India

இலங்கை செல்லும் முதல் இந்திய சொகுசுக் கப்பல்

இலங்கைக்குச் செல்லும் இந்தியாவின் முதலாவது சொகுசுக் கப்பலான ‘கோர்டெல்லா எக்ஸ்பிரெஸ்’ நேற்று (ஜூன் 05) சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. இந்தியாவின் மத்திய துறைமுக, கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சர் சர்பானந்தா சொனோவாலினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இக் கப்பல் ஜூன் 07 அன்று இலங்கையிலுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடையுமெனவும் பின்னர் ஜூன் 09 அன்று சென்னை துறைமுகத்திற்குத் திரும்புமெனவும் ரைம்ஸ் ஒஃப் இண்டியா செய்தி வெளியிட்டிருக்கிறது.

இக்கப்பலில் ஆடம்பர வர்த்தக நிலையங்கள், நீச்சல் தடாகம், உணவுக் கடைகள், சூதாட்ட நிலையம், திரையரங்கு, மதுபான நிலையம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அமைந்துள்ளன. சென்னை துறைமுக அதிகாரசபை மற்றும் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் முயற்சியால் இது சாத்தியமாகியது எனப்படுகிறது.

இந்திய மத்திய அரசினால் ரூ 5,000 கோடி செலவில் மும்பாயில் உருவாக்கப்பட்டுவரும் சர்வதேச சொகுசுக் கப்பல் துறைமுகம் இன்னும் பாவனைக்குத் தயாராகவில்லை.

அடுத்த நான்கு மாதங்களில் 50,000 பயணிகளை கோர்டெல்லா எக்ஸ்பிரெஸ் இலங்கைக்குக் கொண்டு செல்லும் என கோர்டெல்லா நிறுவனத்தின் பிரதம நிர்வாகி ஜேர்கென் பைலோம் தெரிவித்துள்ளார். கோர்டெல்லா நிருவனத்தின் சொகுசுக் கப்பல்கள் கொச்சி, கோவா, மும்பாய், லக்சதுவீப ஆகிய துறைமுகங்களில் ஏற்கெனவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. (ரைம்ஸ் ஒஃப் இண்டியா)