News & AnalysisSri Lanka

இலங்கை | சுற்றுலாவாசிகள் தங்குதடையின்றிப் பயணம் செய்யலாம் – சுற்றுலாத் துறை அமைச்சு

சுற்றுலாவாசிகள் உள்நாட்டுப் பயணக்கட்டுப்பாட்டு விதிகளை அனுசரிக்கத் தேவையில்லை என அறிவித்ததன் மூலம் நாட்டில் தற்போதுள்ள நோய்த் தொற்றின் தீவிரத்தை அரசாங்கம் முற்றாக உணர்ந்துகொள்ளவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது

டாக்டர் ருக்‌ஷன் பெல்லானா, அரச மருத்துவர்கள் அமைப்பு

இலங்கையின் மருத்துவர் சங்கங்கள், முன்னிலைப் பணியாளர்களின் எச்சரிக்கைகளையும் தாண்டி அரசாங்கம் சுற்றுலாவாசிகளைத் தங்குதடையின்றி நாடு முழுவதும் பயணம் செய்ய அனுமதித்திருக்கிறது. சுற்றுலா அமைச்சினால் ஏகமனதாக எடுக்கப்பட்ட இத் தீர்மானம் சுகாதாரத் துறை அமைச்சுக்கும், பொலிஸ் அத்தியட்சகருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது என அத்துறைப் பேச்சாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் சங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதி ராஜபக்சவைச் சந்தித்து பயண முடக்க நடவடிக்கைகளை கிராமசேவகர் பிரிவுகளுக்கு விரிவுபடுத்தும்படி விண்ணப்பித்திருந்த பின்னரும், சுற்றுலாவாசிகள் விடயத்தில் இப்படியான அறிவிப்பை அரசாங்கம் செய்திருக்கிறது.

வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் ‘உயிர்க் குமிழ்’ ( bio bubble) எனப்படும் குழுப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் நோய்ப்பரவலைத் தவிர்த்துக்கொள்ள முடியுமென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைப் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்கா அறிவித்துள்ளார். தாம் எடுத்த இம் முடிவை சுகாதார சேவைகள் மற்றும் பொலிஸ் திணைக்களங்களுக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவிதுள்ளார்.

நாட்டில் தொற்று கட்டுக்கடங்காத வகையில் பரவி வருவதால் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தைத் தற்காலிகமாக மூடிவிடும்படி கேட்டிருந்தும், சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்க அதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார் எனத் தெரிகிறது.

நோய்த்தொற்று தீவிரமாகப் பரவ ஆரம்பித்த காலத்தில் ஜனாதிபதி கோதாபயவின் நண்பரும் முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவருமான உதயங்கா வீரதுங்க, ரஷ்ய, யூக்கிரெனிய சுற்றுலாவாசிகளை இலங்கைக்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஜனவரியில், பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டிருந்தபோது 183 சுற்றுலாவாசிகளை அவர் இறக்குமதி செய்திருந்தார். இவர்களில் பலர் சுற்றுலாவாசிகள் என்ற போர்வையில் பாலியல் தொழிலுக்காகக் கொண்டுவரப்பட்டவர்கள் எனப் பேசப்பட்டது. இவர்கள் அனைவரும் விசேட விமானங்கள் மூலம் மத்தள விமான நிலையத்தில் இறக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. சிலர் அரசாங்க மருத்துவமனைகளைல் சிகிச்சையளிக்கப்பட்டிருந்தனர். இக் காலப்பகுதியில், யூக்கிரெய்ன் நாடு நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த பொது முடக்கத்தை அறிவித்திருந்தது.

வீரதுங்கவின் அறிக்கைப்படி, தான் ஆரம்பித்த பரீட்சார்த்த திட்டத்தின்படி ‘உயிர்க் குமிழ்’ நடவடிக்கையின் மூலம் கொண்டுவரப்பட்ட சுற்றுலாவாசிகள் உள்ளூர் மக்களுடன் நெருங்க அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தனது இந் நடவடிக்கையின் மூலம் உள்நாட்டு வியாபாரங்கள் செழிக்கின்றன எனவும் தெரிவித்திருந்தார். இலங்கையின் பொருளாதாரத்துக்கு அவர் இதுவரை 2 பில்லியன் ரூபாய்களை உழைத்துத் தந்திருப்பதாகக் கூறுகிறார். இப்படி வேறு பல சுற்றுலா வியாபாரிகளும் பணியாற்றுகிறார்கள் எனவும் இவர்களில் அநேகமானோர் ஜனாதிபதி முதல், அமைச்சர் ரணதுங்க வரைக்கும் நெருக்கமானவர்கள் எனவும் அவர்களது அனுசரணையுடனேதான் தற்போதைய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் அறியப்படுகிறது.

இதே வேளை, வெளிநாடுகளில் பணிபுரியச் சென்று திரும்பி வரமுடியாமல் அவதிப்படும் பல இலங்கையர்கள் மத்தியில் நோய்த்தொற்று இருப்பதும், அவர்களைத் திருப்பிக் கொண்டுவருவதில் அரசாங்கம் அதிகம் அக்கறை காட்டுவதில்லை எனவும் மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்த வாரம் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய வெளிநாட்டுப் பணியாளர்கள் அனைவரும் (63 பேர்) நோய்த்தொற்றுடையவர்களாகக் காணப்பட்டனர் என இன்னுமொரு அறிக்கை கூறுகிறது.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த பொது முடக்கம் இன்று (திங்கள்) அதிகாலை 4 மணிக்கு முடிவுக்கு வருகிறது. ஆனாலும் மாகாணங்களுக்கிடையேயான பயணத்தடை, தினமும், இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, மே மாத இறுதிவரை அமுலில் இருக்குமென பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

“நாட்டில் மேலும் குழப்பங்களை உருவாக்குவதற்கென அரசாங்கம் தீர்மானித்துவிட்டது. தமக்கு விருப்பமானவர்கள் வெளிநாட்டவர்களை நாட்டுக்குள் கொண்டுவர அனுமதியளிப்பதன் மூலம் நோய் தீவிரமாகப் பரவுவதற்கு அரசாங்கமே உதவி செய்கிறது. ஜனவரியில் யூக்கிரெய்ன் நாடு பொது முடக்கத்தில் இருந்தபோது அந்நாட்டவர்களை இலங்கைக்குள் வர அரசு அனுமதித்திருந்தது. அதே போல் பிரித்தானிய வைரஸ் திரிபின் அச்சுறுத்தல் கடுமையாக இருந்தபோது அந்நாட்டின் கிரிக்கெட் குழு இலங்கையில் விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டது. இச் சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் அதிகாரத்துக்கு மிக நெருக்கமானவர்கள்” என அரச மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் ருக்‌ஷன் பெல்லானா தெரிவித்தார்.

“சுற்றுலாவாசிகள் உள்நாட்டுப் பயணக்கட்டுப்பாட்டு விதிகளை அனுசரிக்கத் தேவையில்லை என அறிவித்ததன் மூலம் நாட்டில் தற்போதுள்ள நோய்த் தொற்றின் தீவிரத்தை அரசாங்கம் முற்றாக உணர்ந்துகொள்ளவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. அரசாங்கம் கூறுவதன்படி ‘உயிர்க் குமிழ்களில்’ சுற்றுலாவாசிகள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியுமெனின் அதையே நாட்டு மக்களுக்கும் அரசு செய்யட்டும்” என டாக்டர் பெல்லானா தெரிவித்தார்.

இவ்வேளை, நாட்டில் மேலும் 6 புதிய வைரஸ் திரிபுகள் பரவ ஆரம்பித்துள்ளன என மருத்துவ நிபுணர்கள் குழு அரசாங்கத்துக்கு அறிவித்திருக்கிறது. மிகவும் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகள் மூலம் மட்டுமே பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியுமென மர்த்துவர் சங்கம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இவை எதையும் சட்டை செய்யாது அரசாங்கம் சுற்றுலாவாசிகள் தங்குதடையின்றிப் பயணம்செய்ய அனுமதித்திருப்பது நாட்டை முற்றாகச் சீரழிக்க அது கங்கணம் கட்டிவிட்டது என்பதையே காட்டி நிற்கிறது என்கின்றனர் சுகாதாரத்துறை நிபுணர்கள்.