இலங்கை | இம்மாதம் (மார்ச்) பாராளுமன்றம் கலைக்கப்படலாம்?
பொதுஜன பெரமுன தனியே போட்டியிடத் தீர்மானம்?
இம் மாதம் (மார்ச்) இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் தேர்தல்களை நடாத்துவதற்கு ஆளும் கட்சி உத்தேசித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இம் முறை தனித்துப் போட்டியிடவிருப்பதாக பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவாசம் கூறியதாக கொழும்பு வட்டார ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தனித்து போட்டியிட்டு வெல்லும் வகையிலேயே ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச தமது கட்சியை உருவாக்கியுள்ளார் எனவும், உடனடியாக மக்களிடம் சென்று அவர்களது அபிப்பிராயத்தை அறியக் கட்சி விரும்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தப்படி பாராளுமன்ற ஆயுட்காலமாகிய 5 வருடங்களில் அரைவாசியை நிறைவு செய்தால் அதஹிக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டு. இதன் பிரகார்ம் பெப்ரவரி 20 இற்குப் பிறகு ஜனாதிபதி பாராளுமன்றத்தை எந்நேரமும் கலைக்க முடியும்.
இதே வேளை ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரது அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று (4) மேலும் சில அமைச்சர்கள் இடமாற்றம், பதவி உயர்வுக்கு ஆளாக்கப்படுவார்கள் எனத் தெரியவருகிறது.
தேர்தல் ஒன்றைச் சந்திக்க எதிர்க்கட்சிகள் இன்னும் தயாராக இல்லை என்ற காரணத்தால் கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச உடனடியாகத் தேர்தல்களை வைத்துவிட வேண்டுமெனத் தீர்மானித்துள்ளதாக கடந்த சில வாரங்களாகச் செய்திகள் வெளிவந்திருந்தன.