OpinionSri Lankaசிவதாசன்

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் | தோற்கப் போவது யார்?

சிவதாசன்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான நேரடி வாக்களிப்பு , நவம்பர் 16, 2019, சனி காலை 7 மணிக்கு – இன்னும் சில மணித்தியாலங்களில் – ஆரம்பமாகிறது. ஏறத்தாள 16 மில்லியன் வாக்குகளை 35 வேட்பாளர்கள் பங்கிடப் போகிறார்கள். அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 வீதத்துக்கு மேல் யார் அதிகமான வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

வாக்குச் சீட்டு 26 அங்குலம் நீளமானது. முதலாவது, இரண்டாவது, மூன்றாவது தெரிவுகள் என்று ஒருவர் 3 பேருக்கு வாக்களிக்கலாம்.

முதலாவது சுற்றில் தனியொருவர் 50 வீதத்தைப் பெறாதபோது முதலாவததாகவும், இரண்டாவதாகவும் நிலைகளில் உள்ள வேட்பாளர்களது பெயர்களில் எது அதிகமாக இரண்டாவது தெரிவாகவும் இருக்கிறதோ அவ் வாக்குகளுடன் சேர்க்கப்பட்டு முதலிருவது மொத்த வாக்குகள் ஒப்பிடப்படும். இதன் மூலம் 50 வீதம் பெறப்படாத படசத்தில் மூன்றாவது சுற்றுக்குப் போகும். அதில் மூன்றாவது தெரிவிலுள்ள வாக்குகள் சேர்க்கப்பட்டு நடைமுறை மீளவும் செயற்படுத்தபடும்.

படம்: டெய்லி ஃபைனான்சியல் ரைம்ஸ்

மேற்கு நாடுகள் போல் தேர்தலுக்கு முன்பான கருத்துக் கணிப்புகளை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதியளிக்கவில்லை. இருப்பினும் உள்நாட்டு, வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தமது தேவைக்காக மக்களின் மனநிலையை நாடிபிடித்துப் பார்த்திருக்கின்றன. அதில் முனணியில் இருக்கும் கோதபாயவுக்கும் சஜித்திற்கும் கடும் போட்டி நிலவுவதாகவும், அநேகமாக இரண்டாவது சுற்றினால் தான் வெற்றி தீர்மானிக்கப்பட வேண்டி வரும் என அவர்களை ஆதாரம் காட்டி செய்தி ஊடகம் ஒன்று குறுஞ் செய்தி வெளியிட்டிருந்தது.

நாட்டின் சனத் தொகையில் 70% சிங்கள பெளத்த பெரும்பான்மையினர். இவர்களில் கணிசமான பங்கு கிராமப் புறத்து வாக்காளர் கோதபாயவிற்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு, சிறுபான்மை இனங்களின் அச்சுறுத்தல் இரண்டுமே அவர்களது அக்கறை. மண்ணெண்ணை, பாண், உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தவிர பெருநகரப் பொருளாதாரம், உட்கட்டமைப்பு போன்ற விவகாரங்கள் அவர்களுக்கு முக்கியமானதோ அல்லது புரிந்துகொள்ளப்படக் கூடியதோ அல்ல. அந்த வகையில் கோதபாயவை அவர்களால் இலகுவில் புரிந்து கொள்ள முடிகிறது.

கோதபாய என்னதான் அமெரிக்கக் குடிமகனாக இருந்தாலும் இராணுவத்தினனது மனநிலையைத் தாண்டி அவரது சிந்தனை போக மறுக்கிறது. பெருநகர வாக்காளர்கள் இத நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த போரையோ தேசிய பாதுகாப்பையோ விட அவர்களது சிந்தனையெல்லாம் பங்குச் சந்தைகளின் இலக்கங்களோடும், உலக விவகாரங்களை அமைதியாகப் பொழுதுபோக்கு நிலையங்களிலிருந்து அளவளாவதிலும் தான் இருக்கிறது. கோதபாயவின் தேசீய அச்சுறுத்தலைவிட, சஜித்தின் பொருளாதாரக் கொள்கைகள் தான் அவர்கள் புரிந்துகொள்ள விரும்புவது.

சிறுபான்மை இனங்களின் வாக்குகளைத் தவிர்த்துப் பார்க்கின், கோதபாயவின் தேசீய அச்சுறுத்தல் இலகுவாக வெற்றிபெறும். சிறுபானமையினரின் வாக்குளால் தான் வென்றதாக இருக்கக்கூடாது என்ற நெருப்பு மனநிலையில் கோதபாய இருக்கிறார். அப்படியிருந்தும் ‘நானும் ரவுடிதான்’ என்று கூவிக்கொண்டு சில கோமாளிகள் திரிகிறார்கள்.

த.தே.கூட்டமைப்பைப் பற்றி நிறைய விமர்சனங்கள் இருக்கலாம். அவர்களைத் தமிழ் மக்கள் நேசிக்காமல் இருக்கலாம் ஆனால் இன்னும் வெறுக்கவாரம்பிக்கவில்லை. அதற்கு மாற்றீடாக எந்தவொரு கட்சியோ அமைப்போ தலைவர்களோ இன்னும் உருவாகவில்லை. எனவே மக்கள அவர்களது கைகள் காட்டும் திசையிலேயே நகர்வார்கள். அவர்களது தெரிவு யார் தோற்கவேண்டுமென்பதே. கோதபாயவிற்கு வாக்களிக்க வேண்டுமென்று சொல்பவர்கள் முள்ளிவாய்க்கால் ஓலங்களை ரசிப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும்.

சஜித் வென்றால் சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கப் போவதில்லை. சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க சிறுபான்மை இந மக்களால் மட்டுமே முடியும். அதற்கு அவர்களுக்கு இருக்கக்கூடிய பக்க உதவி வெளிநாடுகள் மட்டுமே. இலங்கையில் அவர்களது இருப்புக்கு அச்சுறுத்தல் வாராமலிருந்தால் மட்டும் இப்போதைக்குப் போதும். கோதபாய வெளிநாடுகளின் புத்திமதிகளைச் சட்டை செய்பவரல்ல. எனவே சிறுபான்மையினரின் இருப்புக்கான அச்சுறுத்தல் கோதபாயவின் ஆட்சியில் நிச்சயம் பூதாகாரமாகும். சஜித்தின் ஆட்சி வெளிநாடுகளின் ஆலோசனை என்ற கோட்டிற்குள் மட்டுமே நடமாடலாம். அக் கோடுகளில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு இழையோடியிருக்கும். அவற்றைப் பலப்படுத்துவது புலம் பெயர்ந்தோர் கடமை.

வாக்களிப்பு நவம்பர் மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. திங்கள் காலையில் தான் முடிவுகள் அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.