News & AnalysisOpinionSri Lankaமாயமான்

இலங்கை | உருவாகும் மூன்றாவது கூட்டணி; வீரவன்ச ரணிலோடு இணைக்கப்படுகிறார்.


முறெத்தெட்டுவ தேரரின் மூலோபாயம்

மாயமான்

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். மக்களின் ஆணையைப் பெறாது பாராளுமன்றத்திற்குள் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று சூளுரைத்த ரணில் திடீரென நியமன உறுப்பினராக்கப்பட்டு பாராளுமன்றத்தில் பிரவேசிக்கிறார. அரசியலில் இதுவெல்லாம் சகஜம்ப்பா என்கின்றவர்கள் இப்படியான பல சகஜங்களை அடுத்த இரண்டு வருடங்களில் எதிர்பார்க்கலாம்.

ராஜபக்ச ஆட்சியை 6.9 மில்லியன் வாக்குகளால் ஆட்சியில் அமர்த்திய அதே இயந்திரம் தான் இக் காய்நகர்த்தல்களின் பின்னாலும் இருக்கிறது. இதில் எதிர்பாராத ஒரு புதிய காய் விக்கிரமசிங்க.

இம் மூன்றாவது அணி மூன்று குதிரைகளால் இழுக்கப்ப்டும் ஒரு தேர். முதலாவது, ராஜபக்ச ஆட்சியில் தீவிர வெறுப்போடு இருக்கும் சிங்கள பெளத்த மேலாண்மை. இரண்டாவது, முன்நாள் இடதுசாரிகள் தொழிற்சங்கங்கள் சார்ந்த, மேற்கிற்கு எதிரான குதிரை. மூன்றாவது மேற்கிற்கு ஆதரவைத் தரும் குதிரை. இஸ்ரேலில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான கூட்டணி போன்றதே இதுவும். சித்தாந்த ரீதியில் இவை மூன்றும் மூன்று திசைகளில் ஓடுபவை. எனவே இவர்களிடம் அதிகம் எதிர்பார்க்கத் தேவையில்லை. ஆனால் இத் தேர், சரியான பாதையில், சரியான வேகத்தில் எல்லாக் குதிரைகளும் ஒரே திசையில் ஓடுமானால், நாட்டுக்கும், தமிழருக்கும் சில அநுகூலமான விளைவுகள் ஏற்படலாம்.

சிங்கள பெளத்த மேலாண்மை அணி

ஆட்சியைக் கைப்பற்ற ராஜபக்ச தரப்பிடமிருந்த ஒரே ஆயுதம் ‘புலிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றியமை’ என்பது மட்டும்தான். அதன் கூர்மை 2015 இல் மழுங்கடிக்கப்பட்டுவிட்டது. 2020 இல் அது கூர் தீட்டப்பட்டது ‘நல்லாட்சி’ அரசு நாட்டை மீட்டுத் தந்த தேசிய வீரர்களைப் பழிவாங்கிவிட்டது என்பததை வைத்துத்தான். அந்த ஆயுதத்தைத் தீட்டித்தந்ததில் விமல் வீரவன்ச, முறெத்தெட்டுவ ஆனந்த தேரர் ஆகியோருக்குப் பெரிய பங்குண்டு.

தேரரைப் பொறுத்த வரையில் ஆட்சி பீடம் ஏறுவதில் அக்கறை இல்லையெனினும் பெளத்த பீடமே தலைமை அரசாங்க ஆலோசனை அலுவலகமாக இருக்கவேண்டுமென்பதுவே அவரது விருப்பம். சிங்கள பெளத்த தேசியவாதத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டுமென்பது அவரது கட்டளை. தாமரை மொட்டுக்களைக் கொடுத்து வாக்காளர் வரிசைகளில் நின்று ‘ஊக்கமளித்த’ மகாசங்கத்தினர், தேர்தல் முடிந்த கையோடு வீட்டுக்கு அனுப்பப்பட்டமை தேரரைக் கடுப்பேற்றியது. அதில் நியாயமுமுண்டு. சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதியின் அலுவலகத்தில் நிரந்தர ஆசனத்தை எதிர்பார்த்த தேரருக்கு ஏமாற்றம். அவர் இருக்க வேண்டிய இடத்தில் வியத்மக எனப்படும், ஜனாதிபதியின் ‘பேராசிரியர் ஆலோசனைக் குழு’ இருந்தமை இன்னும் கடுப்பு.

வியத்மக ஆலோசனையின் முதல் விளைவு தான் 20 வது திருத்தம். ஜனாதிபதியிடம் அதிகாரம் குவிக்கப்படுவதை எதிர்த்த தேரர் கோதாவினால் நைசாகக் கழட்டி விடப் பட்டார். பதிலுக்கு கோதாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த ராஜபக்ச குடும்பத்தையுமே நிரந்தரமாகக் கழட்டிவிட தேரர் திட சங்கற்பம் பூண்டு கொண்டார்.

வீரவன்சவுக்கு அதிகார ஆசை அதிகம். சுகவீனமுற்றுவரும் மஹிந்த ஓய்வு பெற்றதும் தன்னைப் பிரதமராக்கவேண்டுமென்பதே அவரது எதிர்பார்ப்பு. மஹிந்தவின் மனைவி ஷிராந்தியின் இரும்புக் கரங்கள் அதை அனுமதிக்கப் போவதில்லை. நாமல் ராஜபக்சவே அடுத்த பிரதமர் என அவர் ‘பாஞ்சாலி சபதம்’ எடுத்துக் கொண்டவர். இதைப் பார்த்துவிட்டுத்தான் பசில் ராஜபக்ச 10 வீதம் போதுமென்று ஒதுங்கி வாழ்ந்தார். இதற்குள் பவர் ஸ்டாராக வந்துதித்த சீனா தன் நீண்டகால வாரிசாக நாமல் ராஜபக்சவைத் தத்தெடுத்துக் கொண்டது. தனது கதிரை பறிபோகிறது என்பதை உணர்ந்த வீரவன்ச, மஹிந்தவை அகற்றிவிட்டுக் கட்சித் தலைமையை கோதாபயவிடம் கொடுக்கவேண்டுமென உரக்கக்கூற ஆரம்பித்ததோடு ஆளும் கட்சியிலிருந்து அவரது ஆசனத்துக்கான குழி பறிப்பும் ஆரம்பமாகிவிட்டது. வாய்ப் பேச்சில் வல்லவரான வீரவன்ச தன்னோடு 11 சிறிய கட்சிக்காரர்களையும் இணைத்துக்கொண்டார். கற்றோர் காமுறும் திச விதாரண ஐயா கூட வீரவன்ச பாராயணம் பாடத் தொடங்கி விட்டார். இடதுசாரி நாமத்துடன், அங்கிடு தத்தி வாசுதேவ நாணயக்காரவும் வீரவன்ச முகாமில் படுத்தெழும்புகிறார்.

துறைமுக நகர விடயம், கோவிட் தடுப்பூசி நிர்வாக விடயம் ஆகியன முறெத்தெட்டுவ தேரரைக் கடுப்பின் எல்லைக்குக் கொண்டு சென்றன. மீண்டும் ஒரு தடவை அவர் ஜனாதிபதிக்கு ஓலை அனுப்பிப் பார்த்தார். அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும், வெள்ளை வேட்டியுடன் தாமரை மலர்ச்செண்டுகளைத் தாங்கிச் சென்று பிக்குகளின்காலில் வீழ்ந்தெழும்பிய கோதாபயவும், 20A யினால் உரமூட்டப்பட்ட கோதாபயவும் வித்தியாசமானவர்கள் என உணர்ந்ததும் தேரரின் மனம் அடியோடு மாறிவிட்டது. அவர் தனது நகர்வுகளைத் திட்டமிட்டுச் செயற்படுத்துகிறார்.

தேரரது செயல்கள் எதுவும் மறைமுகமாகச் செய்யப்படவில்லை என்பது நல்ல விடயம். அவர் இதுவரை விடுத்த பகிரங்க எச்சரிக்கைகளின் பிரகாரமே அவை நடக்கின்றன. வியத்மக பேராசிரியர்களைப் போலல்லாமல் அவையெல்லாம் யதார்த்தமானவையாக உள்ளன். அதிலொன்று தான் செத்தனே சிவனே என ஒதுங்கியிருந்த விக்கிரமசிங்கவை இழுத்து வந்தமை.

கோவிட்டின் மரண அடியால் பதகளித்துப் போயிருக்கும் ராஜபக்ச அரசு கதிகலங்கிய நிலையில் செய்வதறியாது அடுத்தடுத்துத் தடுக்கி விழுந்துகொண்டிருக்கிறது. படலை திறந்திருக்க வேலி பாய்ந்தோடும் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அது தேடிப்பிடித்து வைத்திருக்கிறது. எல்லோரும் ‘வைச்சுக்கொண்டு வஞ்சகம்’ செய்யாத வகையினர் தான்.

இலங்கைக்கு வருமானமீட்டித் தரும் வகையறாக்களில் முக்கியமானவை ஆடை ஏற்றுமதி, சுற்றுலா, வெளிநாடு சென்ற பணியாளர் வருமானம். இவ் வருமானத்துக்காக இலங்கை தந்கியிருப்பது மேற்கத்தைய அல்லது மேற்கைச் சார்ந்த நாடுகளை. ஆனால் அவற்றை உதாசீனம் செய்துவிட்டு சீனாவின் ஆலோசனைப்படி நடந்துகொள்ளும் அரசுக்கு உடனடியாகக் கொடுக்கவேண்டிய மாற்று மருந்து (antidote) சீனாவை வெட்டி மேற்குடனான உறவைப் பலப்படுத்துவது. இதன் மூலமே மக்கள் வயிற்றில் பால் வார்த்து கைகளினால் புள்ளடிகளைப் போடவைக்கலாம். மேற்கை இலாவகமாகக் கையாளவல்ல சாமர்த்தியசாலி விக்கிரமசிங்க. எனவே அவர் இந்தக் கூட்டணியின் நடுக் குதிரை. இந்த இடத்தில் சாரதியாக மங்கள சமரவீர வந்து குதித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்ல்லை. இந்த இடத்தில் சந்தர்ப்பவாத மேற்குநாடுகளும், இந்தியாவும் தேரர்களின் காலில் விழுவதையும், இந்தியாவையும் (கிழக்கு கொள்கலன் முனையம்), அமெரிக்காவையும் ( மில்லேனியம் சலெஞ்ச் ஃபண்ட்) திட்டித் தீர்த்த வாசுதேவம் விதாரண, வீரவன்ச போன்றோர் பூகோள அரசியலின்பின்னால் ஒதுங்கி ஒளிவதையும் நாம் கைதட்டி வரவேற்க வேண்டும். நிலைமை அப்படி – இது ஒரு ராஜதந்திர நகர்வு என்பதை நாம் எப்போதும் மனதில் கொண்டிருக்க வேண்டும்.

ஆப்பிழுத்த கோதாபய ராஜபக்ச அரசு

சீனா வீசும் அப்பங்களை எடுத்துக்கொண்டுவந்து கோதா அரசு, சீனா ஆப்பு வைத்துப் பிளந்த மரத்தில் உல்லாசமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. வால் மட்டுமல்ல முக்கியமான உறுப்புக்களும் ஆபத்தான இடத்தில் மாட்டியிருக்கின்றன. அப்பச் சுவையில் அரசு அடிக்கடி பல்லிளிக்கிறது. தப்பிக்கொள்ள வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இவ்வளவு முதலீடுகளைச் செய்த சீன அரசு ஆட்சி மாற்றத்தை அனுமதிக்கப் போவதில்லை. எனவே அதற்கிருக்கும் ஒரே, பழக்கப்பட்ட பாடம், இராணுவ ஆட்சிக்கான வழி வகைகளைச் செய்து கொடுப்பது. மியன்மாரைப் போல சிங்கள இராணுவம் அந்தளவு மொக்குகளில்லை. துறைமுகநகரம் பொன் கொழிக்கும் பூமியாக வந்ததும் தமது துன்பமெல்லாம் தீரும் என்ற நம்பிக்கையுடன் கோதா அரசு இயங்குகிறது எனத் தெரிகிறது. எனவே அதுவரையாவது ஆட்சி மாற்றத்தை அனுமதிக்காது, தேர்தலை நடத்துவதைப் பின்போட கோதா அரசு முனையலாம் அல்லது கட்டளையிடப்படலாம்.

எதிர்க் கட்சி

சஜித் பிரேமதாச ஒரு charismatic தலைவரல்ல. அவரைப் பார்த்தால் பலருக்கும் பரிதாபம் தோன்றுவது வழக்கம். நல்லவர் என்று கூறுகிறார்கள். அவர் ஒரு ‘இளிச்சவாயனாக’ நடிக்கிறாரா அல்லது உண்மையில் இளிச்சவாயனா தெரியாது. அவரை ராஜபக்ச கோஷ்டி தமக்கு கறிவேப்பிலையாகப் பாவிக்கிறது என்றும் கருத்துண்டு. அடுத்த தேர்தலில் நிச்சயமாக அவரால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. சரத் ஃபொன்சேகா “போர் வெற்றியை’த் தனதாக்காமல் விட்டவர். அணில் தப்பி விட்டது. அவரது சந்தர்ப்பத்தை இழந்துவிட்டார். சரத் ஃபொன்சேகா, சஜித் பிரேமதாசா இருவரதும் வேட்டிகள் கழராமல் பார்த்து அநுப்பியவர்கள் தமிழர்கள். “பயங்கரவாதிகளிடமிருந்து தம்மைக் காப்பாற்றியமைக்காகவே தமிழர்கள் 2010 இல் தனக்கு வாக்களித்தார்கள்” எனக் கூறும் சரத் ஃபொன்சேகாவை சிங்களவர்களே நம்பமாட்டார்கள். இவரை விட்டால், இப்போது அக் கூட்டணியில் இருக்கும் தகமையுள்ள ஒருவர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க மட்டுமே. தீவிர சிங்கள தேசியவாதிகளைக் கவரக்கூடியவர். ஒரு professional politician எனக் கூறலாம். யதார்த்தவாதி. கைகள் கறைபட்டதாக இதுவரை கேள்விப்பட்டதில்லை. எதிர்க் கட்சி அவரை முன்தள்ளப் போவதில்லை.

முறத்தெட்டுவ தேரர் விக்கிரமசிங்கவை ஒரு figure head ஆக மட்டுமே வைத்திருப்பார். இன்னும் இரண்டு வருடங்களில் எதிர்க்கட்சிக் கூட்டணி உடைந்து சிதறுண்டுபோக, சில வேளைகளில் சமாகி ஜன பலவேகய கட்சியிலும், இதர பங்காளிக் கட்சிகளிலிருந்தும் பலர் இந்த மூன்றாவது கூட்டணிக்குத் தாவலாம். ஆனாலும் வீரவன்ச தலைமை இந்த மூன்றாவது கூட்டணியின் ஆட் சேர்ப்பிற்குப் பலத்த சவாலையே தரும். அதையும் மீறி தேரர் தன் நகர்வுகளை ஸ்மார்ட் ஆகச் செய்வாரானால், சம்பிக்க ரணவக்கவைப் பொது வேட்பாளராக நியமிக்க வேண்டும்.

தமிழர் நிலைமை

தமிழருக்கு இரண்டு சாத்தியங்கள் உண்டு. ஒன்று ஆட்சி மாற்றம்: புதிய ஆட்சியில் ரணில் குதிரை ஒடுமட்டும் அதன் கயிறுகள் மேற்கின் கையில் இருக்கும். அதனால் அதிகாரப் பரவலாக்கம் முன்வைக்கப்படுவதும் இனச்சிறுபான்மையினருக்கு சாதகமான நிலையை, குறைந்தது நல்லாட்சி கால நிலையையாவது, அது பெற்றுக்கொடுக்கும். அதை எதிர்ப்பவர்களும் அதே முகாமில் இருப்பதால் ‘நாட்டைக் காப்பாற்றவென’ அவர்கள் வீதிக்கு இறங்க மாட்டார்கள். தமிழருக்கு ஏதாவது அனுகூலம் கிடைக்குமானால், அது ஒரு பக்க விளைவு மட்டுமே.

இரண்டாவது சாத்தியம் சர்வாதிகார ஆட்சி: சர்வாதிகார ஆட்சி தப்பிப் பிழைக்க ஒரே வழி சீனாவையும் அமெரிக்காவையும் ஏக காலத்தில் சமாளிக்வேண்டும். அதற்காக இரண்டிற்கும் விட்டுக்கொடுப்புக்களைச் செய்தாக வேண்டும் (எகிப்தைப் போல). மேற்கின் பங்காளியான இந்தியாவைத் திருப்திப்படுத்துதலும் அதில் ஒரு முக்கிய பங்கு. வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு அதிகாரப் பரவலாக்கத்தை வழங்குவதோடு, திருகோணமலை துறைமுக நிர்வாக விடயங்களில் இந்தியாவுக்கு சலுகைகள் வழங்குவது முதற்படியாக இருக்கலாம். என்ன இருந்தாலும் அம்பாந்தோட்டைத் துறைத் துறைமுக விடயத்தில் முதலில் கோட்டை விட்டது இந்தியாவே. இன்னும்ம் 97 வருடங்களுக்கு அது சீனாவின் கைகளில் தான் இருக்கப்போகிறது. எனவே திருகோணமலையோடு அது திருப்தியடைந்து கொள்ள வேண்டியதுதான். தேர்தல் அரசியலை எதிர்கொள்ளத் தேவையில்லை என்பதால் ‘ஐயோ நாட்டைப் பிரித்துக் தமிழருக்குக் கொடுத்துவிட்டார்கள்’ என்று கத்துகிற கோஷ்டி தெருவுக்கு இறங்காது. (இராணுவம் இறங்கினால் அது வேறு விடயம்). எனவே மேற்கின் தொல்லைகளைச் சமாளித்து, சீனாவின் அப்பங்களையும் பெற்றுக்கொண்டு நிம்மதியாக வாழத் தமிழர்களுக்கு தீர்வொன்றை வழங்குவது நல்லதென ராஜபக்ச அரசு தீர்மானிக்கலாம். அதுவுமொரு பக்க விளைவு. என்ன இருந்தாலும் துணிச்சலானவர்களால் மட்டுமே தமிழருக்குத் தீர்வு வழங்க முடியும்.

இந்திய முயல் தூங்கிக்கொண்டிருந்த போது, சீன முயல் இலங்கையில் வீடும் கட்டிவிட்டது. சீனா இலங்கையில் குடியேறியதால் தமிழர்களுக்கு பாரிய நந்மையச் செய்திருக்கிறது. இந்தியாவால், இனியும் ஈழத் தமிழர்களை ‘சிறப்பு முகாம்’ வகைக்குள் வைத்திருக்க முடியாது. ஈழத் தமிழர்களைப் பகடைக் காயாகப் பாவித்து இலங்கைக்குள் தலையை நுழைப்பதால் மட்டுமே இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம். எனவே தமிழருக்கு ஒரு திணிக்கப்படும் தீர்வை அது பெற்றுக்கொடுக்கும். அதுவும் இன்னுமொரு பக்க விளைவு.

நேரடி விளைவுகளாகக் கிடைத்த பல அரிய சந்தர்ப்பங்களைக் கோட்டை விட்டுவிட்ட எமக்கு பக்க விளைவுகளே இப்போதைக்கான தீர்வு.