இலங்கை: அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்தின் பிரதமர் கரு ஜயசூரிய?

நேற்று காலை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச எதிர்க்கட்சி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாசவிடம் பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிக்கும்படி உத்தியோகபூர்வமாகக் கேட்டுக்கொண்டதையடுத்து முன்னாள் சபாநாயகரான கரு ஜயசூரியவை அவர் பரிந்துரைத்திருக்கிறார் எனவும் இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பெளத்த பீடாதிபதிகளுட்பட ஏறத்தாள அனைத்துக் கட்சிகளும் இதை ஏற்றுக்கொண்டுள்ளன எனவும் அறியப்படுகிறது.

கட்சித் தலைவர் என்ற முறையில் இப் பதவியைத் தான் ஏற்றுக்கொள்வது சரியல்ல எனவும் அமையப் போவது ஒரு சர்வகட்சி அரசாகையால் பொதுவான ஒருவரையே நியமிக்கவேண்டுமென பிரேமதாச கூறியதையடுத்து கரு ஜயசூரியாவின் பெயரை ஜன பலவேகயவின் தேசியப்பட்டியல் பா.உ. மயந்த திசநாயக்கா முன்மொழிந்துள்ளதாகத் தெரிகிறது. கரு ஜயசூரிய இதற்கு இணங்கும் பட்சத்தில் தான் பதவியிலிருந்து விலகி அவ்விடத்துக்கு தேசியப்பட்டியல் மூலம் ஜயசூரியாவை நியமிக்கும்படி திசநாயக்கா கேட்டுள்ளார். இதே வேளை ஜன பலவேகயவின் இன்னுமொரு உறுப்பினரான ஹரின் ஃபெர்ணாண்டோவும் தனது பதவியைக் காலி செய்வதற்கு முன்வந்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நெருக்கடியான சூழலிலிருந்து மீள்வதற்கு இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் 13 அம்சத் திட்டமொன்றை நேற்று (07) அனைத்துக் கட்சித் தலைவர்களுக்குச் சமர்ப்பித்திருந்தது. இதன் பிரகாரம் நேற்று ஜனாதிபதி ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாசவை அழைத்து பிரதமர் பதஹ்வியை ஏற்றுக்கொளும்படி கேட்டிருந்தார். அதைத் தான் எடுத்துக்கொள்வது முறையல்லவெனவும் இருப்பினும் தான் கட்சி உறுப்பினர்களோடு ஆலோசித்து ஒரு முடிவை எட்டுவதாகப் பிரேமதாச தெரிவித்திருந்தார் எனக் கூறப்படுகிறது.

நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூடி நீண்ட நேரம் விவாதித்ததன் பின்னர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் திட்டத்தின் பிரகாரம் தாம் இடைக்கால சர்வகட்சி அரசொன்றுக்கு உடன்படுவதெனவும் அதன் பிரதமராக கரு ஜயசூரியாவை முன்மொழிவதாகவும் அறிவித்துள்ளனர்.

கரு ஜயசூரியா ஒரு அனுபவம் மிக்க, மூத்த அரசியல்வாதி என்பதோடு சர்வதேசங்களோடு நல்லுறவைப் பேணி வரும் ஊழலற்ற, கட்சியரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒருவர் என்பதிலும் அனைவரும் உடன்படுகிறார்கள் எனத் தெரிகிறது. தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுபட சர்வதேசங்களது உதவி தேவைப்படுவதால் கரு ஜயசூரியாவே இதற்குப் பொருத்தமானவர் எனச் சகலரும் ஏற்றுக்கொள்வதாகத் தெரிகிறது.