இலங்கை | ஒன்றுபட்ட இலங்கைக்குள் பிராந்திய சபைகள் – புதிய அரசியலமைப்புக்கான த.தே.கூட்டமைப்பு ஆலோசனை
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கங்களுடன் கூடிய பிராந்திய சபைகளே (Regional Councils) தேவை எனப் புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய முன்மொழிவில் குறிப்பிட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் செயலாளருக்கு நேற்று (ஜனவரி 06) வழங்கிய தமது ஆலோசனைகளில், த.தே.கூட்டமைப்பு பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:
- முழு இலங்கையிலும் சிங்கள்ம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளும் ந்ரிவாக மொழிகளாக இருக்குமென்பதைப் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்க வேண்டும்.
- நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவேண்டும். புதிய அரசியலமைப்பில் ஜனாதிபதியின் கடமை சடங்கு ரீதியாகவும், அது பாராளுமன்றத்துக்கு கீழ்ப்பட்டதாகவும் இருப்பதோடு அப்பதவியில் இருப்பவர் பிரதமரது ஆணைக்குக் கீழ்ப்பட்டுச் செயற்பட வேண்டும். அமைச்சரவைக்குப் பொறுப்பானவராக பிரதம மந்திரியே இருக்க வேண்டும்.
- பாராளுமன்றம் இரண்டு சட்டவாக்க சபைகளைக் கொண்டதாகவும், முதலாவது சபை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டதாகவும், இரண்டாவது சபை பிராந்திய சபைகளின் பிரதிநிதிகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு பிராந்தியஙகளுக்கும் அவ்வப் பிராந்திய முதலமைச்சர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் ஜனாதிபதியால் ஆளுனர்கள் நியமிக்கப்படவேண்டும். அந்நியமனம் தொடர்பான ஆலோசனைகளைப் பிராந்திய சபைகள் வழஙக வேண்டும்.
- பிராந்திய சபைகளுக்கான அதிகாரங்கள் பின்வரும் விடயஙகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்:
- காணி
- சட்டமும் ஒழுங்கும்
- மூன்றாம் நிலையுட்பட்ட கல்வி
- சுகாதாரம்
- வீடமைப்பு
- விவசாயம்
- நீர்ப்பாசனம்
- மீன்பிடி
- விலங்குப் பெருக்கம்
- மீள்குடியமர்வும் புனர்வாழ்வும்
- உள்ளூராட்சி
- பிராதிய பொதுச் சேவைகள்
- பிராந்திய காவல்துறை
- மத, கலாச்சார நிர்வாகம்
- இதர சமூக-பொருளாதார, கலாச்சார விவகாரங்கள்
- கூட்டுறவு, கூட்டுறவு வங்கிகள், வரிவிதிப்பு
- மத்திய மானியம்
- சர்வதேச மற்றும் உள்ளக கடன்கள், மானியங்கள்
- வெளிநாட்டு நேரடி முதலீடுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 21 பக்க ஆலோசனைக் கொத்தின் 5ம் பக்கத்தில் மேலும் பல விடயங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இக் கொத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளோட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரின் கையெழுத்துக்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.