இலங்கை ஜனாதிபதி தேர்தல்: எண்ணத் தெரியாத தலைவர்கள்
மாயமான்
இதுவரை 14 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருக்கிறார்கள். நாம் (தான்) தமிழர் என எண்ணிக்கொண்டிருப்பவர்கள் தமக்குள் பொதுவேட்பாளர் ஒருவரை நியமிப்பதில் சிரமம் கண்டு கால்களுக்கு கீழ் குழிபறிப்பவர்களையும், தலையில் தொப்பி வைப்பவர்களையும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ரணிலுக்கு ஆதரவு தருவதா அல்லது தமது சொந்த வேட்பாளரை நிறுத்துவதா என்னும் விடயத்தில் மொட்டு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பாரிய பிளவில் மஹிந்த / ரணில் பக்கங்கள் தத்தம் ஆதரவாளர்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். வாக்காளத் தமிழ் மக்களோ மேய்ப்பர் எப்பக்கம் தடி காட்டுவார் யாருக்கு வாக்களிப்பது என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் இறுதியில் ரணில் – சஜித் – அனுரகுமார என்ற மும்முமுனைப் போட்டியில் யாரை ஜனாதிபதியாக்குவது என அமெரிக்கா எண்ணிக்கொண்டிருக்குமென நினைக்கிறேன்.
“எங்க விரலடையாளம் வைக்கிறது?” என்பது பரிணாம மாற்றமடைந்து “எங்க புள்ளடி போடிறது” என்ற நிலைமைக்கு வந்து நிற்கிறது ஜனநாயக நடைமுறையின் விழுமியம். பெரும்பாலான ‘எண்ணத் தெரியாதவர்களை’ ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து block vote ஆக மாற்றும் இந்த வித்தையை, நமது கிராமங்கள் முதல் அபிவிருத்தியடைந்த நாடுகளின் மினுமினுக்கும் நகரங்கள் வரையிலுள்ள அரசியல்வாதிகள் செவ்வனே கற்றுக்கொண்டுள்ளார்கள். கனடாவில் கூட ‘கைபிடித்துக் காட்டுவது’ சட்டவிரோதம் என்றபடியால் “அந்த பலட் பேப்பரில மூண்டாவதா இருக்கிறவருக்கு மறக்காமப் போடுங்கோ” எண்டு தேர்தலன்று குறைந்தது மூன்று முறைகளாவது அழைப்பும் / நேரடிச் சந்திப்புமாக மந்தைகள் வாக்களிப்பு நிலையங்கள் வரை வழிநடத்தப்படுவது வழக்கம். பெரும்பாலான வேட்பாளர்களை வாக்காளர்களுக்குத் தெரியாது என்பதும் அவர்கள் பற்றிய அக்கறை ஏதும் பெரும்பாலான மக்களுக்கு இல்லையென்பதுமே இதற்கு முக்கிய காரணம். வாக்காளர்கள் மந்தைகளாக இருக்கவேண்டுமென்பதே அரசியல்வாதிகளின் உள்ளார்ந்த விருப்பமும்கூட. இங்கே block vote என்பதற்கு ‘மந்தை வாக்கு’ எனப் பெயர் சூட்டினால் தயவுசெய்து ஆத்திரப்படவேண்டாம்.
இலங்கை அரசியலிலிலும் இதுவேதான் நடைமுறை. அரசியல்வாதிகள் மந்தைகளை ஊர், சாதி, மதம், மொழி சார்பில் பிரித்து அவர்களுக்கு முகவர்களை / வட்டச்செயலாளர்களை (ஏறியா பொறுப்பாளர்கள்) நியமித்து செயற்படுவது என்பது அரசியல்வாதிகளின் வியாபார தந்திரம். இதனால் அரசியல்வாதி ஒவ்வொரு வீட்டுக்கும் ஏறி இறங்கத் தேவையில்லை. அவர் முக்கிய தலைவர்கள், பணக்காரர், influencers, சமூக ஊடகப் போராளிகளை மட்டும் சந்தித்துவிட்டு மந்தைகளை அவர்களது பொறுப்பாளர்களிடம் “கட்டுக்குள்ள வைச்சிருங்கோ” என்றதுடன் போய்விடுவர். பிரதிபலனாக, இப்படியான பொறுப்பாளர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பத்தினர் நண்பர்களுக்கோ ‘மேலிட’ உதவிகளை அரசியல்வாதி செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் மந்தைகள் அவர் பினால் ஓடிக்கொண்டே இருக்கும். இதைச் சொல்லவந்ததற்குக் காரணம், இந்த மந்தை வாக்கு விவகாரம் எங்களுக்கு மட்டும் உரியதல்ல ஒரு சர்வதேச ஜனநாயக விழுமியம் என்பதற்காக மட்டுமே. வரப்போகும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இதே மந்தை வாக்கு விழுமியம் எப்படியான பங்கை வகிக்கப்போகிறது என்பதை ஆராய்வதே இக்கட்டுரை.
இச்செயற்பாட்டைக் குறிவைத்தே கட்சிகள் ஒவ்வொன்றும் செயற்படுகின்றன. அந்த வகையில் ரணிலின் ஐக்கியதேசியக் கட்சிக்கு முன்னர் இருந்ததுபோல மந்தைக் கட்டமைப்பு இல்லை. எனவே அவர் ஒரு ஒட்டுண்ணி ( parasitic approach) அணுகுமுறையையே எடுக்கவேண்டும். இதுவரை மொட்டு கட்சியின் ஊர்தியில் அவர் அலங்கார வலம் வந்தார். இப்போது அக்கட்சி தனது சொந்த வேட்பாளரை நியமிக்கப்போவதாக மிரட்டிக்கொண்டிருக்கிறது. இதில் இரண்டு மூளைகள் இறங்கி விளையடுவது தெரிகிறது.
மூளையற்ற தம்பி கோதாபயவினால் பெய்ரா தடாகத்தில் கட்சி மூழ்கடிக்கப்பட்டதுடன் இளவரசர் நாமலுக்கு முடிசூட்டும் மகாராணி சிராந்தியின் கனவும் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. இதிலிருந்து இளவரசரையும் கட்சியையும் காப்பாற்றி இடைவேளை வாங்கிக் கொடுத்தது மூளையுள்ள மஹிந்த தான். இந்த அகாலத்தில் அவருக்கு ஆபத்பாந்தவனாக அமெரிக்க கையையும் பிடித்து கை கொடுத்துதவியது மஹிந்தவின் ஆத்மார்த்த நண்பன் ரணில். “இங்க பாரப்பா, இப்ப உடனே உன்ர மகனுக்கு முடி சூட்ட ஏலாது. ரணில் மாமா நாட்டைச் சீராக்கிய பிறகு அவர் ரிட்டையர் பண்ணேக்க மகனுக்கு முடியைச் சூட்டுவம். அப்ப இந்த மந்தையள் எல்லாத்தையும் மறந்திருக்கும்” என மஹிந்தர் அரசி சிராந்தியைச் சமாளித்து வைத்திருந்திருக்கலாம். நாடோ இன்னும் சீராகவில்லை. மந்தைகள் இன்னும் கோதாவின் காலத்தை மறக்கவில்லை என்று அறிந்ததுடன் ரணிலுக்கு இன்னுமொரு 5 வருடம் கொடுத்து இளவரசரைச் சமாளிக்கலாமென எண்ணியிருந்த மஹிந்தருக்கு ரணிலை வெளியே போட்டுவிட்டு இளவரசருக்கு முடிசூட்ட, இளவரசரின் சம்மதத்துடன் சதியொன்று நடப்பது தெரியவந்ததும் மஹிந்தர் உடைந்து போனார். அரசி சிராந்தியின் கடுப்பினால் தளர்ந்துபோன மஹிந்தர் மூஞ்சியை நீட்டிக்கொண்டு போகும் வழி தெரியாமல் இருப்பதைப் பார்த்த ரணில் இனிமேல் மொட்டு கட்சியின் ஆதரவு கிடைக்காது என அறிந்து அவசரம் அவசரமாக மொட்டுக்கட்சி மற்றும் இதர கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை எல்லாம் வளைத்துப்போட்டு எண்ணிக்கை 92 ஐத் தாண்டியதும் நேரடி மோதலுக்கென தயாராகிவிட்டார். இப்போது மஹிந்தர் அரண்மனையில் ஆமை புகுந்த கதை. அவரது மதிநுட்பத்தின்படி இளவரசர் இன்னும் பட்டத்திற்குத் தயாராகவில்லை; மந்தைகளின் குழப்பம் இன்னும் தீரவில்லை; நாட்டின் பொருளாதாரமும் இன்னும் முன்னேறவில்ல. அப்படியிருந்தும் இளவரசர், அரசியின் ஆதரவுடன் ரணிலுக்கு எதிராக கட்சி சார்பில் ஒருவரைக் களமிறக்கத் தீர்மானித்துவிட்டார். ரணிலுக்கு கொடுக்கப்படும் இரண்டாவது தவணையை அவர் ஐ.தே.கட்சியின் புனரமைப்பிற்கே பயன்படுத்துவார்; இதனால் இளவரசரது எதிர்காலம் சூனியமாகப் போகிறது என்பதே நாமல் தரப்பின் எண்ணம். இவ்வுள்வீட்டு போட்டியில் யார் வெற்றி பெற்றது என்று இன்னும் முடிவாகவில்லை எனினும் ஆகஸ்ட் 7ம் திகதி இதற்கொரு முடிவு கட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது அமெரிக்கா இன்னுமொரு தடவை களமிறங்கினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
இக்களப் பரீட்சையில் மஹிந்த – ரணில் அணி வெற்றிபெற்றால் மொட்டு கட்சியின் கட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாகக் களமிறங்கலாம். மாறாக நாமல் அணி வெற்றி பெற்றால் ரணில் கிராமங்கள் தோறும் தனது ஆதரவுக் கட்டமைப்பை மீளவும் உருவாக்கவேண்டும். இதற்கான காலம் போதாது. இதனாலேயே அவர் 92 பா.உறுப்பினர்கள், அமைச்சர்களை வளைத்துப் போட்டிருக்கிறார். அவர்களது ஆதரவாள மந்தை வாக்குகள் ரணிலின் வெற்றியை உறுதியாக்கும்.
மீதி இரண்டு வேட்பாளர்களான சஜித், அனுரகுமார இருவரும் ஏற்கெனவே தத்தமது கட்டமைப்புக்களையும் ஏறியா பொறுப்பாளர்களையும் கொண்டிருப்பவர்கள். எனவே இந்த மந்தை வாக்கு விடயத்தில் அவர்கள் குழப்பமடையத் தேவையில்லை. அனுரகுமார விரும்பினாலும் அவரது தலைமையில் ஆட்சி மந்தைகளின் உண்மையான விருப்பு வெறுப்புகளைப் பிரதிபலிக்குமென எதிர்பார்க்கலாம். ஆனால் சஜித் கட்சியில், ரணிலைப் போலவே அவரும் ஒரு சர்வாதிகாரி என இனம்காணப்பட்டவர். இதனால் இவரின் கீழுள்ள மந்தைக் கட்டமைப்பு பலம்வாய்ந்ததாக இருக்க முடியாது.
இந்த முப்பிரிவுக் களத்தில் ஜனாதிபதி யாரென்பதைத் தமிழரின் அல்லது சிறுபான்மையினரின் வாக்குகள் தான் தீர்மானிக்க முடியும். இவ்வேளையில் 2019 இல் மொட்டு கட்சி எடுத்த “சிங்கள மக்களது வக்குகள் மட்டுமே எங்களுக்குப் போதும்” என்ற நிலைப்பாட்டை யார் எடுத்தாலும் அவரே ஜனாதிபதி என்பதில் எவரும் ஐயம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் இம்மூவரில் எவருமே அதைச் சொல்லத் திராணியற்றவர்கள். இதனால் சிறுபான்மையினரின் வாக்குகள் இம்மூவருக்கும் அவசியமானவை.
இந்நிலையில் தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கவென ஒரு எண்ணத் தெரியாத கூட்டம் தீர்மானித்திருக்கிறது. இரண்டாம் கட்ட வாக்களிப்புக்கான சந்தர்ப்பம் இருக்கும் பட்சத்தில் தமிழ் மந்தை வாக்குகளை ஒன்று சேர்த்து பேரம் பேசுவதற்குப் பாவிக்கலாம். ஆனால் இத் தேர்தலில் அதற்கான வாய்ப்பில்லை. இங்கு ஒரே ஒரு தடவை மட்டுமே வாக்களிக்கும் சந்தர்ப்பமுண்டு. ஆகவே வாக்காளர்கள் தமது முதலாவது தேர்வையும், இரண்டாவது தேர்வையும் ஏக காலத்தில் தெரியப்படுத்த வேண்டும். முதலாவது தேர்தலில் 50% சக 1 கிடைக்காதபோது இரண்டாவது தெரிவு எண்ணப்பட்டு அதன் மூலம் வெற்றியாளர் தெரியப்படுவார். தமிழர் ஒருவர் சுதந்திர பொது வேட்பாளராகப் போட்டியிட்டு வெல்வதற்கான சாத்தியக்கூறு கிடையவே கிடையாது. தமிழருக்கு இத்தனை வாக்குகள் கிடைத்தன என்பதை ஒரு கருத்துக்கணிப்பாக மட்டுமே அது பெற்றுத்தரமுடியும். இரண்டாவது தெரிவொன்றை இவ்வேட்பாளர் தமது ஆதரவாளருக்கு பரிந்துரைக்காவிட்டால் 2005 இல் போல இதுவும் ஒரு பகிஷ்கரிப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படும். இதன் விளைவாக ஜனாதிபதியாக வரும் எவரும் தமிழருக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என நாம் எதிர்பார்க்க முடியாது. இது ஜே.வி.பி. போன்ற கட்சிகளுக்கு ஆதரவாகவே (blessing in disguise) முடியும். மாறாக தமிழ் வேட்பாளர் தனது இரண்டாவது தெரிவாக இப்போதே ஒருவரைப் பரிந்துரைத்தால் அது கூட சிங்கள மக்களை ஒரு பக்க சார்பாகத் தள்ளிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. இதனால் தமிழரசுக் கட்சி எடுத்திருக்கும் நிலைப்பாட்டைப்போல இறுதிவரை எவரையும் பகிரங்கமாக ஆதரிக்காமல் “உங்கள் வாக்குகளைக் கவனமாகப் பாவிக்கவும்” என்ற எச்சரிக்கையுடன் இருந்துவிடுவது நல்லது.
இதுவரை ரணிலினதும் அனுரகுமாரவினதும் வண்டிகளே கண்ணுக்குத் தெரிகின்றன. ‘எண்ணத்’ தெரிந்தவர்கள் சரியான முடிவை எடுப்பார்களென நம்பலாம்.
