இலங்கை: சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடனுதவி பின்தள்ளப்படலாம் – அதிகாரி
இலங்கையைப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீட்க சர்வதேச நாணய நிதியம் வாக்களித்த நான்கு வருட – $3 பில்லியன் கடனுதவியின் இரண்டாம் கட்ட நிதியைத் தருவதற்கு அவ்வமைப்பு தயங்குகிறதென செய்திகள் வெளிவந்துள்ளன. சர்வதேச நாணய நிதியம் பொதுவாகவே நிபந்தனைகளின்பேரில் தான் கடன்களை வழங்குவது வழக்கம். தனது முதலாம் கட்ட கடனை இலங்கைக்கு வழங்கும்போது இப்படியான பல நிபந்தனைகளை விதித்திருந்தது.
இதன்படி அரசாங்கத்தின் வரித்திணைக்களம் வரியிறுப்பில் மாற்றங்களைக் கொண்டுவந்து திறைசேரியின் வருமானத்தை அதிகரிக்கவேண்டுமென்பது ஒரு நிபந்தனை. ஆனால் பெரும் தனவந்தர்களையும், நிறுவனங்களையும், அரசியல்வாதிகளின் நண்பர்களையும் விட்டுவிட்டு ஏழைத் தொழிலாளர்களிடமிருந்து அதிக வரியை ஈட்ட அரசாங்கம் போட்ட திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு தோன்றவே சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் திண்டாடுகிறது.
ஏற்கெனவே நாணய நிதியம் கூறியதுபோல் இரண்டாம் கட்ட கடனுதவியை வழங்குவதற்கு முன்னர் அரசாங்கத்தின் வரியிறுப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இரண்டாம் கட்ட உதவி வழங்கப்படுமெனக் கூறியிருந்தது. இதன் பிரகாரம் அரசாங்கத்தின் பதிவேடுகளைப் பரிசீலித்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்குப் பொறுப்பான அதிகாரி பீற்றர் ப்ரூவெர் அடுத்த கட்ட நிதியை வழங்குவதற்கெனத் தம்மிடம் ஒரு திட்டவட்டமான கால அட்டவணை தற்போது இல்லை என அறிவித்துவிட்டார். இலங்கை அளித்த வாக்குறுதியின்படி அதன் வரியிறுப்பில் 15% துண்டு வீழ்கிறது எனவும் மக்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் நிலுவையாக இருக்கும் வரிப்பணத்தையே அரசினால் அறவிடமுடியாமலிருக்கிறது எனவும் ப்ரூவெர் கூறியிருக்கிறார். “இலங்கையின் வரி நிர்வாகம் மிகவும் தரம் குறைந்தது மட்டுமல்லாது அறவீடும் மிகவும் குறைவாக இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்ட கடனை வழங்குவதற்கு முன்னர் அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தை ஆராய கடந்த ஒரு வாரமாக நாணய நிதியத்தைச் சேர்ந்த நிபுணர்கள் கொழும்பு வந்திருந்தார்கள். கடந்த மார்ச் மாதம் உறுதியளித்தபடி முதலாம் கட்ட $330 மில்லியன்களை அது இலங்கைக்கு வழங்கியிருந்தது. இரண்டாம் கட்ட கடனை அது வழங்குவதற்கு முன் இலங்கையில் பல பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என அது நிபந்தனையை விதித்திருந்தது. வரியிறுப்பைச் சீர்திருத்தி திறைசேரியின் வருமானத்தை அதிகரித்தல், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தல், அந்நியச் செலாவணி நிர்வாகத்தைச் சீர்செய்து டொலர் சேமிப்பை அதிகரித்தல் போன்றவை இந்நிபந்தனைகளில் முக்கியமானவையாகும். வெளிநாட்டுப் பணியாளர்களினால் கிடைக்கும் பணம், சுற்றுலாத்துறை, ஏற்றுமதி போன்றவற்றால் டொலர் சேமிப்பில் சில முன்னேற்றங்களைக் கண்டிருந்தாலும் வரியிறுப்பு, செலவீனம் விடயங்களில் இலங்கை எதிர்பார்த்த அளவு முன்னேற்றத்தைக் காணவில்லை. இதை அவதானித்த நாணய நிதிய அதிகாரிகள் கட்னின் இரண்டாம் கட்ட உதவியைத் தாமதப்படுத்தக்கூடிய சாத்தியமுண்டெனக் கூறியிருக்கிறார்கள்.
இதே வேளை இலங்கை ஏற்கெனவே இந்தியா, சீனா போன்ற நாடுகளிடமிருந்து பெற்ற கடன்களை மீளச் செலுத்துவதில் சில தளர்வுகளைக் கேட்கும்படி கடன் கொடுத்த நாடுகளைக் கேட்கும்படி (restructuring) நிதியம் பரிந்துரைத்திருந்தது. இந்தியா இக்கோரிக்கைக்கு இணங்கியிருந்தாலும் சீனா இன்னும் முரண்டுபிடித்துக்கொண்டிருக்கிறது. இவற்றில் முன்னேற்றம் கண்டால் சர்வதேச நாணய நிதியம் அடுத்த கட்ட உதவி பற்றி யோசிக்கலாம் எனக் கூறப்படுகிறது.