இலங்கை | சமையல் வாயு விபத்துகள் – பின்னணி என்ன?
-ஒரு விளக்கம்
வாயு புத்திரன்

இலங்கையில் சமீபத்தில் வீடுகளில் சமையல் வாயுக் கொள்கலன் (சிலிண்டர்) வெடிப்பு விபத்துக்கள் நடைபெற்று வருவதாகவும் இதற்கு காரணம் அங்கு சமையல் வாயு விநியோகம் செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களில் (Laugfs Gas மற்றும் LItro Gas) ‘லிற்றோ காஸ்’ நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் கொள்கலன்களே ‘வெடிக்கின்றன’ எனவும் செய்திகள் வெளிவருகின்றன. உண்மையில், ஊடகங்கள் கூறுவதைப் போல இக்கொள்கலன்கள் ஒருபோதும் வெடிப்பதில்லை எனவும் அவற்றிலிருந்து வாயு கசிவதனால் பாவனையாளர் எதிர்பாராத தருணங்களில் அவை தீப்பற்றிக்கொள்கின்றன எனவும் இப்படி ஏற்படும் விபத்துக்களே அதிகம் எனவும் தெரியவருகின்றன.
இக்கசிவு ஏற்படுவதற்கு ‘லிற்றோ காஸ்’ நிறுவனம் தயாரிக்கும் கொள்கலங்களில் அடைக்கும் வாயுக்களின் (இரண்டு) கலப்பு வீதம் மாற்றப்பட்டமையே காரணம் எனக்கூறி இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (Sri Lanka Standards Institute) பிரதம அதிகாரி ஒருவர் சமீபத்தில் பதவி விலகியிருந்தார். இந் நிலையில் இப் பிரச்சினை பற்றிய பின்னணியை எளிய முறையில் விளக்க முனைகிறது இக்கட்டுரை.
பின்னணி
பல வெளிநாடுகளில் பாவிப்பதைப்போலவே இலங்கையிலும் சமையல் தேவைகளுக்கு திரவமாக்கப்பட்ட பெற்றோலியம் வாயு (Liquified Petrolium Gas (LPG)) பாவிக்கப்படுகிறது. கொள்கலன்களில் திரவாமாக அடைக்கப்பட்டு வீடுகளை அடையும் இவ்வாயு அடுப்புகளோடு இணைக்கப்பட்டு வால்வுகள் திறக்கப்படும்போது வாயு நிலையை அடைவதனால் இலகுவில் தீப்பற்றக்கூடிய ஆவியாக மாறுகிறது. அடுப்புகளினூடு வெளிப்படும்போது அது பாதுகாப்ப்பாக இருக்கிறது.
இலங்கையில் விநியோகிக்கப்படும் LPG வாயு இரண்டு வாயுக்களின் கலவையாகும். ‘புறொப்பேன்’ (Propane) மற்றும் ‘பியூட்டேன்’ (Butane) ஆகிய வாயுக்களை 30% / 70% என்ற அளவையில் கலந்து திரவமாக்கிக் கொள்கலன்களில் அடைத்து விற்கிறார்கள். Laugfs Gas, Litro Gas ஆகிய இரண்டு பிரதான நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து தொகையாக இறக்குமதி செய்யும் புறொப்பேன் மற்றும் பியூட்டேன் வாயுக்களை கொள்கலன்களில் அடைத்து விற்பனை செய்கின்றன.
இவ் வாயுக்களில் புறொப்பேன் வாயு என்பது -42 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் திரவத்திலிருந்து ஆவியாகிவிடும். மாறாக, பியூட்டேன் வாயு -0.4 பாகை செல்சியஸ் வெப்பநிலையில்தான் திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு வருகிறது. இதனால் கனடா போன்ற பெரும்பாலும் குளிர் பிரதேச நாடுகளில் புறொப்பேன் வாயுவே சமையல், BBQ, வீடுகளைச் சூடாக்கும் எரி உலைகள் ஆகிய தேவைகளுக்காகப் பாவிக்கப்படுகிறது. பியூட்டேன் வாயு ஆவியாகுவதற்கு வெளி வெப்பநிலை கிட்டத்தட்ட 0 பாகைக்கு வரவேண்டியிருப்பதால் குளிர் நாடுகளுக்கு இது உதவாது.
இலங்கை போன்ற நாடுகளில் சாதாரண வளி வெப்பநிலை சராசரியாக் 30 பாகை செல்சியஸ் ஆக இருப்பதனால் இங்கு புறொப்பேன் வாயுவைத் திரவ நிலையில் வைத்திருப்பதற்கு குளிரூட்டிய அறைகள் தேவை. அதுவும் -40 பாகை செல்சியஸுக்குக் கொண்டுவருவது மிகவும் சிரமம். புறொப்பேன் வாயு சாதாரண வளி வெப்பநிலையில் ஆவி நிலைக்கு வந்துவிடுவதால் அது அடைக்கப்பட்டிருக்கும் தாங்கிகளிலோ அல்லது கொள்கலங்களிலோ உள்ளே அமுக்கம் (vapour pressure) அதிகமாக இருக்கும். எனவே அத் தாங்கிகள் / கொள்கலன்கள் வெடிக்காமல் இருப்பதற்காக தடித்த உலோகத்தினாலான சுவர்களும் இருக்க வேண்டும். இதற்காக உயர் வெப்பநிலை நாடுகளில் பியூட்டேன் வாயுவையே சமையல் தேவைகளுக்காகப் பாவிக்கிறார்கள். ஆனால் பியூட்டேன் கொள்கலன்களில் உள்ளே, புறொப்பேன் கலன்களினுள் உள்ளது போல, அமுக்கம் குறைவாக இருப்பதனால் புறொப்பேன், பியூட்டேன் வாயுக்களைக் கலந்து பாதுகாப்பாக அடைத்து விற்கிறார்கள். இலங்கை வெப்பநிலைக்குப் பாதுகாப்பான இந்த கலவை 30% புறொப்பேனும் 70% பியூட்டேனுமாகும் என இலங்கையின் தர நிர்ணய நிறுவனமும் நுகர்வோர் விவகார நிர்வாகமும் (Consumer Affairs Authority) தீர்மானித்துள்ளன.
பிரச்சினை
சமீபத்தில் நடைபெற்று வரும் ‘வெடிப்புகளுக்கு’ காரணம் ‘லிற்றோ காஸ்’ நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் கொள்கலன்களில் ஏற்படும் கசிவுகளே எனக் கூறப்படுகிறது. இதற்கு காரணம் அந் நிறுவனம் தனது கலவை வீதத்தில் சில பரிசோதனை ரீதியில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது எனவும் இது சில வேளைகளில் 50% / 50% ஆக இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதை அறிந்திருந்த காரணத்தினால் தான் நுகர்வோர் விவகார நிர்வாக அதிகாரி ஒருவர், எதிர்ப்பிற்காக, சமீபத்தில் தன் பதவியிலிருந்து விலகியிருந்தார். அரச்சங்கத்தின் ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளின் தலையீடு இருந்தமையினாலேயே அவர் பதை விலகினார் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கு காரணம் பெற்றோலிய உற்பத்தி நாடுகள் பலவும் தமது பண்டங்களின் விலைகளை அதிகரித்து விட்டமையால் அவற்றைக் கொள்முதல் செய்வதற்கான வெளிநாட்டு நாணயம் இலங்கையிடம் அருகிவிட்டமையால் இந்த் ஐரண்டு இறக்குமதி நிறுவனங்களும் தமது ‘சிலிண்டர்களின்’ விலைகளை அதிகரிக்கும்படி அரசைக் கேட்டிருந்தன. அரசு இறக்குமதி வரியைக் கொஞ்சம் தளர்த்தியிருந்தாலும் அது போதாது என Laugfs Gas தனது கொள்கலன் உற்பத்தியைச் சுருக்கிக் கொண்டது. அரசியல்வாதிகளின் உதவியுடன் Litro Gas நிறுவனம் தனது கலவை வீதத்தை மாற்றி (ஒப்பீட்டளவில் புறொப்பேனின் விலை குறைவு) ஆபத்தான கலவை வீதத்தில் கொள்கலன்களை உற்பத்தி செய்தது.
பொதுவாக இக் கொள்கலன்களை உற்பத்தி செய்யும்போது அவற்றின் வால்வுகள் , மூடிகள் இறுக்கமாக இருக்க வேண்டும் என்பது தரக்கட்டுப்பாடுகளில் ஒன்று. 30% / 70% கலவை வீதத்தில் உள்ளமுக்கம் குறைவாக இருப்பதால் கசிவுகள் ஏற்படுவது குறைவு. ஆனால் கலவை வீதம் 50% / 50% த்திற்கு மாற்றப்படும்போது உள்ளமுக்கம் அதிகரிப்பதனால் இலகுவில் கசிவு ஏற்படச் சாத்தியமுண்டு. இதனாலேயே பல விபத்துக்கள் (நாளொன்றுக்கு சராசரி 10) சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்டன. கனடா போன்ற நாடுகளில் வாயுக்களின் கசிவுகளை இலகுவாக அறிந்துகொள்ள அவ்வாயுவில் அழுகிய முட்டை மணத்தைத் தரும் ஐதரசன் சல்ஃபைட் (hydrogen Sulphide) வாயுவைக் கலக்கிறார்கள். இலங்கையில் இந் நடைமுறை உள்ளதோ தெரியாது.
இப்போது சில கொள்கலங்களை லிற்றோ காஸ் நிறுவனம் மீளப்பெறுகிறது எனச் செய்திகள் வந்துள்ளன. இருப்பினும் அரசாங்கத்திடம் வெளிநாட்டு நாணயம் அருகிய நிலையில் இருக்குமட்டும் இப்படியான குறுக்கு வழி நடவடிக்கைகள் தொடரும் அல்லது சமையல் வாயு பற்றாக்குறை தொடருமெனவே எதிர்பார்க்கப்படுகிறது.