News & AnalysisSri Lanka

இலங்கை | இணைய இணைப்பிற்காக கிராமப்புற மாணவர்கள் கூரைகளிலும் மரங்களிலும் ஏறும் பரிதாபம்!

அரசாங்கத்தின் கோபுர வரி காரணம்?

கோவிட் தொற்றுக் காரணமாக, பல மேற்கு நாடுகளில் போல, நேரடி வகுப்பறைக் கல்வி மறுக்கப்பட்ட நிலையில் பாடசாலை மாணவர்கள் இணையவழிக் கல்வியை மேற்கொள்வதற்காக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புற, வசதிபடைத்த மாணவர்களுக்கு இது அனுகூலமாக இருக்கிறது எனினும், வறிய, வசதிகள் குறைந்த கிராமப் புற மானவர்களுக்கு இது மிகவும் சிரமங்களைக் கொடுத்து வருகிறது எனத் தெரியவருகிறது.

கிராமப் புறங்களில் வீடுகளுக்கான இணையப் பரிமாற்றம் பொதுவாக பரிவர்த்தனைக் கோபுரங்கள் மூலம் நடைபெறுகிறது. நகர்ப் புறங்களில் நிலக்கீழ் செப்புக் கம்பிகள், கேபிள், ஃபைபர் ஒப்டிக் கேபிள்கள் மூலம் வீடுகளுக்கு இச் சேவைகள் வழங்கப்படுவது வழக்கம்.

மேற்குநாடுகளைப் போலவே இலங்கையிலும் இப் பரிவர்த்தனை சேவைகள் இலாபநோக்கம் கொண்ட சில நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இந் நிறுவனங்கள் தமக்கான பரிவர்த்தனைக் கோபுரங்களை நிறுவிக்கொள்வது மட்டுமல்லாது அரசாங்கத்துக்கு நெருக்கமானவர்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் மட்டுமே இவ்வுரிமங்கங்களும் வழங்கப்படுகின்றன. சிறிய நிறுவனங்கள் போட்டிக்கு வராமல் இருப்பதற்காக இப் பரிவர்த்தனைக் கோபுரங்களுக்கு பெருந்தொகையான வரியை அரசாங்கம் அறவிடுகிறது. கிராமப் புறங்களில் வாடிக்கையாளர் அதிகமில்லாமையாலும் இருப்பவர்கள் பலரும் வசதி குறைந்தவர்களாக இருப்பதனாலும், இணைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் கிராமங்களை உதாசீனம் செய்கின்றன. இருக்கும் சில கோபுரங்களும் அதிக வலுவுடன் செயற்படாமலிருக்கின்றன. வலுவை அதிகரித்தால் நிறுவனங்களுக்குச் செலவு அதிகம், இலாபம் குறைவு என்பதால் இப்படிச் செய்கின்றன. கோபுரங்கள் வலுவுடன் இணையப் பரிவர்த்தனையைச் செய்யாவிட்டால், பாவனையாளர்களது இணைய இணைப்பு சீராகவும் தரமாகவும் இருப்பதில்லை.

இந் நிலையில் அரசாங்கம் கோவிட் தொற்றைக் காரணம் காட்டி மாணவர்களை இணையவழிக் கல்விக்கு நிர்ப்பந்திக்கிறது. பரிவர்த்தனைக் கோபுரங்களின் எண்ணிக்கையையோ, அல்லது வலுவையோ அதிகரிக்காமல் மாணவர்களுக்கு இப்படியான நிர்ப்பந்தங்களை வழங்குவதன் மூலம் அவர்களை மேலும் துன்பத்துக்குள்ளாக்குகின்றது என்கின்றனர் பெற்றோர்.

அரசாங்கத்தின் கோபுர வரி காரணமாக பல நிறுவனங்கள் வருமானம் குறைவான கிராமப் புறங்களில் கோபுரங்களை நிறுவுவதைக் குறைத்து நகர்ப்புறங்கலில் மட்டுமே தமது சேவைகளை விஸ்தரிக்கின்றனர். இதனால் கிராமப்புற மக்கள் கைவிடப்பட்ட நிலையில், கோவிட் தொற்றினால் அவர்கள் மேலும் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் ‘நியூஸ் ஃபெர்ஸ்ட்’ தொலைக்காட்சியில் குழந்தைகள், இணைய இணைப்பைப் பெற, கூரைகள் மீதும், மரங்கள் மீதும் ஏறித் தமது இணையவழி வகுப்புக்களில் கலந்துகொள்ளவேண்டிய துயரமான காட்சிகளை ஒளிபரப்பு செய்தது. இதே வேளை அரசாங்கம் 2020 இல் மட்டும் கோபுர வரியாக 1.4 பில்லியன் ரூபாய்களை ஈட்டியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. கோபுரங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவே பெருமளவு வரி அறவிடப்படுகிறது எனவும் அறியப்படுகிறது.