இலங்கை இராணுவத்தினரின் மீது பிரித்தானியாவும் பயணத்தடை விதிக்கலாம்?

பிரித்தானிய வெளி விவகார அமைச்சர் ராறிக் அஹமெட் பிரபுவின் இலங்கை வரவைத் தொடர்ந்து, அமெரிக்காவைப் போல், இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக பயணத் தடைகளை விதிக்க பிரித்தானியா முன்வரக்கூடும் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
வெளிவிவகார, பொதுநலவாய அபிவிருத்தி அலுவலக ராஜாங்க அமைச்சர் அமாண்டா மில்லிங் இதுபற்றிப் பாராளுமன்றத்தில் பேசும்போது, இலங்கை தொடர்பாக பிரித்தானிய அரசு தொடர்ச்சியாக அமெரிக்கா மற்றும் நேச நாடுகளின் கருத்துக்களைக் கேட்டு வருவதாகவும் அதே வேளை உலக மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாகத் தடைகளைப் பரிந்துரைக்கும் பிரித்தானிய அலுவலகம் இலங்கை சம்பந்தப்பட்ட ஆதாரங்களைச் சேர்த்து வைத்திருப்பதாகவும் அதன் வரைவுகளுக்குட்பட்ட வகையில் அதன் பரிந்துரைகளின்படி நடவடிக்கைகளை எடுக்கமுடியுமெனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை இரணுவத்தினரின் பயணத்தடை தொடர்பாக கடந்த செவ்வாயன்று (ஜனவரி 25), தொழிற்கட்சி அங்கத்தவர் சியோபெயின் மக்டோனா பாராளுமன்றத்தில், வெளிவிவகார, பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கான அமைச்சின் செயலாள்ர் எலிசபெத் ட்றஸ் அவர்களிடம் “ஷவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்த பயணத்தடையின் விளைவுகள் பற்றி எப்படியான மதிப்பீடுகளைச் செய்திருக்கிறீர்கள்” என எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே கன்சர்வேட்டிவ் அமைச்சர் மில்லிங் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
பெப்ரவரி 2020 இல், ஜெனெரல் ஷவேந்திர சில்வா மீது பயணத்தடைகளை விதித்திருந்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில், இளைப்பாறிய மேஜர் ஜெனெரல் உதய பெரேரா மீதும் பயணத்தடைகள விதித்திருந்தது.
ஜெனிவாவில் வரவிருக்கும் அடுத்த மனித உரிமைகள் ஆணைய அமர்வில், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மீதான தீர்மானங்களைக் கொண்டுவரும் மைய நாடுகளின் தலைமை பிரித்தானியாவிடம் இருப்பதால் அடுத்துவரும் அமர்வுகளின்போது, இலங்கை இராணுவத்தின்மீது பல்விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்லாமென இலங்கை இராணுவத் தலைமைப்பீடம் கரிசனை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.
பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூடிய கடமை பிரபு அஹமெட்டுக்கு இருப்பினும், அவர் பிரபுக்கள் சபையின் பிரதிநிதியாக இருப்பதால் பொதுச்சபையின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கத் தேவையில்லை எனவும் அதனால் அவரது அமைச்சின் செயலாளருக்காக அமைச்சர் மில்லிங் பதிலளித்திருந்தார் எனவும் கூறப்படுகிறது.
அமைச்சர் அமாண்டா மில்லிங் ஆசியாவுக்கான ராஜாங்க அமைச்சராவார்.
இதே வேளை, மாயா சிவஞானம் எனும் தமிழ்ப்பெண், வெளிவிவகார, பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சின் இந்துசமுத்திரத்துக்கான தென்னாசிய பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றுவது தமிழருக்குச் சாதகமான முடிவுகளுக்குக் காரணமாக அமையலாமென தென்னிலங்கை அரசியல்வாதிகள் அச்சம் தெரிவ்த்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
தனது இலங்கை வரவை முடித்துக்கொண்டு வெளியேறும்போது பிரபு ராறிக் அஹமெட் “மனித உரிமை மீறல்கள், நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக இலங்கை செய்வதற்கு அதிகம் இருக்கிறது” என்ற வகையில் இஅல்ங்கையை அதிகம் சீண்டாமல், சாமர்த்தியமாகப் பதிலளித்திருந்தார்.