Spread the love
அரசியல் அலசல்

ஜனவரி 16, 2020

இலங்கை | சூடுபிடிக்கும் 'ரஞ்சன்கேட்' 1
பா.உ. ரஞ்சன் ராமநாயக்கா

ஜனவரி 4ம் திகதி ஐ.தி.கட்சி பா.உ. ரஞ்சன் ராமநாயக்கா கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு அரசியல் வட்டாரங்கள் அதிர்ந்த வண்ணமிருக்கின்றன. அவரது வீட்டைத் தேடுதல் செய்த காவற்துறை கைப்பற்றியதாகக் கூறப்படும் ஒலி நாடாக்கள் மர்மமான முறையில் சமூக ஊடகங்களின் மூலம் கசிந்து கொண்டிருக்கின்றன. 270,000 பதிவுகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஒலிநாடாவில் இருந்து இதுவரை ஏறத்தாள 100 பதிவுகள் மட்டுமே வெளிவந்திருக்கின்றன என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கசிய விடப்படட தகவல்கள் பெரும்பாலும் ரஞ்சனையும் அவருக்கு நெருக்கமானவர்களையம் பாதித்தாலும் சில தற்போதுள்ள ஆளும் கட்சியிலுள்ளவர்களையும், குறிப்பாக ஜனாதிபதி கோத்தாபாயவுக்கு மிக நெருக்கமானவர்களையம் குறித்தனவாக உள்ளன.

இது தொடர்பாக, தற்போது ரஞ்சன் மகசின் சிறையில் சிறைவைக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சன் ரகசியமாக இப் பதிவுகளைச் செய்தமை தார்மீகமற்றதெனினும், ஆவர் அதை பாவித்து அரசியல் லாபம் பெற முயற்சிக்கவில்லை எனவும் அப்படியாயிருந்தால் அவர் அதை ஜனாதிபதி தேர்தலின்போதொ அல்லது அதற்கு முதலோ வெளியிட்டிருக்கலாம் என அவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.

இதுவரை வெளிவந்த தகவல்கள் ஒரு முச்சக்கரவண்டி ஓட்டுனரிடம் இருந்து கிடைத்த ஒலிநாடாவில் இருந்து பெறப்பட்டவையென அரசு தரப்புக்கு கூறினாலும், அதில் உண்மையில்லை எனவே கொழும்பு வடடாரங்கள் நம்புகின்றன. இவ்வொலி நாடாவை காவற்துறை கைப்பற்றியிருந்தபடியால் இது அவர்கள் மூலமே கசியவிடப்பட்டிருக்கிறது எனவும் அதன் பின்னால் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது. எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து இக் காரியங்கள் நடைபெறலாமென ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகின்றன.

இதுவரை வெளிவந்த பதிவுகளில் கோத்தாபாயவுக்கு மிக நெருக்கமானவர்களின் ஊழல்கள் பற்றி வெளிவந்திருக்கும் நிலையில், அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ஜனாதிபதி கோத்தாபாயவைக் குறி வைத்தவையாகவும் இருக்கலாம்.

இதுவரை கைதுசெய்யப்பட்ட, பதவி நீக்கம் செய்யப்பட்ட அல்லது வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய புலன்விசாரணை அதிகாரிகள் விசாரணை செய்து எவரையும் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரமுடியாதவாறு முன்னாள் ஜனாதிபதியும், தற்போதுள்ள ஆட்சியாளரும் முட்டுக்கட்டை போட்டுவந்த நிலையில் விரக்தியடைந்த முன்னாள் புலன்விசாரணை அதிகாரிகளிடமும் இப் பதிவுகளின் பிரதிகள் இருந்து, அவர்களும் இக் கசிவு விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்கவும் கூடும். எப்படியானாலும், காவற்துறை கைப்பற்றிய இந்நாடாக்கள் நீதிமன்றத்தில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

ஆனாலும் புதிய ஆட்சியில் நீதித்துறை மீண்டும் ‘பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட’ நிலையில் இவ்வொலிநாடா எவ்வளவு தூரம் உண்மைகளைக் கொண்டிருப்பினும் அவை எந்தவித விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை எனத் தென்னிலங்கை ஊடகங்கள் சில ஐயம் தெரிவிக்கின்றன.

இவ்வேளையில், ஐ.தே. கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, பாலித தேவாரப்பெரும , ஹேஷா விதானகே ஆகியோர் ரஞ்சன் ராமநாயக்காவைப் பார்ப்பதற்கு இன்று மகஸின் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தனர்.

Related:  20 வது திருத்த வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது பிரதமரால் நிறுத்தப்பட்டது - கட்சி உறுப்பினர்களின் அதிருப்தி காரணம்!

அதன் பிறகு அவர்கள் ஊடகவியலாளருக்குக் கொடுத்த பேட்டியின்போது ” சம்பந்தப்பட்ட ஒலி நாடா ரஞ்சனை மட்டுமல்ல அரசாங்கத்தையும் கூடவே வெளிப்படுத்துகிறது என்றும் ஆனால் ஒரு குழுவினர் ரஞ்சனின் பெயரைக் களங்கப்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள். அது வருகின்ற தேர்தலுக்கு முதல் அவர்கள் தமது பெயரைக் காப்பாற்றுவதற்கு எடுக்கின்ற முயற்சியாகவே தெரிகிறது. இது தொடருமானால் ரஞ்சன் பதில் முயற்சிகளில் இறங்கவேண்டி வரும்” என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இக் கசிவினால் எவரும் அடித்துச் செல்லப்படமாட்டார்கள் என உறுதியாக நம்பினாலும், மேலும் பரப்பான தகவல்களை அது கொண்டுவருமென நம்பலாம். பொறுத்திருப்போம்.

  • மாயமான்
Print Friendly, PDF & Email
இலங்கை | சூடுபிடிக்கும் ‘ரஞ்சன்கேட்’

இலங்கை | சூடுபிடிக்கும் ‘ரஞ்சன்கேட்’