இலங்கை: அனைத்துலக மருத்துவநல அமைப்பின் (IMHO) உதவியில் இலவச கட்புலச் சிகிச்சை
இலங்கையின் வட-கிழக்கு மற்றும் மலையக பகுதிகளிலுள்ள உள்ளூர் கண் அறிவைச்சிகிசை நிபுணர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் ஆலிகியோரின் உதவியுடன் கட்புலப் பாதிப்பு உள்ளவர்களுக்கு அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO-USA) இலவச அறுவைச் சிகிச்சைகளைச் செய்து உதவியிருக்கிறது.
அதீத சூரிய ஒளியியில் இருக்கும் புறஊதாக் கற்றைகளால் கண்களின் வில்லைகளில் ஏற்படும் திரைகளின் காரணமாக பார்வை சிறிது சிறிதாக மங்கவாரம்பிக்கிறது. ‘கற்றறாக்ட்’ (cataract) எனப்படும் இக் கோளாறு சிறிய அறுவைச்சிகிச்சையுடன் இலகுவாகத் திருத்தம் செய்யப்படக்கூடிய ஒன்று. ஆனால் இவ் வியாதி பற்றிய விழிப்புணர்வுக் குறைவாலும், வசதியீனம் காரணமாகவும் பல கிராமத்தவர்கள் இதை ஒரு ‘வயதோடு வரும் நிகழ்வு’ எனக் கவனிக்காது விடுவதனால் நிரந்தரமாகவே பார்வையை இழந்து பிறரின் தயவில் வாழவேண்டி ஏற்பட்டுவிடுகிறது. இப்படிக் கட்புலப் பாதிப்புடையவர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்போதே அறுவைச் சிகிச்சைகளைச் செய்துகொள்வதன் மூலம் அவர்களது வாழ்வின் தரத்தையும் அவர்களை அண்டியுள்ளவர்களின் வாழ்க்கையின் தரத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்.
இதை மனதில் கொண்டு அனைத்துலக மருத்துவ நல அமைப்பு ‘Assist RR’ போன்ற இதர அமைப்புக்களின் உதவியுடன் வட கிழக்கு மக்களிடையே கட்புல விழிப்புணர்வைக் கொண்டுவரும் முயற்சிகளிலும் இலவச அறுவைச்சிகிச்சைகளை வழங்குவதன் மூலமும் பல ஆண்டுகளாகச் சேவைகளை வழ்ங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் 50 நோயாளிகளுக்கு அறுவைச்சிகிச்சைகளை வழங்கியிருக்கிறது. அத்தோடு அடுத்த இரு வாரங்களில் மேலும் 100 பேருக்கு இச் சிகிச்சைகளை வழங்கவிருக்கிறது. இதைவிட, கிளிநொச்சி மருத்துவமனையில் 47 சிகிச்சைகளையும், நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் 25 சிகிச்சைகளையும் மேற்கொள்ளவுள்ளது.
இப்படியான சிக்கிச்சைகள் மூலம் பலன் பெற்றவர்களில் பெரும்பாலானோர் இரண்டு வருடங்களுக்கு மேலாகப் பார்வைப்புலன்களை இழந்து வாழ்ந்தவர்களாவார்.
இச் சிகிச்சையின்போது பழுதடைந்த வில்லைகளை அகற்றிவிட்டு அவற்றுக்குப் பதிலாகப் புதிய வில்லைகளை உள்ளீடு செய்வதே வழக்கம். இவ் வில்லைகளின் தட்டுப்பாட்டினால் தற்போது இச்சிகிச்சைகள் தமதமாகின்றன எனவும் அவை கிடைத்தவுடன் இப்பணி தொடருமெனவும் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு கல்முனை வைத்தியசாலையில் இச் சிகிச்சையைத் துல்லியமாகவும் தவறுகள் நிகழாது செய்வதற்காகவும் US$ 8,000 பெறுமதியுள்ள கண்ணை ‘ஸ்கான்’ செய்யும் உபகரணமொன்றையும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு இலவசமாக வழங்கியுள்ளது.
2004 ஆழிப் பேரலை அனர்த்தத்தோடு தனது சமூகப் பணிகளை விஸ்தரிக்க ஆரம்பித்த அனைத்துலக மருத்துவ நல அமைப்பு இலங்கையில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலுமுள்ள வறிய நாடுகளிலுள்ள மக்களுக்கும் தனது சேவைகளை வழங்கி வருகின்றது. இதன் பிரகாரம் சமீபத்தில் ஹெயிட்டி நாட்டிலுள்ள மருத்துவமனை ஒன்றுக்கு US$ 4,000 பெறுமதியுள்ள அறுவைசிகிச்சை மேசை ஒன்றை வழங்கியிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம், எல்லைகளற்ற மறுத்துவர் சங்கம் போன்ற பல சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இயற்கை அனர்த்தங்கள் மற்றும் போர்களினால் வேறு பலநாடுகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சேவைகளை ஆற்றி வருகிறது.
அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் இச்சேவைகளுக்கு தோளோடு தோள் நின்று உள்ளூர் மருத்துவர்கள், தாதிகள், மருத்துவ மனை நிர்வாகங்கள் ஆகியனவும் தமது நேரத்தையும், உழைப்பையும் அர்ப்பணித்து வருவது பாராட்டுக்குரியது.