இலங்கை: சர்வதேச நாணய நிதியம் US$2.9bn கடனுதவிக்குத் தயார்
மிகவும் இறுக்கமான முந்நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்
இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்த நிலையில் மிகவும் கடுமையான நிபந்தனகளுடனான இணக்கமொன்று இரு தரப்பினரிடையேயும் ஏற்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. இதன் பிரகாரம், நான்கு வருடங்களுக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை நாணய நிதியம் இலங்கை அரசுக்குக் கடனாக வழங்க முன்வந்திருக்கிறது.
நிபந்தனைகள்:
- ஏற்கெனவே இலங்கைக்குக் கடன் வழங்கியிருந்த நாடுகள், அமைப்புக்களுடன் அக் கடன்களை மீள்பரிசீலனைக்கு உள்ளாக்கவேண்டும் (debt restructuring)
- இலங்கைக்கு நிறுவனரீதியாகவும், பிரத்தியேகமாகவும் கடன் வழங்குபவர்களிடமிருந்து தொடர்ந்து வரும் காலங்களில் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்குமென்பதை இலங்கை அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்
- இக் காலகட்டத்தில் அவசியமாகில் இலங்கைக்கு கடன் சுமையைத் தாங்குவதற்கேற்ப அவ்வப்போது உதவிகளை வழங்க நாடுகளும் நிறுவனங்களும் தயாராக இருக்க வேண்டும்
- இந்த நான்கு வருடங்களில் வருடாந்த வரவு செலவுத் திட்டம் குறைந்தது 2.3% (GDP) மேலதிகமாக (budget surplus) இருக்க வேண்டும் (2022 இல் இது 4% பற்றாக்குறையாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது)
நடந்து முடிந்த முதலாவது கட்டப் பேச்சுவார்த்தைகளின்போது நாணய நிதியத்தின் மேற்படி நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள இலங்கைத் தரப்பு இணங்கியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. Extended Fund Facility (EFF) என அழைக்கப்படும் இவ்வொப்பந்தம் நாணய நிதியத்தின் நிர்வாகம் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே நடைமுறைக்கு வரும். இலங்கையின் எதிர்கால பொருளாதார நிலைமை சுமுக நிலைக்குத் திருமுமென்ற நம்பிக்கையுடனேயே சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்க முன்வந்திருக்கிறது.
இதே வேளை இலங்கையின் சமகால ஸ்திரமற்ற நிலையில் நிதியத்தின் இம்முந்நிபந்தனைகளை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது பெரியதொரு கேள்விக்குறி. கடந்த ஏப்ரல் மாதம் வெளிநாட்டுக் கடன்காரர்களது கடன்களைத் திருப்பமுடியாமையால் இலங்கை வங்குரோத்து நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டி வந்தது. இதனால் புதிய கடன்களைத் தருபவர்கள் தம்மை விலக்கிக்கொண்டனர். சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, வெளிநாட்டுப் பணியாளரது பண வருகை ஆகியன அருகிப் போனதால்வெளிநாட்டுச் செலாவணி வற்றிப் போனது. இதனால் இறக்குமதிகளுக்குத் தேவையான் போதிய டாலர் நாணயம் அருகிப்போயிருந்தது. உள்நாட்டுப் பணியாளர்களின் சம்பளத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாணயம் அச்சிடப்பட்டது. இதனால் பண வீக்கம் மேலும் அதிகரித்தது. இப்படியான காரணங்களினால் இலங்கையின் பொருளாதாரம் இந்த வருடம் (2022) 8.7% த்தால் சுருக்கமடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வேளை இலங்கைக்கு அதிக கடனை வழங்கிய சீனா, தனது கடனுக்கான நிபந்தனைகளைத் தளர்த்த மறுத்துவிட்டது. தனது வட்டியை மீளப் பெறுவதற்காக அது மேலதிக கடன்களை வழங்கி வருகிறது. இந்தியா தனது கடன் நிபந்தனைகளை ஏற்கெனவே தளர்த்தியிருந்தாலும் அரசாங்கத்துள் நிலவும் இந்திய எதிர்ப்பு, குறிப்பாக இந்திய உளவுக் கப்பலின் வருகையை அனுமதித்தது போன்ற நடவடிக்கைகளின் பின்னர் இந்தியாவும் தனது உதவிகளை மீள்பரிசீலனை செய்து வருகிறது.
இச்சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் இதர நிபந்தனைகள் பற்றி இப்போது அதிகம் பேசப்படவில்லை. அவை பெரும்பாலும் அரசியல் சார்ந்தவையாக இருப்பது வழக்கம். மத்திய வங்கி, நீதித்துறை ஆகியவற்றில் அரசியல் தலையீடு தவிர்க்கப்படுதல், மனித உரிமைகள் பேணப்படுதல், ஊழலை ஒழித்தல், நாட்டில் அரசியல் ஸ்திரத்தை ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல் என்பன போன்ற பல நிபந்தனைகளை இலங்கை அரசு நிறைவேற்றியாக வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் இவையெல்லாம் சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியே.