இலங்கை: இன்று அரசாங்கம் கவிழலாம்?
எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு 113 வாக்குகள் கிடைக்கும் சாத்தியமுண்டு
இன்று (20) எதிர்க்கட்சியினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவிருக்கும் அரசின்மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 113 வாக்குகள் கிடைக்கும் சாத்தியங்கள் உண்டெனவும் இதனால் அரசாங்கம் ஆட்சியிலிருந்து கவிழ்க்கப்படலாமெனவும் செய்திகள் கொழும்பில் செய்திகள் பலமாக அடிபடுகின்றன.
மொத்தம் 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிக்கு ஆதரவாக 113 வாக்குகள் கிடைத்தால் போதுமானது. இதற்காக, பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகய கடந்த சில நாட்களாக முன்னாள் ஆளும் கட்சிப் பங்காளிகள் கட்சிகள் மற்றும் இதர எதிர்க்கட்சிகளிடையே கையெழுத்து வேட்டையில் இறங்கியிருந்தன. தற்போதுள்ள சூழ்நிலையில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக 118 வாக்குகள் உள்ளன. சமாகி ஜன பலவேகயவிடம் 54 வாக்குகள் உள்ளன. சுயாதீனமாக அமர்ந்திருக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உட்பட்ட முன்னாள் பங்காளிக்கட்சிகளின் உறுப்பினர்கள் நிபந்தனையின் பேரில் எதிர்க்கட்சியுடன் இணைந்து வாக்களிக்கத் தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாடெங்கும் நடைபெற்றுவரும் வீதி மறியல் போராட்டங்கள் மற்றும் காலிமுகத் திடல் போராட்டம் ஆகியன ஆளும் கட்சி உறுப்பினர்கள் மீதான மக்கள் எதிர்ப்புகளை மேலும் ஊக்குவித்து வருவதால் அரசாங்கத்துக்கு ஆதரவாகக் கட்சி மாறிய உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க உறுப்பினர்களது வீடுகளை மக்கள் முற்றுகையிடுகிறார்கள். இக் காரணத்தால் அவர்களில் பலர் அரசாங்கத்தை விட்டு விலகுவதற்குத் தீர்மானித்துள்ளனரெனவும் அறியப்படுகிறது. புதிய அமைச்சரவையில் இடம் பெறாத முன்னாள் அமைச்சர்களில் சிலரும் இவ்வாறு அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கலாமெனவும் நம்பப்படுகிறது.
எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு 113 வாக்குகள் கிடைக்கும் பட்சத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்கும்படி சபாநாயகர் எதிர்க்கட்சியைக் கேட்கலாம். அதற்கு எதிர்க்கட்சி இணங்காதபோது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல்கள் நடத்தப்படும்.
புதிய தேர்தல்களைச் சந்திக்க ராஜபக்ச அரசு தயாராக இல்லாத காரணத்தால் தமக்குச் சாதகமான சூழ்நிலை ஏற்படுமட்டும் சமயோசிதமாக சிறுபான்மை அரசொன்றில் எதிர்க்கட்சியாக இருப்பதற்கு அது முயற்சித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. இதே வேளை 19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த மூன்றில் இரண்டு (150) ஆசனங்கள் தேவை. இதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுக்காமல் வைத்திருப்பதன் மூலம் ஜனாதிபதி தனது அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். அதே வேளை, நாட்டில் தொடரும் பிரச்சினைகளுடன் சிறுபான்மை அரசினால் ஆட்சி நடத்த முடியாது. எனவே ராஜபக்சக்கள் தம்மை மீண்டும் தமது சாதுரியங்கள் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு இரண்டு வருடங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையில் இந்தத் தடவை ஆட்சி மாற்றத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியங்களும் உண்டு. மாறாக எதிரணியினால் 150 ஆசனங்களைப் பெற முடியுமானால் 20 ஆவது திருத்தம் மாற்றப்பட்டு ஜனாதிபதியின் அதிகாரங்கள் பிடுங்கப்படுமானால் ராஜப்கசக்களுக்கு அது ஆபத்தான ஒன்றாகவும் மாறலாம்.