Sri Lanka

இலங்கை: உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையம் – வர்த்தமான அறிவிப்பு!

இலங்கை அரசினால் இன்று (ஜனவரி 02) வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையம் (Commission for Truth, Unity, and Reconciliation ) ஒன்றை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை பற்றிய அறிவித்தலொன்றை சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது.

38 பக்கங்களில் வெளியிடப்பட்ட இதன் ஆங்கிலப் பிரதியில் இருந்து இவ்வாணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள நோக்கம், அதிகாரம், கடமைகள் பற்றிய சிறு குறிப்புகளை இங்கு தருகிறோம்.

ஆகக் குறைந்தது 7 பேர் முதல் 21 அங்கத்தவர்களைக் கொண்ட இவ்வாணயத்தை ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேர்களில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார். ஆந்த ஆணையர்கள் பல்சமூகங்களிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படும் மூவருக்கும் அரசினால் முழுநேரச் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ள, தகுதியான சகல இலங்கையர்களும் அரசியலமைப்புச் சபைக்கு தமது விண்ணப்பங்களை அனுப்பலாம். இவ்வாணையர்கள் தவறுகளை இழைக்கும் பட்சத்தில் அவர்கள் சட்டநடவடிக்கைகளுக்குட்படுத்தப்படாது பாதுகாப்பக்கப்படுவர்.

ஆணையத்தின் ஆயுட்காலம் 5 வருடங்களாகும். ஜனாதிபதி விரும்பினால் தலைவரையோ அல்லது எந்த ஆணையரையோ மாற்ற அனுமதியுண்டு. ஆணையத்தின் தவணையை, ஜனாதிபதி விரும்பின், நீட்டிக் கொள்ள முடியும்.

வர்த்தமான அறிவிப்பு வெளியாகி மூன்று மாதங்களுக்குள் ஆணையம் தொழிற்பட ஆரம்பிக்கும். ஒவ்வொரு அரை மாதத்திலும் இவ்வாணயம் கூடும். சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அதன் செயற்பாடுகள் மொழிமார்றம் செய்யப்படும். மாத இறுதியில் அதன் இடைக்கால அறிக்கை மும்மொழிகளிலும் வெளியிடப்படும்.

இவ்வாணையம் கொழும்பைத் தலைமையிடமாகவும் தேவையேற்படின் பிராந்திய அலுவகங்களை ஏற்படுத்தும் வசதிகளையும் கொண்டிருக்கும். இவ்வாணையத்தின் நிதித் தேவைகளை ஆரம்பத்தில் இலங்கை அரசும் தொடர்ந்து வெளிநாடுகளிடமிருந்து பெறுவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாணயத்தின் தகவல் சேகரிப்பு முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைக்காத பட்சத்தில் சட்டரீதியான பொறிமுறைகளைப் பாவித்து தகவல்களையோ அல்லது ஆதாரங்களையோ பெற ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. அதே வேளை இத் தகவல்கள் அல்லது ஆதாரங்கள் வெளிநாடுகளில் இருப்பின் அவற்றைப் பெறுவதற்கு அவ்வவ் நாடுகளின் சட்டப் பொறிமுறைகளை உதவியாகப் பெற ஆணையம் முயற்சிக்கும்.

  • 1983-2009 வரையிலும், அதற்குப் பின்னரும் இலங்கையில் மக்களுக்கு இழைக்கப்பட்டதான கொடுமைகளை, உயிர்கள், சொத்துக்கள் இழப்புக்களை, மனித உரிமை மீறல்களை இடப்பெயர்வுகளைப் பற்றிய முறையீடுகளையும், குற்றச்சாட்டுகளையும் விசாரித்து அறிக்கை தயாரிக்க வேண்டும்;
  • இவ்வறிக்கை உண்மையானதாகவும், சரியானதாகவும், பாரபட்சமற்றதானதாகவும், முழுமையானதாகவும் இருக்கவேண்டும்;
  • இவ்விசாரணைகளைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது பக்கத்து குறைகளைச் சொல்ல சந்தர்ப்பம் கொடுத்து அவற்றைத் தீர்க்கவல்ல வழிமுறைகளை ஆணையம் சிபார்சு செய்யவேண்டும்;
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவேண்டி இருப்பின் அவற்றை காணாமற் போனவர்களுக்கான அலுவலகத்திற்கு சிபார்சு செய்ய வேண்டும்;
  • வடக்கு-கிழக்கில் நடைபெற்ற இனப்பிரச்சினையைக் காரணமாகக் கொண்டு சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், படுகொலைகள், சித்திரவதைகள், ஈவிரக்கமற்ற மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகள், பாலியல் வதைகள், துஷ்பிரயோகம், கடத்தல், பணயத்திற்காகக் கைதுசெய்தல், திட்டமிட்டுக் காணாமலாக்குதல், காரணமின்றிக் கைதுசெய்து தடுத்து வைத்தல், தெரிந்துகொண்டே ஆயுதங்களைத் தவறான தேவைகளுக்குப் பயன்படுத்துதல் மூலமாக உயிர்கொலைகள் அல்லது உயிராபத்துகள் ஏற்பட்டிருந்தால் அவற்றைப்பற்றிய உண்மைகளைக் கண்டறிய வேண்டும்;
  • பாலகர்களை ஆயுத இயக்கங்களிற் சேர்த்தல், பிரதேச மக்களை வலிந்து இடம் பெயரச் செய்தல்,தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ மக்களை வறுமைக்குள் தள்ளுதல், மதம், இனம், மொழி, பிறந்த இடம், அரசியல் சார்பு அல்லது சாதி காரணமாக மக்களைப் பாரபட்சமாக நடத்தியிருத்தல் காரணமாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்;
  • இப்படியான கொடுமைகளை யார் திட்டமிட்டார்கள், இவற்றுக்கு யார் ஆலோசனை வழங்கியிருந்தார்கள், யார் நெறிப்படுத்தியிருந்தார்கள், யார் ஆணையிட்டிருந்தார்கள் என்பதை இனம்கண்டு அறிவிக்க வேண்டும்;
  • இவற்றினாற் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அமைதியாக வாழ்வதற்கான வழிமுறைகளைச் சிபார்சு செய்வதுடன் தகுதியானவர்களுக்கு வாழ்வாதார முயற்சிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதுடன் இச்சம்பவங்கள் மீளவும் நிகழாதவாறு தடுக்கும் வழுமிறைகளுக்கான சிபார்சுகளையும் செய்ய வேண்டும்.

இச்சிபார்சுகள் எவர் மீதும் குற்றம் காண்பதற்கோ அல்லது அவர்களைத் தண்டிப்பதற்கென்றோ மேற்கொள்ளப்படுபவையல்ல. தேவையேற்படின் இக்குற்றவாளிகள் மீது சட்டநடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் சட்டமா அதிபருக்கே உண்டு. பாதிக்கப்பட்டவர்களுக்கும், முன்வரும் சாட்சியங்களுக்கும் தேவையான உதவிகள், நிவாரணம், உளவியல் ரீதியான ஆதாரம் உட்பட, ஆகியவற்றை அரசு செய்யும்.

இச்சிபார்சுகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் ஏற்படுத்துவது அரசியல்வாதிகளின் கடமை.

ஆணையம் செயற்பட ஆரம்பித்து ஒரு மாதத்தில் முதலாவது தற்காலிக அறிக்கையை அது ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கும். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஒரு கண்காணிப்புக் குழு சிபார்சு செய்யப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தும்.