இலங்கை | ஆளும் கட்சி கூட்டணி உடைகிறது – 11 கட்சிகள் தனியாக மேதினக் கொண்டாட்டம்?

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 சிறிய கட்சிகள் இந்த வருடம் நடைபெறவிருக்கும் இலங்கை மக்கள் முன்னணி யின் (SLPP) மேதின ஊர்வலத்தில் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளன.

கடந்த வியாழனன்று பாராளுமன்ற உறுப்பினர் ரைறன் அல்லிஸ் இல்லத்தில் விமல் வீரவன்ச தலைமையில் நடைபெற்ற இரகசியக் கூட்டமொன்றில் இம் முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதற்குப் பதிலாக இக் கட்சிகள் தனியான மேதினக் கொண்டாட்டமொன்றை ஒழுங்குசெய்யவுள்ளதாகவும் தெரியவருகிறது.

அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சிறிலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர், ராஜாங்க அமைச்சர் தயாசிறீ ஜயசேகரா,அத்துரலிய ரத்தன தேரர், கெவிந்து குமாரதுங்க, டீ.ஈ.டபிள்யூ குணசேகர, அசங்கா நவரட்ண, பேரா.திச விதாரண, ரைறான் அல்லிஸ் மற்றும் இதர கட்சித் தலைவர்களும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

தேர்தலிற்குப் பின்னர், விமல் வீரவன்ச இலங்கை மக்கள் முன்னணிக்குப் பகிரங்கமாகச் சவால் விடுவது இதுவே முதல் தடவை. இலங்கை சுதந்திரக் கட்சியும் வீரவன்ச தலைமையின்கீழ் இணைந்திருப்பது இக் குழுவுக்கு வலுச் சேர்த்திருக்கிறது என நம்பப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக நாட்டு மக்கள், தொழிற்சங்கங்கள், பெளத்த மகாசங்கங்கள் ஆகியன அரசாங்கத்துக்கெதிராகக் குரலெழுப்பி வரும் வேளையில் இக் கட்சிகளின் உடைவு ஆளும் கட்சிக்குப் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.