Sri Lanka

இலங்கை: கனடிய பிரதமரின் ‘இனப்படுகொலை’ கருத்துக்கு எதிராக தூதுவரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்!

மே 18 ஆம் திகதியை ‘இனப்படுகொலை நினைவு நாளாக’ கனடிய அரசு பிரகடனப்படுத்தியமையை எதிர்த்து கொழும்பிலுள்ள கனடிய தூதரகத்தின் முன்னால் அமைதியான கண்டன நிகழ்வொன்று மேற்கொள்ளப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ் மக்களும் பங்குபற்றியிருப்பது குறிப்பிடத் தக்கது.

இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இராணுவத்தாக்குதல்களின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதும் அவர்களது உறவினர்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை எனவும் இப்படுகொலை நிறைவேற்றப்பட்ட மே 18ம் திகதியை ‘இனப்படுகொலை நினைவுநாளாகப்’ பிரகடனப்படுத்துவதெனவும் மே 2022 இல் கனடிய பாராளுமன்றத்தில் ஏகமனதகாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மே 18 2023 இல் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ இத் தீர்மானத்தை மீண்டும் நினைவுபடுத்தியிருந்தார். அத்தோடு இப்படுகொலைக்குக் காரணமான கோதாபய, மஹிந்த ராஜபக்சக்கள் மற்றும் சில இராணுவ அதிகாரிகள் மீது பயணத் தடைகளும் கனடிய அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தன.

கனடியப் பிரதமரின் இவ்வறிக்கை குறித்து ஆட்சேபம் தெரிவித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி கனடிய தூதுவரை அழைத்துக் கண்டித்திருந்தார். இருப்பினும் கனடிய அரசு தனது முடிவில் மாற்றமெதுவுமில்லை என இலங்கை அரசுக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இதை எதிர்த்து இலங்கை அரசின் ஆதரவாளர்கள் சிலர் கனடிய தூதரகத்தின் முன்னால் இக்கண்டன நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தனர். (Pics: Kithsiri de Mel / Daily Mirror)