இலங்கை | இரண்டு தடுப்பூசிகளை எடுத்த 300 பொலிசாருக்கு மீண்டும் கோவிட் தொற்று?

இரண்டு தடுப்பூசிகளையும் எடுத்து சில வாரங்களுக்குப் பின்னர் 300 பொலிசாருக்கு மீண்டும் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் தொற்று ஏற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவருக்கும் தீவிரமான நோயறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து பொலிஸ் திணைக்களம் மருத்துவ நிபுணர்களுக்கு எழுதியதாகவும் அதற்கு “தடுப்பு மருந்துகள் தீவிர நோய்த் தொற்றையும், இறப்பையும் தவிர்க்குமே தவிர மீள் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் என்று கூறமுடியாது” எனப் பதிலளித்துள்ளதாகவும் தெரிகிறது.

தொற்று ஏற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்போது பல்வேறு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே வேளை, நாளொன்றுக்கு 300,000 தடுப்பூசிகள் இலங்கை பூராவும் வழங்கப்பட்டு வருகின்றன எனவும், இதுவரை, 30 வயத்துக்கு மேற்பட்டவர்களில் 5 மில்லியன் பேர் முதலாவது தடுப்பூசியைப் பெற்றிருக்கிறார்கள் எனவும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.