NewsSri Lanka

இலங்கை: இந்திய $1 பில்லியன் கடன் மேலும் தாமதம்

ஏமாற மறுக்கும் இந்தியா?

மூழ்கிக்கொண்டிருக்கும் இலங்கையைக் காப்பாற்றும் பொருட்டு இந்தியாவின் $ 1பில்லியன் கடனுதவியைப் பெற இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கொள்ளவிருந்த இந்தியப் பயணம் இரண்டாவது தடவையாகவும் பின்போடப்பட்டிருக்கிறது.

பெப்ரவரி 25 அன்று டெல்ஹிக்கு மேற்கொள்ளப்படவிருந்த இப் பயணம் இறுதி நேரத்தில்ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணங்களை அரசாங்கம் வெளியிடவில்லையாயினும் இந்தத் தடவை இந்தியத் தரப்பே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் திருகோணமலை எண்ணைக் குதங்கள் மற்றும் மன்னார் எண்ணைவள ஆராய்ச்சி ஒப்பந்தம் போன்றவற்றை முன்வைத்து இந்தியா இலங்கைக்கு அவசர $1.4 பில்லியன் கடனுதவியை வழங்கியிருந்தது. ஆனாலும் இவ்வொப்பந்தங்களை நிறைவேற்றும் விடயத்தில் இழுத்தடிப்புகளை மேற்கொள்வதஹ்ன் மூலம் இலங்கை இந்தியாவை மேலுமொரு தடவை ஏமாற்ற முயற்சிப்பதாகக் கருதிய இந்தியா இந்தத் தடவை கடன் கொடுப்பதில் மிகவும் இறுக்கமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

கடந்த சில நாட்களாக நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் நடமாட்டம் குறைந்திருப்பதும் இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்தின் கடும்போக்காளர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருவதும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பூடகமாகத் தெரிவிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக அமைச்சர் நாமல் ராஜபக்ச “சர்வதேச நாணய நிதியத்திடன் பேசுவது குறித்து தமக்கு ஆட்சேப்ணை எதுவுமில்லை” எனத் தெரிவித்திருப்பது கவனிக்கத் தக்கது. அதாவது இந்தியாவிடம் கடன் பெறுவதைவிட சர்வதேச நிதியத்திடம் போவது பரவாயில்லை என்ற கருத்து கடும்போக்காளர்களிடம் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையினால் வழங்கப்பட்ட பணமுறிகள் (bonds) முதிர்நிலைக்கு வருவதால் அவற்றின் சொந்தக்காரர்களுக்கு $ 1பில்லியன் டாலரைத் திருப்பிக் கொடுக்க அரசு தயாராக இருக்க வேண்டும். அதற்கான பணம் தற்போது இலங்கையிடம் இல்லை. இதற்காக அது இந்தியாவிடமோ அல்லது சர்வதேச நாணைய நிதியத்திடமோ சென்றேயாகவேண்டிய நிலை இருக்கிறது. இவ்விரண்டுக்குமே இலங்கையின் கடும்போக்கு சிங்கள தேசியவாதிகளும் இடதுசாரிகளும் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இதே வேளை திருகோணமலை எண்ணைக் குதங்கள் மற்றும் மன்னார் குடாவில் எண்ணைவள ஆராய்ச்சி ஆகியன தொடர்பாக இந்தியாவுக்கு வழங்கப்பட்ட உத்தரவாதங்களை நிறைவேற்றாது இலங்கை தொடர்ந்தும் இழுத்தடித்து வருவது இந்தியாவை அது இன்னுமொரு தடவை ஏமாற்ற முயற்சிக்கிறது என்ற எண்ணம் இந்தியாவிடம் இருப்பதாகத் தெரிகிறது.

இக் காரணங்களினால் நிதி அமைச்சரின் இந்தியப் பயணம் தொடர்ந்தும் தடைப்பட்டு வருகிறது என அறியப்படுகிறது.