இலங்கை: ஆர்ப்பாட்டக்காரரை எதிர்கொள்வதில் அரசு பாரபட்சம் – அம்பிகா சற்குணநாதன்

தெற்கில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை உரிமைகள் வடக்கு கிழக்கு மக்களுக்கு மறுக்கப்படுகின்றன

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை உரிமைகள் விடயத்தில் வடக்கு -கிழக்கு மக்கள் அரசினால் பாரபட்சப்படுத்தப்படுகிறார்கள் என முன்னாள் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“தெற்கிலும் வடக்கிலும் சமீபத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது பாதுகாப்பு படையினர் தம்வசம் வைத்திருந்த ஆயுதங்களைப் பார்க்கும்போது இது அப்பட்டமாகத் தெரிகிறது” என கொழுஇம்பிலிருந்து வெளிவரும் ஊடகமான ‘இக்கோணொமி நெக்ஸ்ட்’ ஊடகத்துக்கு அளித்த் பேட்டியின்போது செல்வி சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

அம்பிகா சற்குணநாதன்

“கொழும்பில் இராணுவத்தினர் குண்டாந்தடிகளையும், கேடயங்களையும் வைத்துக்கொண்டிருக்கும் அதே வேளை வடக்கில் அவர்கள் துப்பாக்கிகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொள்கிறார்கள். வடக்கு பரவலாக இராணுவமயப்படுத்தப்பட்டிருப்பதும் இதற்குக் காரணம். கொழும்பில் மக்கள் சுயமாகத் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கவும், அரசாங்கக் கட்டிடங்களுக்குள் செல்லவும் அனுமதிக்கப்படுகிறார்கள் அதே வேளை வடக்கில் மக்கள் தெருக்களிலேயே நிறுத்தப்பட்டு அப்பால் போக அனுமதிக்கப்படுவதில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறன்று (20) யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் வருகை தந்திருந்த மஹிந்த ராஜபக்ச அவர்களைச் சந்தித்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்கவென வாகனங்களில் சென்ற காணாலாக்கப்பட்டோரின் உறவினர்களை ஆயுதமேந்திய இராணுவத்தினரும் பொலிசாரும் வழிமறித்துத் தடுத்திருந்தனர். காணாமலாக்கப்பட்டோரின் உறவினருக்கும் பாதுகாப்புப் படையினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதும் இக் காட்சிகள் காணொளிகளாக உலகெங்கும் பரவியிருந்தன.

இச் சம்பவம் பற்றி ‘இக்கொணோமி நெக்ஸ்ட்’ ஊடகம் பொலிஸ் தரப்பில் வினவியபோது “எதிர்ப்பைத் தெரிவிக்க எல்லோருக்கும் உரிமையுண்டு. ஆனால் அதைச் செய்வதற்கான சரியான இடத்தைத் தெரிந்தெடுக்க வேண்டும். இது ஒரு அழைக்கப்பட்ட நிகழ்வு. அங்கு கோவிட் கட்டுப்பாடுகள் மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டன. வீதிகளில் ஆர்ப்பட்டங்களைச் செய்திருக்கலாம் ஆனால் மக்கள் நிகழ்வுக்குள் செல்வதற்கு முயற்சித்தார்கள். அதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிரதமரைச் சந்திப்பதற்கு மக்களை அனுமதிக்க மறுப்பதன் மூலம் இம்மக்களின் அவல நிலையை அரசு எப்படி உதாசீனம் செய்கிறது எனபது வெளிப்படையாகத் தெரிகிறது. இம்மக்கள் உண்மையும், நீதியும் கேட்டுத் தமது உணர்வுகளைத் தெரிவிப்பதற்காகவே அங்கு சென்றார்கள். அரசியலமைப்பின் 12(1) கட்டளையின் பிரகாரம் அவர்களுக்கு அந்த அனுமதியுண்டு. அவர்களுக்கு அச் சந்தர்ப்பத்தை மறுத்ததன் மூலம் இம் மக்களின் கோரிக்கைகளை அரசாங்கம் செவிமடுக்கப் போவதில்லை; இந்த அரசு இம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமென எதிர்பார்க்கவும் முடியாது” என சற்குணநாதன் மேலும் தெரிவித்தார்.

இவ்வார்ப்பட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் காணாமலாக்கப்பட்டோர் குடும்பங்களிலிருந்து வந்த வசதி குறைந்தவர்களுமாவார். பாதுகாப்புப் படைகளின் மிகவும் மோசமான மிரட்டல்களையும், உயிரச்சுறுத்தல்களையும், அழுத்தங்களையும் பொருட்படுத்தாது, 2017 இலிருந்து இவர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.

இதே வேளை யாழ் பொருளாதார அபிவிருத்தி மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ” 30 வருடங்களாக எமது நாட்டில் நிலவிய இருண்ட காலத்தில் வடக்கில் பல உயிர்கள் பறிக்கப்பட்டும் அதன் அபிவிருத்தி தடைப்பட்டுமிருந்தது. மே 18, 2009 இல் அந்த இருண்ட காலத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவந்தோம். அதிலிருந்து வடக்கு மக்களுக்கு அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட அனைத்தையும் திருப்பித்தருவதோடு அவர்கள் இழந்த வாழ்க்கையை மீட்டுத்தருவதற்காக நாம் செயற்பட்டு வருகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டச் சம்பவத்தில் கலந்துகொண்டமைக்காக வலிகாமம் கிழக்கு உள்ளூராட்சிச் சபைத் தலைவர் ரி. நிரோஷ் மற்றும் சாவகச்சேரி உள்ளூராட்சிச் சபை உபதலைவர் எஸ்.மயூரன் ஆகியோர் இன்று (24) நுணாவில் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு பணிக்கப்பட்டுள்ளனரென அறியப்படுகிறது.