இலங்கை ஜனாதிபதி தேர்தல்: நாமல் ராஜபக்ச போட்டியிலிருந்து விலகிக்கொள்ளலாம்?
அபயராமய கோவில் பிரதம குரு மஹிந்த ராஜபக்சவிற்கு அழுத்தம்
“நாமல் ராஜபக்ச வேட்பாளர் பட்டியலிலிருந்து தனது பெயரை நீக்கிக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கவேண்டும்” என நாரஹேன்பிட்டிய அபயராமய கோவிலைச் சேர்ந்த வண. தொடம்பகல ராகுல தேரர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அபயராமய கோவிலில் ஞாயிறன்று நடைபெற்ற விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான கூட்டமொன்றில் பேசிய தேரர் மேற்கூரிய கோரிக்கையை விடுத்துள்ளார்.
“நாட்டை ஆள்வதற்குத் தகுதியான ஒரே ஒரு தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. அவருக்கு எதிராக அளிக்கப்படும் வாக்குகள் நாட்டின் பாதுகாப்பு, மதம், மொழி ஆகியவற்றுக்கு எதிராக அளிக்கப்படும் வாக்குகள் எனவே கருதப்படவேண்டியிருக்கும். மகிந்த ராஜபக்ச உண்மையான தேசாபிமானியும், தலைவரும், பொறுப்புள்ள பிரஜையாகவும் இருந்தால் மகன் னாமலது பெயரைப் பட்டியலிலிருந்து நீக்கி மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும் நாட்டைப் பாதுகாக்க முன்வரவேண்டும் ” என அவர் தெரிவித்தார். அபயராமய கோவிலின் பிரதமகுருவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமாகிய வண. முறுத்தெட்டுவ ஆனந்த தேரரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே தனது ஆதரவு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
“நேரம் சரியாக வரும்போது நான் நாமலுக்கு ஆதரவு வழங்குவேன். இது சரியான நேரமில்லை. நாமல் விலகிக்கொள்வதே இப்போதைக்கு சிறந்த வழி” என ராகுல தேரர் மேலும் தெரிவித்தார்.
