Columns

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: மெளனிக்கப்பட்ட சங்கு

விதி வலியது, அதை யாராலும் தடுக்க முடியாது. ஒரு காலத்தில் முப்படைகளின் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, தேடியழிக்கப்பட்டு காடுகளில் கரந்துறைந்து வாழ்ந்த ஒரு குழுவின் தலைவர்; அவரது கட்டளைக்காகக் காத்திருக்கும் அதே முப்படைகளின் தலைவர்கள். இது தென்னாசியாவிற்குப் புதியது. இந்த 180 பாகை மாற்றத்திற்குக் காரணமான அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள். இதே போன்றொரு நிலைமை ஒரு காலத்தில் தமிழர் தரப்பிற்கும் சாத்தியமாகவிருந்தது என்பது வரலாற்றின் துயரமான பதிவுகளில் ஒன்று.

செப்டம்பர் 22 நடந்து முடிந்த தேர்தல் பல விடயங்களை வரலாற்றில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. வடுக்கள் நிரந்தரமானவையானாலும் வலிகள் ஆற்றுப்படக் கூடியவை என்பது இங்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 1971 முதல் 1989 வரை இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டங்களை நடத்தி தோற்றுப்போன ஜே.வி.பி. ஜனநாயக வழிக்குத் திரும்பி இப்போது ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்த இரண்டு போர்களிலும் முதலாவது (1971) போராட்டம் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வர்க்கப் போராட்டம். இரண்டாவது (1987-1989) ‘இந்திய ஆக்கிரமிப்புக்கு’ எதிராக எழுந்த வெறுப்புப் போராட்டம். முதலாவதில் அறம், தார்மீகம் இருந்தது. இரண்டாவதில் அறத்துக்கு இடமில்லை. விளைவு ஒரு இலட்சம் பேரின் அழிவு. இந்த வடு தென்னிலங்கை மக்களால் இன்றும் சுமக்கப்பட்டு வருவது. ஆனால் இது ஏற்படுத்திய வலிக்கு இராஜபக்ச கூட்டம் ஏற்படுத்திய வறுமை நிவாரணம் தேடிக்கொடுத்தமையின் விளைவே இன்றய ஆட்சி மாற்றம். இது நிரந்தரமாக்குவதும் தற்காலிகமாக்குவதும் ஜே.வி.பி. கைகளில் தான் இருக்கிறது.


இத் தேர்தல் கற்றுத் தந்த பாடங்கள் பல. அவற்றில் முக்கியமானவை: (1) தமிழ்த் தேசியத்தின் அவமானம். (2). கபடதாரிகள் தோலுரிக்கப்படுவார்கள் (3). அரசியலில் கற்றோரின் பங்கு அவசியம்.

இத் தேர்தலில் அரியநேந்திரனை முன் தள்ளி வேடிக்கை பார்த்தது ‘தேசமாகச் சிந்தித்த’ ஒரு கூட்டம். பாவம் குத்துச்சண்டை அரங்கில் வலுக்கட்டாயமாகத் தள்ளிவிடப்பட்ட ஒரு நோஞ்சானின் நிலைமை. எதிரி எந்தெந்த உத்திகளையெல்லாம் எப்படி எப்படிப் பாவிக்கிறான் என்று பரீட்சிப்பதற்காக களத்தில் இறக்கப்பட்ட ஒருவராகவே இங்கு அரியநேந்திரன் பார்க்கப்படுகிறார். களத்தில் ஏறுமட்டும் கைதட்டி ஆரவாரித்த கூட்டம் முதலாவது ரவுண்ட் ஆரம்பிப்பதற்கு முன்னரே ‘வேகமாகச் சிந்தித்து’ கழன்றுவிட்டிருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது. ‘தேசமாகச் சிந்திக்க’ வெளிக்கிட்டு ‘தேசமாக அடிவாங்கிக்’ காட்டிய அவிவேக பூரண குருக்களின் ஆசீர்வாதத்தோடு அரங்கேறிய தமிழரின் காதை வரலாற்றில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டு விட்டது. தமிழ்த் தேசியக் காப்பாளர்களை ஈழ மக்கள் விரட்டியடித்திருக்கிறார்கள். இவர்களிடமிருந்து தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றி re-brand செய்யாவிட்டால் விடுதலை மறவர்களும் போராட்டமும் மறக்கப்பட்டுவிடும் ஆபத்துண்டு. அபிவிருத்தி அரசியலைக் காட்டி அமைச்சுப் பதவிகளை எடுக்காது செருப்பு, முட்டை, அவதூறு, தூஷண மாலைகளை வாங்கிக்கொண்டும் இன்னும் அசையாது சுயநிர்ணய அரசியலை மட்டுமே நடத்தி வரும் தமிழரசுக் கட்சியே தமது மேய்ப்பர்களெனத் தமிழர்கள் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

இதில் ‘அதி மேதாவிகள்’ என்ற பிராண்ட் தோல்களைப் போர்த்திக்கொண்டு பல பிராணிகள் வலம் வந்தன. இதில் தலைமைப் பிராணி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இவரை யார் முன் தள்ளி விட்டார்கள்? அல்லது யாருக்காகக் களம் இறங்கினார்? என்பதற்கு விடை காணச் சற்றே தாமதமாகும். ஆரம்பத்திலிருந்தே அனுரா என்ற சுனாமி புறப்பட்டுவிட்டது என்பதைத் தெரிந்திருந்தும் சஜித் பிரேமதாச என்ற எதிரியை வீழ்த்துவதற்கென்பதற்காக மட்டுமே அவர் களமிறங்கியிருந்தார். ஆட்சி அனுரா கைகளுக்குப் போகக்கூடாது என்ற உண்மையான நோக்கம் இருந்திருந்தால் சஜித்திற்கு விட்டுக்கொடுத்திருக்கலாம். ரணிலின் பின்னணியில் இந்தியாவோ, அமெரிக்காவோ இருந்ததற்கான தடயங்கள் இல்லை. எனவே, தான் தோற்றாலும் பரவாயில்லை தன் எதிரியான சஜித் தோற்றால் போதும் என்பதற்காகவே அவர் களமிறங்கியிருந்தார். வடக்கு கிழக்கில் அரியநேந்திரனையும் மலையகத்தில் திலகரையும் இறக்கி வாக்குகளைப் பிரிக்க ரணில் வைத்த பொறியில் அவரே மாட்டிக்கொண்டதன் மூலம் அவரின் கபடத் தோல் உரிக்கப்பட்டிருக்கிறது. அவரின் பின்னால் தமிழர்களுட்படப் பல கபடதாரிகள் வரிசையில் நிற்கிறார்கள். ஊதிகெடுத்த சங்குகள் மெள்னம் காக்கின்றன.

எந்த வகைப் போராட்டமாயினும் கற்றோரின் பங்கு முக்கியமானது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் உள்ளரங்குகளில் கற்றோருக்கான இடம் போதியளவு இருக்கவில்லை என்பது பலராலும் சுட்டிக் காட்டப்படுவது. ஆரம்ப காலங்களில் பல்கலைக்கழகங்களைத் துறந்து போராடப் புறப்பட்ட பலரது முடிவுகள் துன்பகரமானவை. கல்விக்கும் பலவீனத்திற்கும் முடிச்சுப் போட்டு பலரைப் புறந்தள்ளி வைத்தது தமிழ்த் தேசியம். துர்ப்பாக்கியமாக இன்றுவரை அது தொடர்கிறது. நேர்மையான போராளியாகவிருந்த கற்றறிவுள்ள லயனல் போபகே போன்றவர்களை ஓரம் கட்டிய ஜே.வி.பி. இப்போது அவர் போன்றவர்களை மீண்டும் உள்வாங்கி ஒரு கற்றோர் கூடமாக வலம் வருகிறது. இவர்களது கூட்டங்களில் ஜே.வி.பி. யின் கொடிகளோ, பதாகைகளோ அல்லது தலைவர் விஜேவீரவின் பதாகைகளோ காணப்படுவது அரிது. முட்டையெறி, செருப்பெறி வீரர்களை இக்கூட்டங்களில் காணமுடியாது.

1968 இல் வறிய குடும்பத்தில் பிறந்து 1987 இல் ஜே.வி.பி. யில் தொண்டராக இணைந்து இன்று ஜனாதிபதியாக ஆகியுள்ள அனுரா 1965 இலிருந்து ஜே.வி.பி. கண்ட தலைவர்களில் மிகச் சிறந்த தலைவர் எனப் பெயர் பெற்றவர். 1971 இல் தொடுக்கப்பட்ட ஜே.வி.பி. யின் போர், ரோஹண விஜேவீரவை வளர்த்துவிட்ட சிறிமாவோ அரசுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டது. அதில் அவர் சிறைபிடிக்கப்பட்டு இயக்கமும் தடைசெய்யப்பட்டது. முதலாவது ஆயுதப் போராட்டம் தோல்வி கண்ட பின்னர் சிறை வைக்கப்படிருந்த அதன் தலைவர் ரோஹண விஜேவீராவை விடுதலை செய்து அரசியலுக்குத் திரும்ப வழி செய்தது யூ.என்.பி. அரசு. கைதுசெய்யப்பட்டிருந்த விஜேவீராவை ஜனாதிபதி பிரேமதாச விடுதலை செய்து அடுத்து வந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்தார். ஆனாலும் அவரது கைகள் மீண்டும் ஆயுதங்களையே நாடின.

1987இல் தொடங்கிய இரண்டாம் ஜே.வி.பி. கெரில்லாப் போர் உண்மையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான போரல்ல. அது முற்று முழுதாக இந்திய ஆதிக்கத்துக்கு எதிரான போர். இப்போரில் ஜே.வி.பி., ஜனாதிபதி பிரேமதாசவின் ஆதரவுடன் விடுதலைப் புலிகளுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராகப் போரிட்டது. இதன் பின்னர் பிரேமதாச அரசுடனே மோதப் புறப்பட்டு பிரேமதாசவினாலேயே விஜேவீர கொல்லப்பட்டார். இதுவரை இறுக்கமான போராட்ட அமைப்பாக இருந்த ஜே.வி.பி. யில் தளர்ச்சி ஏற்பட்டு அமைப்பு உடைந்து பல உறுப்பினர்கள் சந்திரிகா மற்றும் ராஜபக்ச அரசுகளுடன் இணைந்து சுயநல அரசியலுடன் சங்கமமாகினர். அப்போதும் அமைப்பின் விசுவாகியாகத் தொடர்ந்தும் இருந்த அனுரா 2000 ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராகிப் பின்னர் ஜே.வி.பி. யின் தலைவராகவும் ஆகினார். இக்கற்றறிந்த பாடங்கள் ஜே.வி.பி. யை அரசியலுக்குள் தள்ளி விட்டன. எப்படியாயினும் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை ஜே.வி.பி. தனது சிங்கள பெளத்த மேலாதிக்க சிந்தனையைக் கைவிடவில்லை. என்னதான் விசுவாசியாக இருந்தாலும் ஒருவர் விரும்பியவுடன் அங்கத்தவராகிவிட முடியாத அளவுக்கு அது இறுக்கமான, இரகசியமானதொரு அமைப்பு. தேர்தல் அரசியலுக்காகவும் 1987-89 காலப்பகுதியில் அதற்கு பொதுமக்களிடம் ஏற்பட்ட வெறுப்பைக் களைவதற்காகவும் மட்டுமே அது மேலும் சில விசுவாசிகளை இணைத்து என்.பி.பி. என முகம் மாற்றிக்கொண்டது.

இப்பின்னணியில் அனுரவின் ஆட்சி எப்படியிருக்கப்போகிறது என்பதை ஊகிப்பது சிரமம் தான். அது தனது உண்மையான முகத்தைக் காட்டுவதற்கு சில மாதங்கள் , வருடங்கள் எடுக்கலாம். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்களில் அனுர தன்னைக் காட்சிப்படுத்திவரும் முறை இயற்கையானதா அல்லது பின்புலக் கட்டுப்பாடு கொண்டதா எனத் தெரியாது. முகமனுக்குத் தானும் அவர் ஆங்கிலத்திலேயோ அல்லது தமிழிலேயோ ஓரிரு வார்த்தைகளைச் சொல்வதைக்கூடத் தவிர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. சகல இனங்களுக்கும் மதங்களுக்கும் மொழிகளுக்கும் சமத்துவ பங்கு அளிக்கப்படும் என்று அவர் பேசுகின்ற அளவுக்கு போஸ்டர்கள், பதாகைகள், அறிவிப்புகளில் சமத்துவம் பேணப்படுவதில்லை. சிங்களம் பெரிய எழுத்துக்களிலும் தமிழும் ஆங்கிலமும் சிறிய எழுத்துக்களிலும் இருப்பது தற்செயலானதல்ல, அது அவர்களது மனநிலையின் வெளிப்பாடு. இதை ஒரு அற்ப (petty) விடயமாகக் கடந்துபோய்விட முடியாது. இது சிங்கள பெளத்த தேசியத்தைத் திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சியோ எனச் சந்தேகப்படவேண்டியிருக்கிறது. இதனால் அனுரவின் வாக்குறுதிகளை நம்புவதற்கு சங்கடமாகவிருக்கிறது.

இருப்பினும் இந்த தடவை அனுரவின் வரவை நான் வரவேற்கிறேன். உலக நீதிமன்றங்களில் நிறுத்தப்படவேண்டிய ராஜபக்சக்களையும் அவர்களது பரிவாரங்களையும் அனுர அரசு, முதற் கட்டமாக காலி முகத்திடலில் நிறுத்தி அவமானப் படுத்தினால் அது சில ஆன்மாக்களையாவது திருப்திப்படுத்தும். தமிழர் நில அபகரிப்பு, நெடுநாட் கைதிகள் விடுதலை போன்ற விடயங்களில் தமிழர்களைத் திருப்திப்படுத்தும் செயற்பாடுகள் எதுவும் அனுர அரசிடமிருந்து கிடைக்குமானால் அது தமிழரின் தற்காலிக சுவாசத்திற்கு வழிவகுக்கும். மகிந்த அரசையோ அல்லது மகிந்தவின் proxy யான ரணில் அரசையோ கொஞ்சக் காலத்துக்காவது வீட்டுக்கு அனுப்பி தமிழருக்கு இடைவேளை வாங்கித் தந்தமைக்காக அனுரவுக்கு நன்றி.

என்ன இருந்தாலும் கடந்த ஐந்து வருடங்களில் ஜே.வி.பி. 4% த்திலிருந்து 40% வரை வளர்ந்தது தமிழருக்கு எடுக்கப்பட்ட வகுப்பு. சிவப்புக் கொடியின் நிற மாற்றம், தீவிரக் கொள்கை மாற்றம், இந்திய நட்புறவுக் கொள்கையில் மாற்றம், கற்றோர், இளையோரை உள்வாங்கியதில் மாற்றம் எனப் பல பரிமாணங்களில் உருமாற்றம் பெற்ற ஜே.வி.பி. நகராது நிற்கும் தமிழ்த் தேசியத்திற்கு ஒரு திசை காட்டியாக இருந்திருக்கிறது என்பதே எனது கருத்து.

இன்னுமொரு விடயம், புலம் பெயர்ந்தோரின் பங்கு. இத் தேர்தலில் ஜே.வி.பி. யிற்கு ஆதரவாக வாக்களிக்கவும் பிரசாரங்களில் பங்களிக்கவுமென சுமார் 50,000 ஜே.வி.பி. ஆதரவாளர்கள் இலங்கை சென்றிருந்ததாக அறிந்தேன். தலைவர் அனுரகுமார வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செய்தபோது பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆதரவளித்திருந்தனர். கட்சியின் தேர்தல் செலவுகளையும் அவர்களே பொறுப்பேற்றிருந்தனர் எனக் கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இனத்துவேஷம் கொண்டவர்கள் எனக் கருதப்படுபவர்கள். புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவு ஈழவிடுதலைக்கு இருந்தது போலவே தான் சிங்களவர்களின் ஆதரவும். அனுர அரசின் கொள்கை வகுப்பு இவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இருக்கமாட்டாது என நம்புவோம்.

உலகு பல்வேறு அரங்குகளில் நடைபெறும் கொலை நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கையில் இலங்கை இப்போதைக்கு அதன் பேசுபொருளே அல்ல. இந்திய, சீன ஆதிக்கப்போட்டிகளை ‘பிறிக்ஸ்’ நிறுத்தி வைத்திருப்பதால் இலங்கைக்கு ஒரு தற்காலிக விடுமுறை கிடைத்திருக்கிறது. இவ்விடுமுறையை இலங்கை புத்தி சுவாதீனத்தோடு அணுகி தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும். வயிறுகள் நிறையும்போது மனங்களும் நிறைய வாய்ப்புண்டு. எதிர்பார்த்த அளவுக்கு அன்னிய தலையீடுகள் இத் தேர்தலில் இருக்கவில்லை என்பது ஆசுவாசம் தருவது.

அக்டோபர் 1ம் திகதி வேட்பாளர் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நவம்பரில் பாராளுமன்றத் தேர்தல்களை வைக்க அனுர அரசு தயாராகிறது எனக் கேள்வி. அனுர அலையின் இரைச்சல் இன்னும் குறையாமலிருக்கும்போதே பாராளுமன்றப் படகையும் கரை சேர்க்க ஜே.வி.பி. முயல்வது இயல்பானதே. என்ன இருந்தாலும் விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை மீட்டுத் தந்த தேசபந்துக்கள் ராஜபக்சக்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் சிங்கள பெளத்த தேசியம் விருப்பம் கொள்ளாது. ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் அவர்களை ஓரம்கட்டுவதில் அது பின்னிற்காது. எனவே ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தும் எண்ணத்தோடு ஜே.வி.பி. மிகவும் சமயோசிதமாகச் செயற்படுகிறது போலத் தெரிகிறது. இத் தேர்தலில் தமிழர் தரப்பின் வாக்குகள் சிதறிப் போகாமல் ஒருமித்த கருத்தைத் தெரிவிப்பது நல்லது ஆனால் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை ஒருபோதும் இல்லை. வடக்கு, கிழக்கு, மலையகம், புலம் பெயர்ந்தோர் என நான்கு பிரிவுகள்; இவற்றுக்குள் பல கட்சிகள், கட்சிகளுக்குள் கட்சிகள். ஜே.வி.பி. அரசு பாராளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை நிறுத்திவிடுமென்ற அச்சத்தில் பலர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிப் போகவும் கூடும். புலம் பெயர்ந்தோர் வரிசைகளில் நின்று toilet paper வாங்கச் சிரமப்பட்டு தேடிய சம்பாத்தியத்தை வீணே செலவழிக்காது பல வீடுகளில் முதலீடு செய்வதன் மூலம் ஈழத்தில் அரசியல்வாதிகள் கொத்தணிக்குண்டு போல் சிதறுவதையும், சிதறடிப்பதையும் வெகுவாகக் குறைத்துக்கொள்ளலாம். யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் bar license விற்கும் கடைகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாகக் கேள்வி.

விதி வலியது, அதை யாரும் தடுக்க முடியாது…