Chronicles

‘இலங்கை’ கனடாவுக்குப் புலம் பெயர்ந்த கதை

ஊர்க்குருவி

பொறுக்கிய திகதி: ஜூலை 02, 2022

ரொறோண்டோ நகரிலிருந்து சுமார் ஒன்றரை மணி வாகன ஓட்டத்தில் ஒரு கிராமம் புலப்படும். அதற்குப் பெயர் ‘Ceylon’. இப் பெயரை அக் கிராமத்துக்குச் சூட்டியதே ஒரு பெரும் கதை.

நண்பர் ரட்ணா முரளிதரன் இக் கதையை எங்கள் ‘பச்சை வட்டத்தில்’ பதிந்திருந்தார். அதைப் பொறுக்கி இங்கே தருகிறேன்.

Ceylon in Ontario

முரளியின் உறவினர் சிலர் ஒன்ராறியோவின் தென் கிழக்குப் பகுதியிலுள்ள ரோபெர்மோறி (Tobermory) என்னும் இயற்கைசூழ் தலத்திற்கு விடுமுறை யாத்திரை ஒன்றைச் செய்யத் தீர்மானித்தனர். இது ஒன்ராறியோவின் புரூஸ் பெனின்சுலாவில் இருக்கும் ஒரு துறைமுகக் கிராமம். வந்தேறு குடிகளின் ஆக்கிரமிப்புக்கு முன் ஆதிவாசிகளின் பாவனையிலிருந்தது. புரூஸ் தேசிய பூங்கா மற்றும் நடையர்கள் பாதை என்று இயற்கை வழிபாட்டுக்காரர்களை சதா அழைக்கும் ஒரு ரம்மியமான இடம்.

இங்கு போகப் புறப்பட்ட முரளியின் உறவினர்களில் சிலருக்கு திடீரென ஒரு குறுக்குப் புத்தி வந்தது. வழமையான விண்மதி ஆசானின் ஆதரவை ஒதுக்கிவிட்டு கிராமங்களினூடாக மாற்றுப் பாதையொன்றின் மூலம் ரோபெர்மோறிக்குப் பயணமானார்கள். அப்போது அவர்கள் பாதையை மறித்து நின்றதுதான் ‘இலங்கை’.

‘என்ன இப்படி ஒரு காட்டின் மத்தியில் எமது நாட்டின் பெயருள்ள கிராமமா?” – விசாரித்தார்கள். கிடைத்த பதில் இதுதான்:

முன்னர் இக் கிராமத்துக்கு வேறு பெயர் ஒன்று இருந்தது. அப் பெயர் இன்னுமொரு கிராமத்தின் பெயரோடு சேர்த்து குழப்பப்படுவதன் காரணமாக நகராட்சி அலுவலர் இருவர் யோசனை செய்தனர். சாவகாசமாக அவர்கள் இருவரும் ஒரு கடைக்குள் இருந்து மண்டைகளை உடைத்துக் கொண்டிருந்தபோது ஒருவருக்கு அக் கடையின் தட்டில் இருந்த ‘Ceylon Tea’ கண்ணில் பட்டது. ‘சிலோன்’ பற்றி அவர் கேள்விப்பட்டிருக்க வேண்டும். இரண்டாம் உலகமகா யுத்தத்தில் நேசப்படைகளில் பணி புரிந்தவர்களுக்கு சிலோனைத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. பெயரை அமுக்கி விட்டார். அக் கிராமம் ‘Ceylon’ என்ற பெயருடன் இப்போது பூத்துக் குலுங்குகிறது. நல்ல வேளை Sri Lanka என்று பெயர் வைத்து நாறிப் போகவில்லை. இன்னும் ஒரு முப்பது , நாற்பது ஆண்டுகளில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வன்னி, மலையகம் என்று இதற்கு பெயர் மாற்றப்பட்டாலும் ஆச்சரியப்பட வேண்டாம். அப்போது Tobermory கவுன்சிலர் ஒரு தமிழராகவும் இருக்கலாம்.