இலங்கை: கோதாபய விரைவில் நாடு திரும்புவார் – அமைச்சரவைப் பேச்சாளர்
முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச சிஙகப்பூரிலிருந்து விரைவில் நாடு திரும்பவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கோதாபய சிங்கப்பூருக்கு உரிய வழிகளைப் பின்பற்றியே சென்றிருந்தார் எனவும் அவர் யாருக்குப் பயந்தும் தப்பியோடவில்லை எனவும் அமைச்சர் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஆனால் கோதாபாய எப்போது நாடு திரும்புவார் என்பதுபற்றி அவர் அவர் எதையும் சொல்லவில்லை.
இதே வேளை, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தி வருவதோடு போர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனப் போராடிவரும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு (ITJP) சிங்கப்பூரில் தங்கியிருக்கும் கோதாபயவைக் கைதுசெய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இந் நிலையில் கோதாபய மீது அனுதாபம் கொண்ட இலங்கையின் சிங்கள-பெளத்த தேசியவாதிகள் அவர் பாதுகாப்பாக இலங்கைக்குக் கொண்டுவரப்படவேண்டுமெனக் குரல்கொடுத்து வருகிறார்கள்.
ஐ.நா.மனித உரிமைகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட சர்வதேச அதிகாரவரம்பு (Unuversal Jurisdiction) பிரேரணையின் பிரகாரம் ராஜதந்திரப் பாதுகாப்பு அனுகூலத்தை இழந்த கோதாபயவை எந்தவொரு நாடும் கைதுசெய்யலாம் என்ற அச்சத்தில் அவரை உடனடியாக இலங்கைக்கு அழைக்கவேண்டுமென சென்றவாரம் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகரா அரசாங்கத்தைக் கேட்டிருந்தார்.