இலங்கை | அமைச்சரவையில் பாரிய மாற்றம்: பீரீஸ், குணவர்த்தனா, வீரசேகரா, அளுத்கமகே வெளியே; திலும் அமுனுகம பொலிஸ் அமைச்சர்?
ஏற்கெனெவே எதிர்பார்த்தபடி ஜனவரி 12ம் திகதிக்கு முன்னர் இலங்கை பாராளுமன்ற அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் நடைபெறவுள்ளதாக உல்ளக தகவல்களை மேற்கோள்காட்டி லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது அமைச்சரவையில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களான வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேகரா, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தமது அமைச்சரவைப் பதவிகளை இழக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களில் பேரா. ஜி.எல். பீரீஸ் தனக்கு அமைச்சுப் பதவி வேண்டாமெனக் கேட்டுக்கொண்டதற்கமைய அவருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே பல தடவைகள் சர்ச்சைக்குள்ளான பொதுமக்கள் பாதுகாப்பு (பொலிஸ்) அமைச்சர் சரத் வீரசேகராவின் பதவி பறிக்கப்பட்டு அவரது இடத்திற்கு, கோதாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான, திலும் (ஹிட்லர்) அமுனுகம நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இவரும் அடிக்கடி தனக்கு அப்பாற்பட்ட விடயங்களில் கருத்துக்கூறிப் பலதடவைகள் சர்ச்சைக்குள்ளாகியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இவரைப் போல் இன்னுமொரு ராஜாங்க அமைச்சரான டி.வி.சனகா என்பவரும் கபினெட் தர அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் பதவி பறிக்கப்பட்டு அவரது இடத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்க நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிகிறது.
ஜனவரி 12 ம் திகதிக்கு முன்னர் இம் மாற்றங்கள் நிகழலாம் எனவும் ஆனாலும் இறுதி நேரத்தில் இவற்றிலும் மாற்றங்கள் நடைபெற வாய்ப்புண்டு எனவும் உள்ளகத் தகவல்களை மேற்காட்டி லங்கா நியூஸ் வெப் செய்தி வெளியிட்டுள்ளது.