Columnsகிருஷ்ணானந்தா

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: அடுத்த ஜனாதிபதி ஒரு தமிழர்?

“கொஞ்சம் சுணங்கிப்போச்சடா கிருசு. வாற வழியில ‘மண்டை’ யிட்டயல்லோ மாட்டிப் போட்டன்.” வடிவேலர் நெளிந்தார். இரண்டு பேருமாக ஒரு தடவை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குப் போய் வருவதாகத் திட்டம் போட்டிருந்தோம். அர்ச்சுனாவின் புலம்பல்களுக்குப் பிறகு ‘உண்மை விளம்பி’ என்றொரு யூ-டியூப் சனலைத் தொடங்கும்படியும் வடிவேலரின்ர மகன் கனடாவில இருந்து காசு அனுப்பப்போவதாகவும் வடிவேலர் திட்டம் தீட்டியிருந்தார்.

“என்னவாம் காய்?. பொதுவேட்பாளராகக் கட்டமைப்பு அவரைக் களமிறக்குமெண்டு நம்புகிறாரோ” என்றேன்


“காய்க்கு ஆசை இருக்கு. ஆனா மற்றவங்கள் விட்டாத்தானே. விக்கி குங்குமப்பொட்டைப் பெரிசா வைக்கத் தொடங்கிவிட்டுது, பாத்தனியே?”

“அது சரி அந்தாள் ஜட்ஜாக இருக்கேக்க இப்பிடியெல்லாம் காவடியாடேல்ல. அவரைக் கூட்டமைப்பில இருந்து பிரிச்சு தனிக் கட்சி தொடங்க வைச்சது கனடாத் தமிழராம். அவரின்ர ஒஃபீஸ் செலவுக்கெண்டு மாசம் ஒரு இலட்சம் அங்க இருந்துதானாம் வந்தது. அவை சொல்லித் தான் இந்த மனிசன் பொட்டும் வீபூதியும் பூசிக் காவடி எடுக்க வெளிக்கிட்டதாம். அது வேற கதை”

“இதை எங்க ‘அருச்சுனா’ சனல்லையே பாத்தனி? சும்மா இப்பிடியெல்லாம் எடுத்து விடுவாங்கள். இதையெல்லாம் நம்பாத”

“முன்னமெண்டா நானும் நம்பியிருக்க மாட்டன். ஆரம்பத்தில அந்தாளில எனக்கும் நல்ல நம்பிக்கை இருந்தது. என்ன இருந்தாலும் இந்த மட்டையும் அந்தக் குட்டையில இருந்துதானே வந்தது”

“அப்ப இந்த பொது வேட்பாளரைத் தமிழ் ஆக்கள் நியமிக்கிறதைப் பற்றி நீ என்ன நினைக்கிற கிருசு, உண்மையைச் சொல்லு. நானும் இங்க உள்ள சனம் மாதிரிக் குழம்பித்தான் நிக்கிறன்?”

“அண்ண, நல்ல கவனமாக் கேளுங்கோ. 20 க்கு மேல வேட்பாளர் இப்பவே வந்திட்டுது ஆனா முக்கியமா மூண்டு பேர் இருக்கினம். ரணில், சஜித், அனுரகுமார. புறோசெஸ் ஒஃப் எலிமினேசன் எண்ட முறையில பாத்தமெண்டா சஜித்தும் அனுரகுமாரவும் அனுபவமில்லாத தலைவர்கள். இவங்களட்ட நாட்டைக் குடுத்தா என்ன செய்வாங்களோ எண்ட அவ நம்பிக்கையை வைச்சுக்கொண்டு ஆபத்தான நேரத்தில வெட்டியோடின ரணிலைத் தான் சனம் விரும்பும். மற்ற இரண்டு பேரிலும் சஜித் ஆளுமை இல்லாதவர், பொது விவாதத்தை எதிர்கொள்ள மறுத்தவர், கட்சியில மற்றவர்களை முன்னுக்கு வர அனுமதிக்கிறதில்ல எண்டு பல குற்றச்சாட்டுகள் அவர் மேல இருக்கு”

“எண்டாலும் கிருசு அவரின்ர கட்சியில கொஞ்சம் திறமையான ஆக்கள் இருக்கினம் தானே?”

“சஜித்திட்ட அவ்வளவு திறமை இருந்தா வெளி நாடுகள் அவரைத் தான் புறொமோட் பண்ணப்பாக்கும். அதனால அவர் அவுட்.”

“அப்ப மனோ கணேசன், ஹக்கீம் ஆக்கள் இது தெரியாமலா அங்க நிக்கினம்?”

“அண்ணை இதுவரை காலமும் ரணில், ராஜபக்சக்களைத் திருப்திப்படுத்திறதுக்காக அங்கால நிண்டது. கருத்துக் கணிப்பில ராஜபக்ச தரப்புக்கு 2-5% தான் ஆதரவு இருக்கு. அவங்களோட நிண்டா ரணில் தோக்கிறது உறுதி. எப்பிடி அவங்களைக் கழட்டலாம் எண்டு அந்தாள் மண்டையை உடைச்சுக்கொண்டிருக்கேக்கை கடவுள் அந்தாளுக்கு வரம் குடுத்துது. ராஜபக்சக்கள் தங்கட இளவரசர் நாமலைப் புறொமோட் பண்ணுறதுக்காக தனிய போறதைத்தான் விரும்பினம். அது ரணிலுக்கு நல்லதாய்ப் போய்ச்சு. இனித்தான் அந்தாளின்ர பொலிரிக்கிங் துடங்கப்போகுது இருந்து பாருங்க”

“நீ சரியாத்தான் கணிச்சிருக்கிற. இதுவரைக்கு அந்தாளின்ர பக்கம் 90 எம்பிக்கள், அமைச்சர்கள் எல்லாரும் வரிசையா நிக்கினமாம். ராஜபக்ச தரப்பில இருந்து 11 பேர் தாவிவிட்டினம். சஜித்தின்ர பக்கமிருந்து மிச்சப்பேர். ராஜபக்ச தரப்பு கழண்டு போனதை எக்ஸ்கியூஸாப் பாவிச்சு முஸ்லிம் தரப்பும் மனோ தரப்பும் இஞ்சால பாயலாம்”

“அப்ப தமிழர் தரப்பு?”

“நீங்க சொல்லிறது தமிழரசுக் கட்சியைத் தானே?”

“இந்த நக்கல் தானே வேண்டாமெண்டிறது”

“வடிவேலர், புலியள் போனதுக்குப் பிறகு தமிழ்ச்சனத்தை தமிழரசுக்கட்சி மட்டும்தானே பிரதிநிதித்துவப்படுத்துது. அதை எங்கட சருகுகள் ஏற்றுக்கொள்ளுதோ இல்லையோ சிங்கள அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ளினம். இப்ப இரண்டு மூண்டு மாதங்களுக்கு முன்னமே சஜித், ரணில், அனுரகுமார ஆக்கள் சுமந்திரன் ஆக்களோட கதைச்சிட்டினம். ஆனா ரணில் ராஜபக்ச தரப்போட போயிருந்தா தமிழரசுக் கட்சி சஜித் அல்லது அநுரவோடதான் போயிருக்கும். இப்ப போட்டி மும்முனையா வந்திட்டுது. சஜித்தின்ர ஆக்களை ரணில் தன்ர பக்கம் இழுத்திடுமெண்டா – அது கட்டாயம் நடக்குமெண்டு நினைக்கிறன் – போட்டி ரணிலுக்கும் அனுரகுமாரவுக்குமிடையில தான். என்ன இருந்தாலும் ஜே.வி.பி. யின்ர கடந்தகால நடவடிக்கைகளை தமிழ் மக்கள் இன்னும் மறக்கேல்ல. அதனால தமிழரசுக் கட்சி “மக்கள் விரும்பினவாறு வாக்களிக்கலாம்” எண்டு சொன்னாலும் அது ரணிலுக்குப் பின்னாலதான் நிக்குமெண்டு எதிர்பார்க்கிறன். இந்த வேளையில சர்வதேசமும் ரணிலோடதான் நிக்கும்”

“ஆனா ஒரு கருத்துக்கணிப்பு ஜே.வி.பி. இற்கு 59% ஆதரவு எண்டு சொல்லுதே”

“அது போன கிழமை. அரகாலயவைச் செய்த முன்னணி சோசலிஸ்ட் கட்சி, அந்த பல்கலைக்கழக மாணவர் கோஷ்டி எல்லாம் இணைஞ்சு தங்கட வேட்பாளர் ஒருத்தரை நிறுத்துகினமாம். அப்பிடியெண்டா ராஜபக்ச கோஷ்டியும் அரகலயா கோஷ்டியும் ஜே.வி.பி. யின்ர கணிசமான வாக்குகளைப் பிரிச்சுப் போடுவாங்கள். கோதா ஆட்சியில பயந்துபோன சிங்கள மக்களுக்கு ஜே.வி.பி. மேல ஒரு பயமும் இருக்கு. அதனால பெரும்பாலான சிங்களச் சனமும் ரணிலுக்குத் தான் வாக்களிக்கும் எண்டு நான் நினைக்கிறன்”

“அப்ப இந்த தமிழ்க் கட்டமைப்பின்ர பொது வேட்பாளர் விசயம்?”

“ஹா…ஹா.ஹா….”

“எட கிருசு அதுக்கேன் இப்பிடி பைத்தியக்காரன் போலச் சிரிக்கிற?”

“அண்ணை அதுகள் வச்சுக்கொண்டு வஞ்ச்சகம் செய்யேல்ல. பாவம். அதில இருக்கிறதுகள் எல்லாத்துக்கும் அரை மூளை எண்டுதான் சொல்ல வேணும்”

“ஏன், அவங்கள் சொல்லிறதிலயும் ஞாயம் இருக்குத் தானே?”

“அண்ணை ஏன் இவங்கள் ‘பொது வேட்பாளர்’ எண்டு கத்திறாங்கள் தெரியுமோ?”

“இல்ல சொல்லு”

“அண்ணை 2005 இல புலியள் காசை வாங்கிக்கொண்டு ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினவை எண்டொரு குற்றச்சாட்டு கேள்விப்பட்டனீங்களோ?”

“எட அதுக்கேன்ரா இப்பிடிச் சத்தம் போட்டுப் பேசிற?” வடிவேலர் அங்காலும் இங்காலும் பார்த்துவிட்டு விரலை வாயில் வைத்துக் கெஞ்சினார்.

“2024 இலும் அப்பிடியொரு முயற்சி தான் நடக்குது. இதில புரோக்கரா இருக்கிற ஒரு ஆளுக்கு வடமாகாண கவர்னர் பதவி கிடைக்கலாம்”

“அதில கன புரோக்கர்மார் இருக்கிறமாதிரியெல்லோ தெரியுது”

“கொஞ்சம் பொறுங்கோ. தேர்தலுக்கு முதல்ல அந்த கட்டமைப்பு உடைஞ்சு இந்த இரகசியம் வெளியில வரும்”

“சரி அவங்கள் சொல்லிறதுபோல தமிழ் மக்கள் எல்லாரும் தமிழ் வேட்பாளருக்கு வாக்குப் போட்டால், மக்கள் தங்கட சுய நிர்ணய உரிமைக்கான றெஃபெறெண்டமாக இதை நாங்க அவங்களுக்கும் சர்வதேசங்களுக்கும் காட்டேலாதா?”

“1977 இல வட்டுக்கோட்டைப் பிரகடனத்தால காட்டினதுக்கு சிங்களவங்களோ அல்லது சர்வதேசமோ என்னத்தைப் புடுங்கினது?. கொஞ்சம் சொல்லுங்கோ. 2005 இல ரணிலைப் பகிஷ்கரிச்சுக் காட்டினதும் ஒரு றெஃபெறெண்டம் தான். 2019 இல தமிழ் மக்களின்ர வாக்குகள் இல்லாமலேயே நான் வெண்டு காட்டிறன் எண்டு கோதாபய 6.9 மில்லியன் வாக்குகளோட மண்டேற் எடுத்ததும் ஒரு றெஃபெறெண்டம் தான். இப்ப தமிழ் மக்களின்ர வாக்குகள் இல்லாம ரணிலோ அல்லது அனுரகுமாரவோ ஜனாதிபதியாக வந்தால் அவங்களும் கோதாபயவின்ர வாய்ப்பாட்டையே பாட தமிழர் நாங்க வசதி செய்து குடுக்கப்போறம்”

“அப்ப இந்த கட்டமைப்பில இருக்கிற ஆக்களுக்கு இது விளங்கேல்லயா?”

“அவங்கள் பாவம் அண்ணை. சம்பந்தன் ஐயாவோட த.தே.கூட்டமைப்பு கட்டையேறினதோட அவங்கள் சுமந்திரனை விட்டிறதுக்கெண்டு உருவாக்கினதுதான் தமிழ்த் தேசியக் கட்டமைப்பு. இதில இருக்கிறவங்கள் மாகாண அரசு, பிரதேச சபையளையே ஒழுங்கா நடத்தத் தெரியாதவங்கள் கட்டமைப்பு வைச்சு தமிழ் ஆக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போயினமாம். சும்மா விட்டிட்டு வேலையைப் பாருங்கோ அண்ணை”

“அது சரி நம்ம யூ-ரியூப் சனலைப் பார்க்கிறவங்களின்ர எண்ணிக்கை இப்பவே 4 மில்லியன்”

“சனலே இன்னும் தொடங்கேல்ல அதுக்குள்ள”

“என்னவோ என்ர மகனுக்கு ஒரு சீனனைத் தெரியும் அவனுக்கு காசைக் குடுத்து ஏதோ திருகுதாளம் பண்ணி பார்வையாளரைக் கூட்டியிட்டான். இப்ப 4 மில்லியனோட சனல் ரெடி.இனி சிவப்பு மஞ்சளில நல்ல கவர்ச்சியான ரைற்றில் வேணும். தெரிஞ்சா சொல்லு”

“இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஒரு தமிழரா?”

“அப்ப ஆரின்ர படத்தைப் போடிறது?”

“மூண்டு வீபூதிக்குறியும் ஒரு குங்குமப்பொட்டும் மட்டும் இப்ப போதும்”

“நீதான்ரா உண்மையான மண்டயன். சரி, ஜனாதிபதி எலெக்சன் எண்டு வந்தா தமிழ் ஆக்கள் எப்பிடி வாக்குப் போடவேணும் எண்டு நீ சொல்லிற. கள்ளுத் தவறணையில இக்கணம் பிச்செடுக்கப் போறாங்கள்”

“சுமந்திரன் சொல்லுமட்டும் பொறுங்கோ”

“இப்பத்தான் எலும்புகள் ஒரு மாதிரி ஒட்டியிருக்குது. அதுக்குள்ள எனக்கு அடிவாங்கித்தாற பிளான் போல” வடிவேலர் கிளம்பினார்.