இலங்கை | அடுத்த வருடம் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்?
பசில் ராஜபக்சவின் சாணக்கியம்
2023 இல் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்களை நடத்துவதற்குத் தயாராகுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமைப்பாளர்களுக்கு கட்சி நிறுவனர் பசில் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக அறியப்படுகிறது.
அலரி மாளிகையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பசில் ராஜபக்ச தனது கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சிச் சபையின் பதவிக்காலம் ஜனவரி 10, 2022 இல் முடிவடைந்ததும் விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம ஜனாதிபதி அதை மார்ச் 19, 2023 இற்குப் பின்போட்டிருந்த்ததும் தெரிந்ததே. இதனால் மார்ச் 19, 2023 இற்கு முதல் உள்ளூராட்சிசபைத் தேர்தல்களை அரசு நடத்தியேயாகவேண்டும். ஆனாலும் உள்ளூராட்சிச்சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு பசில் இணங்கவில்லை எனவும், அதற்கு முதல் பாராளுமன்றத் தேர்தல்களை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பசில் ராஜபக்சவின் சாணக்கியமான இந்த திட்டத்தின் பின்னால் இரண்டு காரணங்கள் உள்ளன என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஒன்று எதிர்க் கட்சிகள் இன்னும் பிளவுபட்ட நிலையிலும், மக்களிடையே பெருத்த ஆதரவை இன்னும் தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலையிலும் இருக்கின்றன. எனவே இது ராஜபக்ச தரப்பிற்குச் சாதகமானது. இரண்டாவது உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்கள் முதலில் நடத்தப்பட்டு அதில் எதிர்க்கட்சிகள் வெற்றியடைய நேரின் அதநால் கிடைக்கும் உத்வேகம் பின்னர் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் அவர்களுக்கு வெற்றியை அளிக்க வாய்ப்பிருக்கிறது. 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சிச்சபைத் தேர்தல்களில் அப்போதைய ஆளும் கட்சியான ஐ.தே.கட்சி படுதோல்வியைத் தழுவியிருந்தது. அதன் தாக்கம் 2019 ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச தரப்புக்குச் சாதகமாக அமைந்திருந்தது.
நாட்டில் தற்போது இருந்துவரும் சூழலில் 2023 இல் உள்ளூராட்சிச்சபைத் தேர்தல்களை நடத்தினால் தாம் அதில் நிச்சயமாகப் படுதோல்வியை அடைவோம் என நம்புவதால் எதிர்க்கட்சிகள் தம்மைத் தயார்ப்படுத்துவதற்கு முன்னரேயே பாராளுமன்றத் தேர்தல்களை நடத்திவிடவேண்டுமென பசில் விரும்புவதாகவும் தெரிகிறது. மக்கள் அரசாங்கத்தில் அதிருப்தி கொண்டிருந்தாலும், ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் இன்னும் தயாராகவில்லை என அவர் கருதுவதாகவும் அறியப்படுகிறது.
அரசாங்கத்தின் மீது அதிருப்தி நிலவினாலும் அது பெரும்பாலும் பெரமுன கட்சியின் அடித்தளமான சிங்கள கடும் தேசிய, இனக்குரோதம் கொண்ட வாக்காளர் மனநிலையை அசைக்கவில்லை எனவும் நிலைமாறும் தன்மை கொண்ட வாக்காளர்களே பெரும்பாலும் மாறி வாக்களிக்கக்கூடியவர்கள் எனவும் ஆனாலும் உறுதியான தலைமை எதிர்க்கட்சிகளிடத்தில் இல்லாமையால் அவர்கள் சிலவேளைகளில் வாக்களிக்காமல் ஒதுங்கிவிடவும் சந்தர்ப்பமுண்டு எனவும் அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் இன்னும் பலவீனப்பட்ட நிலையில் இருக்கும்போது பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் அரசாங்கத்தை அமைக்கும் வல்லமை தமக்கு இருக்குமென பசில் நம்புவதாகத் தெரிகிறது.
அதே வேளை ராஜபக்சக்களின் ஆஸ்தான சோதிடரின் எதிர்வுகூறலின்படி இன்னுமொருதடவை அரசகட்டிலேறும் பாக்கியம் அவர்களுக்கு உண்டு என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.