ArticlesColumnsசிவதாசன்

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் ஒரு ஜனநாயகச் சதி

சிவதாசன்

அதிர்ச்சி, ஆனந்தம், எதிர்ப்பு, ஏமாற்றம், பொய், புரளி எல்லாம் கலந்த ஒரு மசாலாவைத் தந்திருக்கிறது இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவு.

மஹிந்த ராஜபக்ச தோற்கடிக்கப் பட்டதற்கான வரைபடம் மேற்கில் வரையப்பட்டது என்பதற்கான அத்தனை முத்திரைகளும் இத் தோல்வியில் தெரிகிறது. அந்த வரைபடத்தின் படி செய்யப்பட்ட பொறி ஒரு உள்நாட்டுத் தயாரிப்பு. கால நிர்ணயத்தை மட்டுமே மஹிந்த செய்திருந்தார்.

மஹிந்த ராஜபக்சவை எடை போட்டதில் புலிகள் மட்டும் தவறிழைக்கவில்லை, மேற்குலகும் இந்தியாவும் கூடத்தான்.

பொறி வைப்பதில் அமெரிக்காவிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. முதுகில் தடவியவாறே புலப்படாது அலுவல்களைச் சாதித்துக் கொள்ளும் தந்திரத்தில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். எதிரிகள் அவர்களின் பொறிகளில் வீழ்வது பெரும்பாலும் எதிரிகளின் முட்டாள் தனத்திலால் தான்.

தமிழரைப் பொறுத்த வரையில் ஜே.ஆர். ஜயவர்த்தனா மிகவும் தந்திரமுள்ள நரி மட்டுமே. ஆனால் மஹிந்த தன் பின்னால் ஒரு ஓநாய்க் கூட்டத்தை வைத்துக்கொண்டிருந்த ஒரு பனங்காட்டு நரி. இந்திய, அமெரிக்க சல சலப்புகளை நன்றாக அறிந்து வைத்திருந்த நரி. உள்ளுர்ப் பொறி ஒன்றின் மூலமே அதைப் பிடிக்க முடிந்திருக்கிறது.

இலங்கையைப் பொறுத்த வரையில் அமெரிக்காவிற்குத் தேவை ஆட்சி மாற்றம் மட்டுமே. தங்களுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் தமிழருக்கான தீர்வு பற்றி அவர்கள் அக்கறைப்பட மாட்டார்கள். தமிழர்களுக்கும் இது தெரிந்த விடயம் தான். ஐ.நா. வில் அமெரிக்கா ஆடிய நாடகமும் ஆட்சி மாற்றத்தை நோக்கியது தான். இந்த பனங்காட்டு நரியிடம் அமெரிக்காவின் ஐ.நா. அரிசி வேகவில்லை. எனவே தான் இந்த தேர்தல் பொறி. ஒரு வகையில் முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் விற்லாமை அகற்றுவதில் பிரயோகித்த அதே ‘ஜனநாயக சதி’ இங்கும் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

இந்த ஜனநாயக சதிக்கான வரைபடம் ஒரு வருடத்துக்கு முன்னதாகவே வரையப்பட்டு விட்டது. சந்திரிக்கா, ரணில், மங்கள சமரவீர, சரத் பொன்சேகா, தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பின் முக்கிய சில தலைவர்கள் உட்பட இந்தியாவும் இணைந்த அமெரிக்க நெறிப்படுத்தலில் அரங்கேறிய இச் சதி மிகவும் சாதுரியமாக நிறைவேற்றப்படடிருக்கிறது.

கட்சி எப்படிப் போனாலென்ன, நாடு எப்படிப் போனாலென்ன தன் பதவியே முக்கியம் என்று எந்த சமரசத்துக்கும் வர மறுத்த ரணில் விக்கிரமசிங்கவே ஒரு பொது வேடபாளருக்காக அதுவும் மஹிந்தவுக்கு ‘மிகவும் நெருக்கமாகவிருந்த’ மைத்திரிபால சிறிசேனவுக்கு விட்டுக் கொடுப்பதென்றால் அதை அமெரிக்காவின் பலமான கரங்களாலேயே சாதித்திருக்க முடியும்.

இந்த ஆட்சி மாற்றத்துக்காக அமெரிக்கா பேசிய பேரங்கள், கொடுத்த பரிசில்கள் பல. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்றி பலமுள்ள பிரதமர் பதவியை உருவாக்கி அதை ரணில் கையில் கொடுப்பது. (தற்போதுள்ள நிலைமையில் ரணில் எந்தத் தேர்தலில் நின்றாலும் வெற்றி பெற முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்). சுதந்திரக் கட்சியை ராஜபக்ச பரம்பரையிடமிருந்து பறித்து சந்திரிக்காவிடம் கொடுப்பது, சரத் பொன்சேகாவின் இழந்த உரிமைகளை மீட்டெடுத்து அடுத்த பிரதமர் பதவிக்காகத் தயார் செய்வது என்பன அவற்றுள் முக்கியமானவை. ஆங்காங்கே எதிர்க் குரல்கள் எழுகின்ற போது சில எலும்புத் துண்டுகள் வீசப்பட்ட நடவடிக்கைகளும் உண்டு.

தமிழ் தேசீயக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் அமைப்பின் உள் முரண்பாடுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே தமது வெற்றி நிச்சயம் என்பது அமெரிக்காவிற்குத் தெரியும். முஸ்லிம் கட்சிகள் போலகூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளுக்கு  முண்டியடிக்கும் கட்சியல்ல. (தலைவர் சம்பந்தன் முன்னர் ஒரு தடவை தமிழருக்கு நன்மை பயக்காத சலுகைக்காக மந்திரிப் பதவியை ஏற்க மறுத்தவர்). 13 வது சட்டத் திருத்தத்தை முற்றாக அமுற்படுத்த வேண்டுமென்ற கட்டளையை ரணிலிடம் வாக்குறுதிலயாகப் பெற்று கூட்டமைப்பிடம் கொடுப்பது அதற்குப் பதிலாக தனி ஈழக் கோரிக்கையைக் கைவிட்டு ‘ஒன்று பட்ட இலங்கைக்குள்’ தீர்வை ஏற்றுக்கொள்வோம் என்பதை கூட்டமைப்பு அறிவிப்பது என்பனவே கூட்டமைப்பின் கடமை.

வட மாகாணசபைத் தேர்தலின் போது பதவிகளுக்காக அட்டகாசம் புரிந்த கூட்டமைப்பின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மீது கடிவாளம் இடப்பட்டதோ என்னுமளவிற்கு அந்த முகாமின் அமைதி குறி சொல்லியது கவனிக்கப்பட வேண்டியது.

என்ன இருந்தாலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. யார் காரணமாயிருந்தாலென்ன அது இலங்கைக்கு மட்டுமல்ல தமிழருக்கும் நல்லது.

மைத்திரிபால சிறிசேன பற்றிய பலரது மதிப்பீடு “அவரும் மஹிந்தவின் சகபாடியே.” “தமிழரைப் பொறுத்த வரையில் பெரிதாக எதையும் எதிர்பார்க்கத் தேவையில்லை”. “புதிய மொந்தையில் பழைய கள்ளு” எனப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பல தடவைகள் ஏமாற்றப்பட்ட தமிழுணர்வுகளின் நியாயமான வெளிப்பாடுகள் அவை. சிறிசேனா எதையும் தருவார் என்ற நம்பிக்கையோடு தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. மஹிந்தவை அகற்றுவதற்காகவே சிறிசேனாவிற்கு வாக்களித்தார்கள். கூட்டமைப்பும் எந்தவித நிபந்தனைகளுமின்றி சிறிசேனவை ஆதரித்தார்கள், இதே காரணத்துக்காக.

சிறிசேன ஒரு தற்காலிக தலைவர் மட்டுமே. மஹிந்தவுடன் ஒப்பிடும் போது அவரிடம் நேர்மை இருக்கிறது. நாணயம் இருக்கிறது என்று தமிழர்கள் நம்புகிறார்கள். மஹிந்த மீதான போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்ஙகப் போவதில்லை என்பது பொதுவாக எந்த சிங்கள பௌத்தன் ஒருவருக்கும் இருக்கக்கூடிய உணர்வுதான். அதை அவர் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் சொன்னார். தமிழர் தரப்பு சிறிசேனாவின் இக் கூற்றை வரவேற்க வேண்டும், குறைந்தது இன்னும் சில வருடங்களுக்கு சிறிசேனவோ, விக்கிரமசிங்கவோ சிங்கள பௌத்தர்களாகவே நடமாட வேண்டும். மஹிந்த குடும்பம் நிரந்தரமாக ஒதுக்கப்படும் வரை. அது தான் தமிழருக்குக் கிடைக்கக்கூடிய அதி உன்னத வரப்பிரசாதம். அதைத் தமிழரால் சாதிக்க முடியாது. சிங்கள மக்களால் மட்டுமே அது முடியும்.

உணர்வாளர்களை நித்திய சன்னத நிலையில் வைத்திருப்பவர்கள் தான் அரசியல்வாதிகள். இனவாதம், மதவாதம், சாதிவாதம் போன்ற போதை தரும் கருவிகளை அரசியல்வாதிகள் மிகவும் லாவகமாகக் கையாளப் பழகிக் கொண்டுள்ளார்கள்.

பண்டாரநாயக்கா, ஜயவர்த்தனா ஆகியவர்களைவிட இக் கருவிகளை மிகவும் திறமையாகவும், அதிக வினைத் திறனுடனும் கையாண்டவர் மஹிந்த ராஜபக்சவே. அவரது மீள வரும் முயற்சியில் பாவிக்கக்கூடிய, மிகவும் பரிச்சயமான ஒரே ஒரு ஆயுதமும் இனவாதமே. ஜனநாயகத்தில் தீட்டப்படுவதால் இப்படியான ஆயுதங்கள் தொடர்ந்து கூர்மையாக இருக்கின்றன. இந்த ஆயுதங்கள் மீண்டும் மஹிந்தவின் கைகளில் விழாதிருக்க வேண்டுமாயின் அவை தற்காலிகமாகவேனும் சிறிசேன தரப்பிடம் தான் இருக்க வேண்டும். அவற்றைப் பாவிக்கிறார்களோ இல்லையோ அணிந்து கொண்டுதான் இருக்க வேண்டும். அரசியல் முதிர்ச்சியுள்ள பல தமிழ்த் தலைவர்களுக்கு இது நன்றாகப் புரிகிறது. அதனால் தான் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டாமென்று அவர்கள் வேண்டிக் கொண்டார்கள். ஒரு முறை பகிஷ்கரித்ததன் விளைவு தான் இத்தனை உயிரிழப்புக்களும் நில இழப்புக்களும். தேர்தல் பகிஷ்கரிக்கப்பட்டிருப்பின் மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார் என்பது இன்னுமொரு தடவை உரத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. மூத்த தமிழ்த் தலைவர்களும் மக்களும் மிகவும் சிந்தித்துச் செயயற்பட்டிருக்கிறார்கள்.


அடுத்த சில வருடங்கள் சிறிசேன தரப்பினருக்கு முக்கியமானவை. மஹிந்த தரப்பினரின் கொள்ளைகளையும், சூறையாடல்களையும் வெளிக் கொணர்ந்து சிங்கள மக்களிடமிருந்து அவர்களை நிரந்தரமாக அந்நியப்படுத்துவதற்கு சிறிசேன தரப்பினருக்கு அவகாசம் வேண்டும். தமிழருக்கு எதிரான போர்பற்றிய உள்ளக விசாரணை என்பது கூட ஒரு வகையில் ராஜபக்சவினரைத் தண்டிக்கும் நிகழ்ச்சி நிரலில் ஒன்று தான். இதனால் ஐ.நா. வின் விசாரணைகளிலிருந்து மஹிந்தவைக் காப்பாற்றுவேன் என்று சொல்லும் சிறிசேன தரப்பிற்கு வெற்றியே தான். அது குறித்து தமிழ் உணர்வாளர்கள் கலக்கமடையத் தேவையில்லை.

போர்க்குற்ற விசாரணைகளில் மகிந்த தண்டிக்கப்படுவார் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஐநா. பிரேரணைகளைக் கொண்டு வந்த அமெரிக்காவிற்கே விசாரணையின் மீதோ அல்லது தண்டனையின் மீதோ அக்கறையில்லை. அவர்களுக்குத் தேவையான ஆடசி மாற்றம் நிகழ்ந்து விட்டது. மஹிந்த மீது ஐ.நா. வினால் முன்னெடுக்கப்படும் எந்தவித விசாரணையும் அவரை சிங்கள மக்களிடையே ஒரு ஹீரோ ஆக்கிவிடும். ஐ.நா. விசாரணை நடக்கவேண்டும் என்பது மஹிந்தவின் கனவாகவும் இருக்கலாம். மாறாக, உள்ளக விசாரணை போர்க்குற்றங்கள் மட்டுமல்லாது அதற்கப்பாலும் சென்று மஹிந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை அம்பலப்படுத்துமாயின் அது மஹிந்தவின் மீள்வரவைத் தாமதிக்க வைக்கும். போர்க்குற்ற விசாரணைகள் போலன்றி இவ்விசாரணைகள் மஹிந்தவின் வாரிசுகளையும் தண்டித்து ஒரு முற்று முழுதான சுத்திகரிப்பு நிகழ்வாகவும் அமையலாம். இந்த நடவடிக்கைகளில் இருந்து தமிழர் தரப்பு விலகியிருப்பதே நல்லது. இதற்கான கால அவகாசம் சிறிசேன தரப்பினருக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

இந்த ‘சில வருட’ அவகாசம் தமிழருக்கும் மிக முக்கியமானது. தோற்கடிக்கப்பட்ட இனம் என்ற தலை குனிவு இன்னும் இருள் மேகமாக அவர்கள் மீது கவிந்து கொண்டிருக்கிறது. அவர்களது நிலங்களில் அவர்களைக் குடியேற விட்டாலே போதும். இந்த இரண்டு வருடங்களில் அவர்கள் விருட்சமாகி விடுவார்கள். நாட்டுக்கான சுய நிர்ணய உரிமையைப் பெறுவதற்காகப் போராடிய அவச்கள் தமது சுய வாழ்வுக்கான உரிமையை இழந்து நிற்கிறார்கள். முதலில் அவர்கள் நிமிர்ந்து நிற்க வழி செய்ய வேண்டும். இது அவர்களுக்கானக்கான இடைக்காலத் தீர்வு.

தமிழர் பகுதிகள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கான அத்தனை முயற்சிகளும் இக் காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். இராணுவக் குறைப்பு, நிலங்கள் மீளக் கையளிப்பு, சுதந்திரமான நடமாட்ட உரிமை இதையெல்லாம் கொடுக்க வேண்டுமென்பதே கூட்டமைப்பு ‘வைக்காது’ வைத்த நிபந்தனைகள்.
இவற்றைக் கொடுத்தேயாக கேண்டும் என்பது தமிழர் சார்பில் புறச் சக்தி சிறிசேன தரப்பிற்கு இட்ட நிபந்தனையாகவும் இருக்கலாம்.

இதே வேளை சிறிசேன அரசின் மீது மட்டுமல்ல எந்தவொரு சிங்கள ஆட்சி மீதும் நம்பிக்கை இல்லாத தமிழர் குரல்களும் ஓங்கி ஒலிப்பதும் கேட்கிறது. இதில் நியாயமான வாதப் பிரதிவாதங்களுடன் பலர் தமது கருத்துக்களை முன்வைக்கிறார்கள். தமிழ் மிதவாதத் தரப்புக்கு இப்படியான கடும்போக்காளர்களது இருப்பும் அவசியம். ஆனால் இவர்களது குறி மிதவாதிகள் மீது இருப்பதுவே துரதிர்ஷ்டமானது.பதவியேற்று சில மணித்தியாலங்களிலேயே சிறிசேன கடுகதியில் இயங்க ஆரம்பித்திருப்பது நல்ல அறிகுறி. தமிழர் விடயத்தில் ஒரு நிரந்தர தீர்வுக்கான விருப்பமும் அங்கிருப்பது தெரிகிறது. 13 வது சட்டத் திருத்தத்தை அமுல் படுத்தினாலேயே பெரிய விடயம். ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூட்டமைப்பு சொன்னதன் மூலம் தென்னிலங்கையின் தீவிர இனவாத சக்திகளின் ஈழப் பூச்சாண்டி பலமற்றுப் போயிருக்கிறது. அதிகார பரவலாக்கத்திற்கு இதுவே நல்ல தருணம். இழந்துபோன இந்திய நல்லுறவை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்காகவேனும் தமிழருக்கு ஒரு தீர்வை முன்வைக்க சிறிசேன அரசு முயலும். சிறிசேன அரசு ஏறத்தாழ ஒரு தேசீய அரசு. ஹெல உறுமய போன்ற இனவாத சக்திகளையும் உள்ளடக்கியிருப்பதே அதன் பலம். இந்த அரசினால் தமிழருக்குத் தீர்வு கொடுக்கப்படாது போனால் ஜனநாயகத்தின் மீது தமிழர் நம்பிக்கையை இழக்கவேண்டி நேரிடும்.

போராட்டத்தில் தமிழர் தோற்றுவிட்டோம் என்ற வலி ஆறுவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். எதிரியைப் பழிவாங்குவதால் மட்டும் நாம் வென்றுவிடப் போவதில்லை. சீர்குலைந்த எம் மக்கள் வாழ்வு மேம்படுத்தப்பட வேண்டும். தோற்கடிக்கப்பட்ட ஜேர்மானிய, யப்பானிய மக்கள் தாம் மீழெழுவதற்காகப் பாவித்த கருவி பொருளாதாரம். அவர்களும் தமிழரைப்போல் ரோஷம் மிக்கவர்கள்தான். எதிரியைப் பழிவாங்குவதில் அவர்கள் காலத்தை வீணாக்கவில்லை. எதிரியின் மூலம்தான் அவர்கள் தமது சீரழிந்த நாட்டைக் கட்டி எழுப்பினார்கள்.

வரலாறு ஒரு முப்பரிமாண வரைபடமாக எம் கண்முன்னே விரித்து வைக்கப்பட்டிருக்கிறது. கற்பதுவும் அதன்படி நிற்பதுவும் எமது தேர்வு.

சிவதாசன் தை 2015 – ஈகுருவி பத்திரிகையில் பிரசுரமானது