இலங்கை, சீனாவுக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசு களமிறங்கலாம் – தமிழ்நாடு பொலிசாரரை உசார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை-‘தி இந்து’

துறைமுக நகரத்தைச் சீனாவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தமைக்கு நாடு கடந்த தமீழீழ அரசு உட்படப், பல தமிழ்த் தேசிய அமைப்புகள் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம் எனக்கூறி, தமிழ்நாடு பொலிசாரை உசார் நிலையில் இருக்கும்படி இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதென தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

மே 20 ம் திகதி, கொழும்பு துறைமுக நகரச் சட்டத்தை இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலமாக துறைமுக நகரத்தின் ‘முழுமையான கட்டுப்பாட்டையும்’ இலங்கை, சீனாவிடம் கையளித்து விட்டது எனக்கூறித் தமிநாட்டிலுள்ள ஈழத் தமிழருக்கு ஆதரவான அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கலாம் என எச்சரிக்கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

$1.4 பில்லியன் டாலர் செலவில், சீனா, கொழும்புத் துறைமுகத்துக்கு வெளியே, கடலில் மண்ணை இட்டு நிரப்பி ஒரு செயற்கைத் தீவை உருவாக்கியுள்ளது. இதன் கட்டுப்பாடு முழுவதும் சீனாவின் கீழ் இருக்கும் என இலங்கையின் எதிர்க்கட்சிகள் கூக்குரலிட்டு வந்தாலும் ராஜபக்ச தரப்பு அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. தென்னிலங்கையிலுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகத்தையும் அதன் அண்டையிலுள்ள நிலப்பரப்பையும், 2017 ம் ஆண்டு, இலங்கை, சீனாவுக்கு 99 வருடக் குத்தகைக்கு கொடுத்திருந்தது. செயற்கைத் தீவை உருவாக்குவதற்கான செலவை சீனா, இத் துறைமுக நகரத்தை நிர்வகிப்பதன் மூலம் மீளப்பெற்றுக்கொள்ளும் எனக் கூறப்பட்டாலும், இவ்விடயங்கள் பற்றிய தெளிவான விபரங்கள் எதுவும் ராஜபக்ச அரசினால் இன்னும் வெளியிடப்படவில்லை.

இத் துறைமுகநகரச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலமாக இந்தியாவின் கரையோரப் பிராந்தியத்தில் சீனா காலூன்றி விட்டது எனவும், அண்டை நாடுகளிலும் அதன் ஆதிக்கத்தை விரிவு படுத்தப் போகிறது எனவும் இலங்கையின் எதிர்க்கட்சிகள் கூக்குரலிட்டு வருகின்றன. நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற அமைப்புகளும் இது குறித்துத் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன என, புலனாய்வுத் தகவல்களைக் காரணம் காட்டி, இலங்கை மற்றும் சீன அலுவலகங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நிகழ்த்தாமல் பார்த்துக்கொள்ளும்படி தமிழக பொலிசாருக்கு, பொலிஸ் பணிப்பாளர் நாயகம் ஜே.கே.திருப்பதி கட்டளை பிறப்பித்துள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

“இலங்கை விடயத்தில் சர்வதேச சமூகம் காட்டிவரும் மெளனம் காரணமாக தமிழ் மக்களிடையே அமைதியின்மையும், எதிர்ப்புணர்வும் உருவாகியுள்ளது” எனச் சமீபத்தில் தமிழ்த் தேசியத் தலைவர் ஒருவர் பேசியிருந்ததை உதாரணம் காட்டி, தமிழாதரவு அமைப்புக்களும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், இலங்கை மற்றும் சீன அரசாங்கங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்யலாம் எனத் தாம் நம்புவதாக திருப்பதி தெரிவித்துள்ளார்.