இலங்கை | ஆசிரியர் வேலை நிறுத்தம் முடிவடைந்தது


வட-கிழக்கு மாகாணங்களில் அதிக மாணவர்கள், ஆசிரியர்கள் திரும்பினர்

இலங்கையில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்றுவரும் ஆசிரிய வேலை நிறுத்தங்களினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் வியாழனன்று (21) திறக்கப்பட்டன. 5,059 பாடசாலைகளில் முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையிலான வகுப்புகள் மீள ஆரம்பித்தபோது 200க்கும் குறைவான மாணவர்களே சமூகமளித்திருந்தனர் என கல்வியமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மாணவர் போராட்ட ஆரம்பம்

இலங்கையிந் வரலாற்றிலேயே மிக நீண்ட காலமாக நடைபெற்றுவந்த ஆசிரிய வேலைநிறுத்தம் திங்களன்று (25) முடிவடைந்தது. ஆசிரியர்களுக்கிடையேயுள்ள சம்பள ஏற்றத்தாழ்வை நீக்கி அவர்களது சம்பளங்களை உய்ர்த்தும்படி கோரி, தலைமை ஆசிரியர்களும், இதர ஆசிரியர்களும் மூன்று மாதங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கொறோணாப் பெருந்தொற்றுக் காலத்தில் இவ் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதனால் மாணவர்கள் இணையவழி மூலம்தொலைதூரக் கல்வியைப் பெறமுடியாது அவஸ்தைப்பட்டிருந்தனர். ஆனாலும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமட்டும் பணிகளைப் புறக்கணித்து வந்தனர்.

ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசாங்கம் அவர்களது சம்பள உயர்வை, நான்கு தடவைகளில் நான்கு வருடங்களில் நிறைவேற்றுவதாக முதலில் வாக்களித்திருந்தது. ஆனாலும் தொழிற்சங்கங்கள் அதற்கு இணங்க மறுத்துவிட்டன. பின்னர், அதை இரண்டு தடவைகள், இரண்டு வருடங்கள் என அரசாங்கம் குறைத்தது. ஆனாலும், தொழிற்சங்கங்கள் சகல சம்பள உயர்வும் ஒரே வருடத்தில் கொடுக்கப்படவேண்டுமென விடாப்பிடியாக நின்றுவிட்டதால் இரு தரப்புகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, நாட்டின் கொறோணாத் தொற்றும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது என அரசு கருதுவதால் பாடசாலைகளைத் திறக்க அது உத்தரவிட்டிருந்தது.

இதன் பிரகாரம் வியாழனன்று நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகள் திறக்கப்பட்டன. அமைச்சர் குணவர்த்தனவின் அறிக்கையின் பிரகாரம், 5,059 பாடசாலைகளில் 98% திறக்கப்பட்டன எனவும், 69 % மான பாடசாலைகளில் அதிபர்கள் சமூகமளித்திருந்ததுடன் 200க்கும் குறைவான மாணவர்களும் சமூகமளித்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதே வேளை மொத்தத்தில் 52% ஆசிரியர்களும், 26% மாணவர்களும் சமூகமளித்திருந்தனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள்

அதே வேளை, கிழக்கு மாகாணத்தில் 67% மான அதிபர்களும், 45% மான ஆசிரியர்களும், 39% மான மாணவர்களும் சமூகமளித்திருந்தனர். வடமாகாணத்தில் இத்தரவுகளை அமைச்சர் குறிப்பிடவில்லை என்றாலும் மொத்தத்தில் வடாகு கிழக்கில் அதிக பாடசாலைகளில் ஆசிரிய, மாணவர்களின் பங்கேற்பு இருந்ததென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பீட்டளவில் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருமே மிகக் குறைந்தளவிலேயே சமூகமளித்திருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

99 நாட்களாக நடைபெற்றுவந்த வேலைநிறுத்தத்தை அக்டோபர் 25 இல் முடிவுக்குக் கொண்டுவருவதாக ஆசிரிய தொழிற்சங்கங்கள் கூறியிருந்ததைத் தொடர்ந்து அரசு வியாழனன்று பாடசாலைகளைத் திறக்க உத்தரவிட்டிருந்தது. பாடசாலைகளைத் திறப்பதற்கு கட்சி பேதமின்றி அனைவருமே இணங்கியிருந்ததாக அமைச்சர் குணவர்த்தனா தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும் அதிபர்களது கோரிக்கைகளான வாகன உத்தரவுப் பத்திரம் மற்றும் கைத்தொலைபேசி உபரிப்பணம் (allowances) ஆகிய விடயங்கள் இன்னும் பேசித் தீர்க்கப்படாமையால அனைத்து அதிபர்களும் வேலைக்குத் திரும்புவார்களா என்பது சந்தேகமே எனவும் பேசப்படுகிறது.கொத்தலாவல இராணுவக் கல்லூரி

கொறோணாப் பெருந்தொற்று தீவிரமாக இருந்தபோது அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவிருந்த உயர் கல்விச் சீர்திருத்தத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமே ஆசிரியர்களையும் ஆதரவாகக் களத்தில் குதிக்க வைத்தது. அதுவரை ஆசிரியர்களது கோரிக்கைகள் அதிகம் வலுவாக முன்வைக்கப்படவில்லை. பல்கலைக் கழக மாணவர்களது ஆக்ரோஷமான போராட்டம் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்குள்ளாகி முடக்கப்பட்டபோது ஆசிரியர் போராட்டம் முன்னணிக்கு வந்தது. பல்கலைக் கழக மாணவர்களை அடக்கியதுபோல தொழிற்சங்கங்களின் பின்னணியோடு இயங்கிய ஆசிரியர் போராட்டத்தை அரசினால் இலகுவாக ஒடுக்க முடியவில்லை. ஆனாலும் காலத்தால் இழுத்தடிக்கப்பட்டதாலும் பொருளாதாரமும் மோசமாக இருப்பதாலும் மாணவர் போராட்டத்தைப் போல ஆசிரியர் போராட்டமும் இலகுவாக முடித்துவைக்கப்படுகிறது.