இலங்கை | செயற்கை உரத்தின் மீதான இறக்குமதித் தடை நீக்கம்
வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறையால் தடைசெய்யப்பட்டிருந்த செயற்கை உர இறக்குமதித் தடையை நவமபர் 30 முதல் அரசாங்கம் நீக்கியுள்ளது. செயற்கை உரமின்றி உள்ளூர் விவசாய உற்பத்தி பாரதூரமான வீழ்ச்சியைக் கண்டிருந்தது. அத்தோடு பல சிங்கள கிராமங்களிலும் அரசுக்கெதிராக விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் உடல்நலப் பாதிப்பைக் காரணம் காட்டி ஜனாதிபதி கோதாபய தான் பதவிக்கு வந்ததும், மே 06, 2021 இல், செயற்கை உரத்தைத் தடை செய்வதாக அறிவித்திருந்தார். நாட்டின் பல விவசாய வல்லுனர்கள், பொருளாதார வல்லுனர்கள், விவசாயிகள் ஆகியோரின் ஆலோசனைகளுக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கையால் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டது. அரிசி ஆலைச் சொந்தக்காரர்கள் அரிசியைப் பதுக்குவதும் மக்களின் கஷ்டங்களை மேலும் அதிகரித்திருந்தது.
இருந்தாலும் மக்களின் எதிர்ப்பு காரணமாக ஜூலை 31 அன்று, அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுச் சிலர் செயற்கை உரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அந்த உரத்தைப் பாவிக்கும் விவசாயிகளுக்கு அரசாங்க சலுகை தரப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்திருந்தது. நவம்பர் 30 முதல் செயற்கை உரத்துக்கான தடையை நீக்குவதாக அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரிவித்துள்ளது.
செயற்கை உரத்தைப் பாவிக்காமல் பண்டைய மக்கள் 140 வருடங்கள் வாழ்ந்தனர் என்ற, ரோமானியரான பிளினி என்பவரது கருத்தை உதாரணம் காட்டை செயற்கை உரத் தடையை இலங்கை மருத்துவர் சங்கமும் வரவேற்றிருந்தது. ஆனால் அரசாங்கத்தின் இதர பொருளாதாரக் குளறுபடிகளாலும், கொறோணா நொய்த்தொற்றினாலும் ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு மக்களை மேலும் சிரமத்துக்குள்ளாக்கியிருந்தது.