Columns

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சங்கறுப்பதெங்கள் குலம்….

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கின்றன. IHP யின் இன்றய கருத்துக் கணிப்பின்படி அனுரகுமார முன்னணியிலும் (48), சஜித் இரண்டாவது நிலையிலும் (25), ரணில் மூன்றாவது நிலையிலும் (20), ரநாமல் நான்காவது நிலையிலும் (5) இருப்பதாகதத் தெரிகிறது. ரணிலின் ஆதரவில், கடந்த சில நாட்களில், பாரிய சரிவு ஏற்பட்டு அனுரவின் ஆதரவு திடீர் வளர்ச்சி கண்டிருக்கிறது. ராஜபக்சக்களின் காவலன் எனக் கருதப்படும் ரணிலின் வெற்றி ராஜபக்சக்களுக்கு மிக மிக அவசியம். இதற்காகவே நாமல் ஆதரவு வாக்குகள் ரணில் பக்கம் சாய்ந்திருந்தன. ஆனால் ரணிலின் வெற்றி நிச்சயமில்லை என அறிந்ததும் ராஜபக்ச முகாமில் குழப்பம் ஆரம்பித்துவிட்டது.

இந்த நிலையில் அனுரவின் ‘வெற்றி’ ராஜபக்சக்களின் ஆடைகளை ஈரமாக்க ஆரம்பித்துவிட்டது. ரணில்-ராஜபக்ச தரப்புகளின் ஊழல் தில்லு முல்லுகளை சட்டத்தின் முன் அம்பலப்படுத்தப்போவதாக அனுர ஏற்கெனவே அறிவித்திருக்கும் நிலையில் ராஜபக்சக்கள் குழப்பமடைந்திருக்கிறார்கள். இறுதி வேளையில் எதுவும் நடக்கலாம். இரவுச் சாராய வண்டிகள் / தரகர்களின் வண்டிகள் சூறாவளிப் பிரயாணங்களை மேற்கொள்ளக்கூடும். இருப்பினும் Plan B யாக நாமல் – சஜித் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படவேண்டியதில்லை. தனது வாக்குச் சீட்டில் இரண்டாவது தெரிவாக சஜித்தைத் தெரியும்படி நாமல் முகாம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் கேள்வி. ஆனால் போகிற போக்கில் இரண்டாவது தேர்வின் தேவையே இல்லாது அனுரகுமார முதலாவது சுற்றிலேயே 50% + 1 ஐ எட்டிவிடவும் கூடும்.


அதே வேளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்ட Bar License களைப் பெற்றோருக்கு அனுர விடுத்திருக்கும் எச்சரிக்கை “நான் ஜனாதிபதியாக வந்தால் அத்தனை லைசென்ஸ்களையும் மீளப்பெற்றுவிடுவேன்” என்பது. இதனால் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் சலம் வடிக்கிறார்கள். பொது வேட்பாளர் விடயமே ரணிலின் ஐடியா என்ற கருத்து ஆரம்பத்திலிருந்தே வலுப்பெற்று வந்திருக்கிறது. 2005 இல் நடைபெற்ற ரணில் பகிஷ்கரிப்பு போன்றதொரு உத்தியை மீளவும் நடைமுறைப்படுத்துவதோடு சஜித் கட்சியிலிருந்து சிலரை உருவி எடுத்து தாம் வெற்றியை நிலைநாட்டலாம் என ரணில்-ராஜபக்ச கூட்டு திட்டமிட்டிருக்கலாம். தற்போது ரணிலின் வெற்றிக்கான சாத்தியம் கைகூடாதுபோனால் பொதுவேட்பாளர் பிளான் பிசு பிசுத்துப் போய்விடும். இதனால் ரணில் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்குத் (கட்டு) தருவதாகச் சொன்ன வாக்குறுதிகள் புஸ்வாணமாகப் போய்விடும். இந்த அச்சத்தில் கட்டுவிலிருக்கும் அங்கத்தவர்கள் பலர் தேர்தல் பிரசாரத்திற்கே போவதில்லை எனவும் கேள்வி. அரசாங்க பிளவுப் பிரிவின் தலைவர் ரணில் யாழ்ப்பாணத்திலிருந்து தலைநகருக்குச் சென்றதும் கட்டமைப்புக்காரர் தத்தம் வீடுகளுக்கு சென்றுவிட்டதாகவும் அரியநேந்திரன் ஓரிரு நண்பர்களுடன் சங்கை ஊதித் திரிவதாகவும் கேள்வி.

இந்நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோர்வால் , இந்திய தூதுவர் ஜா மற்றும் அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ச்சங்க் ஆகியோரும் சூறாவளிச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களது தேர்வு சஜித் என்பதில் சந்தேகமே இல்லை. ரணில் அவர்களுக்கு எப்போதுமே ஒரு முதலாவது தேர்வாக இருந்ததில்லை. கோதாபயவில் இருந்த நம்பிக்கையளவு கூட இவர்களுக்கு ரணிலில் இருந்ததில்லை. எனவே அவர்களது தெரிவு சஜித் தான். இருப்பினும் அனுரவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அனுரவின் வளர்ப்புத் தந்தையான சீனா உலக வல்லரசுப் போட்டிகளில் பிசியாக இருப்பதால் இலங்கையுடன் மினக்கெடும் அளவுக்கு அது ஒரு வர்த்தகப் பங்காளியல்ல. மாலைதீவுக்கும் இதே நிலைதான். எனவே அனுர கொஞ்சக்காலமாவது இந்தியாவின் கட்டுக்குள் நிற்பாரென எதிர்பார்க்கலாம்.

தென்னிலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலென்ன மகாசங்கிகளுக்கு சாமரம் வீசாது எதுவும் நடக்க முடியாது. ஆனானப்பட்ட சிவப்புச் சட்டை அனுரா கூட கூட்டங்களில் பேசுவதற்கு முன் பிக்குகளின் பாதம் தொட்டு வணங்கியே செல்வார். எனவே காவிகளின் ஆதிக்கம் எங்குமே போய்விடாத வரை தமிழர் தரப்பு எதையும் கேட்டுப் பெற்றுவிட முடியாது. தந்தால் வாங்கிக்கொள்ளும் நிலைதான். சஜித் தனது வாக்குறுதியை நிறைவேற்றினால் அது ஒரு பிளஸ். இந்தியாவின் தலையீடு இல்லாமல் எமக்குத் தீர்வு இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. ‘மெளனிக்கப்பட்ட ஆயுதங்கள்’ இனியொரு தடவை சத்தம் எழுப்பும் என்ற நம்பிக்கை இப்போதைக்கு இல்லை. ஆயுதங்களின் மெளனத்தில் சங்கின் ஒலி எவ்வளவு பயன்படுமென்பதும் பாரிய கேள்விக்குறி.

பொது வேட்பாளர் என்ற கருத்துருவாக்கத்தை முன்வைத்து உருவாக்கப்பட்ட கட்டமைப்பு பத்திற்கும் மேற்பட்ட ‘தனியார்’ கட்சிகளும் நூற்றுக்கு மேற்பட்ட ஊர்ச்சங்கங்கங்களும் (சிவில் சொசையெற்றீஸ் என்றும் சொல்லலாம்) கொண்டு ஒற்றுமை பற்றிப் பேசுவது அதீத நகைப்பைத் தருவது. புலம் பெயர் நாடுகளில் கட்டமைப்பின் ‘பிளவுப் பிரிவு’ அதி தீவிரமாகப் பணியாற்றி சமூகங்களைப் பிளந்துதள்ளிக்கொண்டுவருகின்ற நிலையில் ‘ஒற்றுமை’ பற்றி விளாசித் தள்ளுவதும் தென்னிலங்கைக்கு message அனுப்பப்போகிறோம் என்பதும் முட்டாள் தனத்தின் உச்சம்.

இத் தேர்தலின் பின் ‘கட்டமைப்பின்’ Plan B என்ன என அதன் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டேன். அதாவது தமிழ் மக்களின் மிகச் சொற்பமான வாக்குகளே சங்கிற்குக் கிடைத்திருக்கின்றன என்றால் அது எப்படியான ‘ message’ ஐத் தென்னிலங்கைக்கு அனுப்பும்? அல்லது சங்கிற்கு கணிசமான வாக்குகள் கிடைத்து அதன் காரணமாக (2005 இல் போல) தமிழருக்கு சாதகமற்ற ஒரு ஆட்சி தெற்கில் வந்தால் நிலைமை என்ன? பதில் சொல்லச் சிரமப்பட்டார். பாவம், ‘ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்’ என்றொரு பழமொழியை ஞாபகப்படுத்துவதோடு இதை விட்டுவிடுகிறேன்.

இலங்கையின் சுபீட்சத்திற்கு இரண்டு முக்கிய நோய்களுக்கு சிகிச்சைகள் செய்யப்படவேண்டும். ஒன்று ஊழல் மற்றது இனப்பிரச்சினை. ரணில் / ராஜபக்ச ஆட்சி மீண்டும் வராவிட்டால் ஊழலுக்கான சிகிச்சை உடனேயே ஆரம்பிக்கப்படும் என நம்பலாம். சஜித்தின் வெற்றி 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமானால் இனப்பிரச்சினைக்கான சிகிச்சை ஆரம்பிக்க வாய்ப்புண்டு. அனுரவின் ஆட்சி அமையுமானால் ஊழலுக்கான சிகிச்சை ஆரம்பிப்பதோடு சில வேளைகளில் ‘போராடிப் பெற்ற அற்ப சொற்ப வெற்றிகளையாவது’ பெறவும் வாய்ப்புண்டு. எனவே சஜித் வந்தால் நல்லது; அனுர வந்தால் பரவாயில்லை. சங்கு பலமாக ஊதுப்படுமானால் ரணிலுக்கு சிம்மாசனம் கிடைத்து நாடு ICU வில் அனுமதிக்கப்படும்.

வாக்காளரே முடிவு செய்யட்டும்.

(Images: Courtesy – Institure of Health Policy)