இலங்கை | இன்று (16) முதல் 30 வரை, ஊர்வலங்களுக்கு முற்றாகத் தடை


எதிர்க்கட்சி ஒழுங்கு செய்திருந்த கண்டனப் பேரணியை முடக்கியது அரசு!

சுகாதார அமைச்சின் ஆலோசனைப்படி இன்று முதல் நவம்பர் 30 வரை சகல மக்கள் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் அல்லது உள்ளரங்குகளில் 10 பேருக்கு மேல் கூட முடியாது.

இன்றும் நாளையும் (நவம்பர் 16, 17) எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கண்டனப் பேரணியை அனுமதிக்கப் போவதில்லை என பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேகர நேற்றுத் தெரிவித்திருந்தார்.

“ஏனிந்தப் பேரணி? நாட்டை அபிவிருத்தி செய்யவா? அல்லது மக்களுக்கு நிவாரணம் வழங்கவா? இல்லை. மேலும் நோயைப் பரப்பி நாட்டை முடக்குவதற்காகவே. நாங்கள், பொலிஸ், இதை அனுமதிக்கப் போவதில்லை” என அமைச்சர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் வீரசேகர நேற்றுத் தெரிவித்திருந்தார். அதற்கமைய இன்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கமைய இத் தடை விதிக்கப்பட்டது.

“யார் என்ன சொனாலும் நான் அதை அனுமதிக்கப் போவதில்லை. பொலிஸ் திணைக்களத்துக்குப் பொறுப்பானவன் என்ற வகையில் நான் இதை அனுமதிக்கப் போவதில்லை. சுகாதார அதிகாரிகளே நீதிமன்றத்துக்கு தகவல்களை வழங்குகின்றார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையே பொலிஸ் நடைமுறைப்படுத்தும்” என அவர் நேற்றுத் தெரிவித்திருந்தார்.

நாட்டில் கோவிட் தொற்று ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. ஆனாலும் சில புதிய கொத்தணிகள் உருவாகியிருக்கின்றன என்ற அச்சத்தின் காரணமாக இக் கட்டுப்பாடு அறிவிக்கப்படுகிறது என பணிப்பளர் அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார். ஏற்கெனவே பொதுமுடக்கத்துக்கெனப் பிரயோகிக்கப்பட்ட நடைமுறைகளை அப்படியே இம்முறையும் அரசாங்கம் நடமுறைப்படுத்தவுள்ளதெனெத் தெரிகிறது. நவம்பர் 30ம் திகதி இக் கட்டுப்பாடுகள் மீளவும் பரிசீலிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் புதிய அறிவிப்பின் பிரகாரம், பொதுவிடங்களில் கூடுதல், கூட்டங்களை ஒழுங்குசெய்தல், நிகழ்வுகளை ஒழுங்குசெய்தல் காலவரையின்றித் தடைசெய்யப்பட்டுள்ளது. உரிய முறையில் பெறப்பட்ட முன் அனுமதியுடன் பெறப்பட்ட நிகழ்வுகள் மாத்திரம் அனுமதிக்கப்படுமென இவ்வறிவிப்பு தெரிவிக்கிறது.

அதே வேளை முன்னர் 30 வீத கொள்ளளவுடன் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்த தேகாப்பியாச நிலையங்கள் இப்போது 50% த்துக்கு உயர்த்தப்பட்டுள்ளன. க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தர வகுப்புக்களுக்கான பிரத்தியேக ‘ரியூஷன்’ வகுப்புக்கள் 50% கொள்ளளவில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்களின் கொள்ளளவு 25 இலிருந்து 50% மாக உயர்த்தப்பட்டுள்ளது.



பணியிடங்கள் மற்றும் முன்பள்ளிகள் வழமை போல முழுமையாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. வழிபாட்டிடங்களில் தனிப்பட்டவர்களாக மட்டுமே வழிபட முடியும். பொதுப் போக்குவரத்து வாகனங்களில் இருக்கைகளில் இருப்பவர்கள் மட்டுமே பயணிக்க முடியும். திருமண நிகழ்வுகளில் மூன்றிலொரு பங்கு கொள்ளளவில், அதியுச்சம் 100 பேர் மட்டுமே பங்குகொள்ள முடியும்.

இதே வேளை, நாடு முழுவதும் திடீரென பாதுகாப்பு தடையரங்குகள் நடைமுறப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாகப் பாராளுமன்றத்தில் பேசிய பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேகரா கோவிட் தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதற்காக பொலிசார் உதவி செய்வதாகத் தெரிவித்தார்.

இதற்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், பல எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் உரத்த குரல்களில் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். அரசாங்கம் திடீரென விதித்த தடையால், கொழும்பில் நடைபெறவிருந்த கண்டனப் பேரணிக்கு மக்கள் பங்குபற்றுவதை அரசாங்கம் தடுத்துவிட்டது என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இக் கண்டனப் பேரணிக்கான அனுமதியை எதிர்க்கட்சி நீதிமன்றத்தில் பெற்றிருந்தும் இப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டாமெனப் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று பொலிசார் மக்களுக்கு அறிவுறுத்தியதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் வீரசேகரா, “சுகாதார அமைச்சு நிர்வாகிகள் நடைமுறைப்படுத்தும் வழிகாட்டல்களுக்கு அமையவே பொலிஸ் உதவிகளைச் செய்துவருகிறது. ஆனால் நோய்ப் பரவலை ஊக்கப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சி நடந்துகொள்கிறது. அரசாங்கத்தையும், மக்களையும் அழித்துவிடுவதே எதிர்க்கட்சியின் நோக்கம்” எனப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.