் அதை முழு மனதுடன் அவர்கள் எடுக்கவில்லை.
சஜித் பிரேமதாச
சஜித் பிரேமதாச ரணிலைப் போல தந்திரமானவரல்ல. ரணிலைப் போல அவர் மூளைசாலியுமல்ல. அவர் எடுக்கும் தீர்மானங்களும் அவர் பேசும் பேச்சுக்களைப் போலவே இராஜதந்திரமற்ற, தர்க்கரீதியானவையற்றதாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. அவரும் ஒரு சிறீசேனவாக நடக்கக்கூடிய அறிகுறிகளே தெரிகிறது. இனவாத அரசியலுக்குள் இலகுவாக உள்வாங்கப்படக்கூடிய பலவீனம் அவரிடம் இருக்கிறது.
ரணிலைப் பல தமிழர் நரி என்றும், தந்திரவாதி என்றும், அவர் எதையுமே செய்யப்போவதில்லை என்றும் அடித்துச் சொல்வார்கள். தமிழர் தரப்பு சிங்கள அரசியல்வாதிகளை நம்பியதை விட வெளிநாட்டு (மேற்கு நாட்டு) ராஜதந்திரத்திலும் அரசியல் அழுத்தத்திலும் தான் நம்பிக்கை வைத்திருந்தார்கள். வெளிநாடு பாவிக்கக்கூடிய இலகுவான கருவியாக ரணில் மட்டுமே இருந்தார்.
தமிழர் தரப்பின் முதல் தெரிவு கரு ஜயசூரியா தான். சஜித்தின் பிடிவாதத்தால் அது சாத்தியமற்றுப் போனது. சஜித் தமிழர் தரப்பின் fall back மட்டுமே.
19ம் திருத்தத்திற்குப் பிறகு, புதிய ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்கள் இல்லை. எனவே இவ் வேட்பாளர்கள் வெளியிட்ட விஞ்ஞாபனங்கள் எல்லாம் ஒரு feel good சமாச்சாரங்கள் தான். இவற்றைப் பார்த்து ரணில் கொடுப்பிற்குள் சிரித்துக்கொள்வார் என்று நினைக்கிறேன். இன்னும் ஒரு வருடத்துக்கு அவரிடம் தான் ஆட்சி. அதற்குள் புதிய ஜனாதிபதி ஆட்சியைக் கலைப்பதற்கும் பாராளுமன்றமே அனுமதி கொடுக்க வேண்டும்.
கோதபாய ஜனாதிபதியானால் இதுவரை சுதந்திரமாகத் திரியும் ஜனநாயகம் மீண்டும் சிறைவைக்கப்படும். நீதி ஸ்தாபனங்கள் சுதந்திரமாக இயங்கமுடியாமற் போகலாம். எவரையும் துச்சமாக மதிக்கும் கோதபாய உலக விழுமியங்களுக்கோ, உலக இராணுவங்களுக்கோ மசியப் போகிறவர் அல்ல. பொருளாதாரத் தடை ஒன்றையே மேற்கு கையாளலாம். இதைத் தெரிந்துதான் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 85% உரிமையை சீனா எடுத்துக்கொண்டுள்ளது. இது கோதாவை இன்னும் பலப்படுத்தும்.
தமிழர்களின் கடமை
தற்போதய சூழலில் கோதபாய வெல்வதற்கோ, அல்லது இரண்டாவது பட்சமாக கோதா, சஜித் இருவருமே 50% வாக்குகளைப் பெற முடியாமல் இரண்டாது சுற்றுக்குப் போகக்கூடிய வாய்ப்போ இருக்கலாம். இரண்டாவது சுற்று வாக்குகள் என்று வரும்போது ஜே.வி.பி. யினரின் வாக்குகள் சஜித்துக்குப் போகலாம். இச் சூழலில் சஜித்தை வெற்றிபெற வைக்கும் வாய்ப்புகளுண்டு. இதையுணர்ந்து தமிழர்கள் தமது வாக்குகளைச் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிவாஜிலிங்கம் கோதாவின் சார்பாகவே தேர்தலில் இறங்கியிருக்கிறார். அவரால் தமிழர் வாக்குகள் அதிகம் பிரியாது. ஆனால் சைக்கிள் கோஷ்டியின் தேர்தலைப் பகிஸ்கரிக்கும் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் சில வேளை தமிழர் வாக்குகள் வீணடிக்கப்படலாம்.
கூட்டமைப்பைப் பொறுத்தவரை இதர உதிரிக் கட்சிகளோடு இணங்கிப் போவது கால்த்தின் அவசியம். ஆனால் தங்களது 13 நிபந்தனைகளைக் கோரிக்கைகளாகப் பகிரங்கமாக வைத்தது படு முட்டாள்தனம். அதன் பின்னணியில் இக் கூட்டிலுள்ள சில முட்டாள்கள் காரணமாகவிருப்பினும் இன்றய தென்னிலங்கை இன வெறியர்கள் இன வெறி நெருப்பை ஊதி வளர்த்துக்கொள்வதற்கு வைத்து ஆட்டிக்கொண்டிருக்கும் ஆலவட்டம் இந்த 13 கோரிக்கைதான். இந்த விடயத்தில் முஸ்லிம் தரப்பு காதோடு காது வைத்ததுபோல் தமது பேரத்தைப் பேசி முடித்துவிட்டார்கள். அவர்கள் born வியாபாரிகள். தமிழர்கள்…?
13 ஒரு போதும் பலனளிக்கவில்லை என்பது தமிழருக்கு எப்போதோ தெரிந்திருக்க வேண்டும்.