ColumnsSri Lanka

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தோற்கப்போவது யார்?

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றி எரிகிறது. சமூகவலைத் தளங்கள் தம் பங்கிற்கு எண்ணைகளை ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். பிரதான அச்சு, ஒலி, ஒளி ஊடகங்கள் பிந்திய செய்திகளை Breaking News எனப் பிரலாபிக்குமளவுக்கு நிலைமை இருக்கிறது. சிற்றூடகப் போராளிகள் வேட்பாளர் பிரச்சாரக்கூட்டங்களின் வெற்றுக் கதிரைகளை எண்ணிக் காட்டுகிறார்கள். பொய்களும் புழுகுகளும் instant fact check பண்ணப்பட்டு அம்பலமேறுகின்றன. இதனால் தோல்வி யாருக்கு என்பது ஏறத்தாழ முடிவாகி விட்டது.

Institute of Health Policy (IHP) என்றொரு தனியார் கருத்துக் கணிப்பு மையம் வேட்பாளரின் தற்போதைய மக்கள் ஆதரவு நிலைப்பாட்டைப் படம் பிடித்துக் காட்டுகிறது. செப்டம்பர் 11 இல் வெளியான கணிப்பின்படி அனுர (38), சஜித் (32), ரணில் (28), நாமல் (4) என்ற விகிதாசாரத்தில் மக்கள் ஆதரவு இருக்கிறது எனக் கூறுகிறது. ஆனால் முடிவைத் தீர்மானிப்பது இந்த இலக்கங்கள் இல்லை.


முதலில் அனுரவின் ஆதரவுக் களத்தைப் பார்ப்போம். நாட்டின் (சிங்கள) இளையோரில் 53% அனுரவிற்கு ஆதரவாக வாக்களிக்கவிருக்கிறார்கள். பெரும்பான்மை சிங்கள் மக்களில் 42% அனுரவிற்கு ஆதரவாக உள்ளார்கள். வசதி படைத்தவர்களில் 38% அனுரவிற்கும், 38% ரணிலுக்கும் ஆதரவாக உள்ளார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 43% ரணிலுக்கு வாக்களிக்கவுள்ளார்கள். ஏழை மக்களில் 40% சஜித்திற்கு வாக்களிக்கப்போவதாகச் சொல்கிறார்கள்.

இதிலிருந்து ஒன்று விளங்குகிறது. அனுரவின் ஜே.வி.பி. கட்சி உருமாற்றம் அடைந்திருக்கிறது. இது ஒரு சந்தர்ப்பவாதமல்ல நிரந்தரமான மாற்றம். இவர்கள் சிவப்புக் கொடியை விட்டு நெடுதூரம் நகர்ந்து விட்டார்கள். தேசிய மக்கள் சக்தி என்ற புனை பெயரில் படித்த இளைஞர்களையும், வசதியான மேல்தட்டு வர்க்கத்தையும் கைக்குள் போட்டுக்கொண்டு பாமரர்களைக் கைவிட்டுவிட்டார்கள் என்பதனையே இக்கருத்துக் கணிப்புக் காட்டுகிறது. கோதாபயவின் 6.9 மில்லியன் வாக்காளர்களின் பெரும் பங்கை அனுரவும் ரணிலும் பங்குபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். 20% ஆதரவில் தொடங்கிய நாமல் ராஜபக்சவின் ஆதரவு 4% த்திற்குக் குறைந்திருக்கிறது என்றால் அதன் பின்னாலுள்ள சூட்சுமம் புரியும். இறுதியில் இந்த 4% மும் ரணிலுக்கே வாக்களித்தால் போட்டி ரணிலுக்கும் அனுரவுக்குமிடையில் தான்.

இன்னுமொரு அவதானிக்கப்படவேண்டிய விடயம் சஜித்தின் பாமர ஆதரவுத் தளம். இவர்களில் பலர் கல்வியறிவு குறைந்தவர்களாக இருக்கலாம். 37 பேர்களைக் கொண்ட வாக்குச்சீட்டில் தவறுகள் இழைக்கப்படின் அவை செல்லுபடியாகாமற் போய்விடலாம். கிராமங்களில் வதியும் இம்மக்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் சென்று வாக்களிக்க வைக்குமளவுக்கு ஆளணி தேவை. இக்காரணங்களினால் சஜித்திற்கு வாக்களிப்போம் என்றவர்களில் எத்தனை பேர் வாக்களிப்பார்கள் என்பது கொஞ்சம் யோசிக்கவேண்டிய ஒன்று.

மாறாக அனுர மற்றும் ரணிலின் ஆதரவாளர்கள் பெரும்பாலும் படித்தவர்களும் வசதியுடையவர்களுமாக இருக்கும் காரணத்தால் இவர்களில் பெரும்பாலானோர் கட்டாயம் வாக்களிப்பார்கள் என்பது மட்டுமல்லாது வாக்குச்சீட்டில் தவறிழைக்கும் சந்தர்ப்பங்களும் குறைவு. இதனால் இவ்விருவருக்கும் வெற்றிக்கான சந்தர்ப்பங்கள் அதிகம். இதை மாற்றவேண்டுமாகில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஏகோபித்த ஆதரவு சஜித்திற்கு இருக்கவேண்டும். உதாரணத்திற்கு 2019 இல் கோதாபயவிற்கு அளிக்கப்பட்ட 6.9 மில்லியன் சிங்கள வாக்குகளையும் மூன்றாகப் பிரித்தால் (33%) வரக்கூடிய 2.3 மில்லியன் வாக்குகளுடன் தமிழ் / முஸ்லிம் மக்களின் வாக்குகளில் 5 இலட்சம் கிடைத்தாலே சஜித்தின் வெற்றி உறுதி செய்யப்படும்.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி வட கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களினதும் முஸ்லிம் மக்களினதும் ஏகோபித்த ஆதரவு சஜித்திற்கே எனக் கூறப்படுகிறது. இதே வேளை புலம்பெயர் தேசங்களிலிருந்து பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவாக பெருமளவு நிதிச் சேகரிப்பு நடைபெறுகிறது என அறிகிறோம். அரியநேத்திரனைக் களமிறக்கியவர்களின் நோக்கம் 2005 இல் நடைபெற்றதைப் போல தமிழ் மக்களின் ‘பகிஷ்கரிப்பின்’ மூலம் ரணிலை வெல்ல வைப்பதே எனவும் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனாலும் வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழ்பேசும் மக்கள் இப்பொறியில் அகப்படமாட்டார்கள் என்றே நம்பலாம்.

இவ்வளவையும் சொல்வதால் எனது ஆதரவு சஜித்திற்கே என்று நீங்கள் யோசித்தால் அதில் தவறொன்றுமில்லை. காரணம் ரணிலுக்கு இதுவரை கிடைத்திருந்த சர்வ வல்லமை கொண்ட நிறைவேற்று ஜனாதிபதி பதவியை வைத்துக்கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினையை அவரால் தீர்த்திருக்க முடியும். ஏற்கெனவே அரசியலமைப்பில் இடம்பெற்றிருக்கும் 13 ஆவது திருத்தத்தை அவர் நடைமுறைப்படுத்தியிருக்கலாம். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவர் அதைச் செய்யவில்லை. அனுரகுமார என்னதான் வெளியில் நாகரிகமானவராகக் காட்டினாலும் அவரது ஜே.வி.பி. பொலிற் பீரோ அவரைச் சிங்கள தேசியத்தால் இறுகக் கட்டி வைத்திருக்கிறது. மகாநாயக்கர்களின் ஆசி இல்லாது அவர் எதையும் செய்யப்போவதில்லை. ஜனாதிபதியாக வந்ததும் அவர் செய்யப்போகும் முதல் வேலை அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்காக உழைப்பதுதான். அதற்கு அவர் பாவிக்கப்போகும் உரம் தமிழர் பிரச்சினையாகவே இருக்கும். யாழ்ப்பாணத்தில் அவரது பேச்சின் தொனி அவரை உரித்துக்காட்டி விட்டது.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனைப் பொறுத்தவரையில் அவரோ அல்லது அவரை முன்தள்ளி இலாபம் சம்பாதிக்க நினைப்பவர்களோ முன்வைக்கும் நியாயம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சொல்லும் ஒரு கூற்று “சின்ன பாம்பானாலும் பெரிய தடியால அடிக்க வேணும்” என்பது. அரியநேத்திரன் என்ற சுள்ளியால் அடித்து தென்னிலங்கைக்கு நாம் எந்தவித செய்தியையும் சொல்லிவிடப் போவதில்லை. கணிசமான வாக்குகளை எடுக்காத பட்சத்தில் தமிழ்த் தேசியத்துக்கு தமிழர் தேசத்திலேயே அங்கீகாரமில்லை நாங்கள் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும் என்ற மனநிலை தென்னிலங்கையின் கெளிமதத்தை மேலும் உசுப்பேத்திவிடக்கூடிய ஆபத்து உண்டு. எனவே பொதுவேட்பாளர் என்ற கருத்துருவாக்கம் மிகவும் ஆபத்தானதொரு நிலைப்பாடு.

சஜித்தைப் பொறுத்தவரை ஒரு விடயம் உண்மை. அவர் அமைச்சராக இருந்தபோது ஏழைகளுக்கு நிறைய வீடுகளைக் கட்டிக்கொடுத்திருந்தார். இப்போது வேட்பாளர் மனுத் தாக்கல் செய்த இறுதி நாளிலும்கூட தனது சொந்தப் பணத்தில் 386 ஆவது Smrat Board ஐ நிறுவி கிராமப் பள்ளிகளில் மாணவர் ஆங்கில , தொழில்நுட்பக் கல்வியைக் கற்க உதவி செய்திருக்கிறார். 40% சிங்கள பாமர மக்கள் இடதுசாரி ஜே.வி.பி. யை விட்டு அவருக்கு ஆதரவளிக்க நிறைய காரணங்களுண்டு. அந்த ஏழைகளுக்காவேனும் அவர் வெல்ல வேண்டும்.

அப்போ இதில் தோற்கப் போவது? வேறு யார்? பொது – வார்ப்பாளர்கள் தான்….