Sri Lanka

இலங்கை: அடானி ‘அவுட்’

மன்னார், பூனகரி ஆகிய பிரதேசங்களில் இந்திய முதலீட்டாளர் அதானியால் $1 பில்லியன் டொலர் செலவில் நிறுவப்படவிருந்த இயற்கை வலுத் திட்டத்தை அதானி குழுமம் நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றாடிகள் மூலம் 484 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இத்திட்டம் build-own-operate (BOO) என்ற உடன்படிக்கையின் பிரகாரம் செயற்படவிருந்தது. அதாவது இதன் நிர்மாணத்திற்கான செலவை அதானி குழுமமே ஏற்றுக்கொண்டு, 20 வருடங்களுக்கு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் அதுவே எடுத்துக்கொள்ளும்.

அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டு ஏறத்தாழ செயற்படு நிலையிலிருந்த இத்திட்டத்திற்கு ஜே.வி.பி. உடபட்ட அனைத்து சிங்களத் தேசியக் கட்சிகளும் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பைத் தெரிவித்து வந்தன. இந்த ஒப்பந்தம் திறந்த கோரிக்கைகளின் மூலம் செய்யப்படாமல் கடந்தகால அரசுகளால் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டது எனவும் அத்துடன் இவ்வொப்பந்தம் அதானி குழுமம் அதிக இலாபமீட்டும் வகையில் செய்யப்பட்டதெனவும் இவ்வெதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். ஆனாலும் இக்கட்சிகளின் இந்திய எதிர்ப்பு கொள்கையே இவ்வெதிர்ப்பிற்கு மூல காரணம் எனபது பொதுவான கருத்தாகவிருந்தது. பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் ஜே.வி.பி. / என்.பி.பி. கட்சி தாம் ஆட்சிக்கு வந்தால் இவ்வொப்பந்தத்தை மீள்பரிசீலனைக்குட்படுத்தி வேறு போட்டியாளர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவோமெனக் கூறியிருந்தது. அதன் பிரகாரம் தற்போது அரசு இவ்வொப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்ய முற்படும்போது அதானி குழுமம் (Adani Green Energy Limited (AGEL)) தாம் இவ்வொப்பந்தத்திலிருந்து விலகுவதாக நேற்று (பெப். 12) , எழுத்து மூலம் அறிவித்திருக்கிறது.


காற்றாடி மின்பிறப்பாக்கிகள் மட்டுமல்லாது வடக்கிலிருந்து தெற்கிற்கு மின்சார விநியோகம் செய்யும் பொறுப்பையும் அதானி குழுமமே ஏற்றிருந்தது. 220 kV, 400 kV வலையமைப்பு மூலம் இப்பரிவர்த்தனை நடைபெறவிருந்தது. இலங்கை மின்சார சபையுடன் 14 தடவைகள் சந்திப்புகளை மேற்கொண்ட பின்னரே இத்திட்டம் கைச்சாத்திடப்பட்டது.

இத்திட்டம் நடைமுறைப்படுததப்படுவதற்கெதிராக சில உள்ளூர் நலன் விரும்பிகளும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் தமது எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்தனர். மன்னார் பிரதேசம் இடம்பெயர் பறவைகளின் வலயமாக இருப்பதனால் இக்காற்றாடி மின்பிறப்பாக்கிகள் அவற்றின் உயிர்வாழ்தலைப் பாதிக்குமென்ற காரணத்திற்காகவும் அதே வேளை இது பிறப்பிக்கும் மின்சாரத்தின் கதிர்வீச்சு மனிதருடைய ஆரோக்கியத்தைப் பாதிக்கலாமென்ற காரணத்தினாலும் பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புகளும் தோன்றியிருந்தன. இதற்கு பரிகாரமாக அதானி குழுமம் அப்பிரதேச மக்களுக்கு சுகாதாரம், கல்வி, உட்கட்டுமானம் மற்றும் திறன்வளர்ப்புத் திட்டங்களில் முதலீடுகளைச் செய்வதற்கு இணங்கியிருந்தது.

இருப்பினும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய இறுதி முடிவுகள் கிடைக்கப்படாமையாலும், இத்திட்டத்திற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்க்கின் தீர்ப்பு இழுத்தடிக்கப்பட்டு வந்தமையாலும் இத்திட்டத்தை ஆரம்பிப்பதில் அதானி குழுமத்திற்குத் தொடர்ச்சியான பல தடங்கல்கள் இருந்து வந்தன. இத்திட்டத்தின் ஆரம்ப வேலைகளுக்காக அதானி குழுமம் ஏற்கெனவே காணிகளை வாங்கியதுடன் சில வேலைகளை ஆரம்பித்துமிருந்தது.

2024 இல் அஞுர அரசு ஆட்சிக்கு வந்ததும் இவ்வொப்பந்தத்தை மீள் பரிசோதனை செய்யவேண்டுமென உத்தரவிட்டது. இதில் ஒரு கி.வாட் மின்சாரத்தை 8.26 சதங்களுக்கு வாங்குவோம் என்றிருந்ததை 6.0 சதமாகக் குறைக்குமபடி கேட்டிருந்தது. இதற்கு அதானி குழுமம் உடன்படவில்லையெனக் கூறப்படுகிறது.

அதானி குழுமத்தின் வெளியேற்றம் இலங்கைக்கு வெளிநாடுகளின் முதலீடுகளை வரவழைப்பதில் பாரிய சிக்கலைத் தோறுவித்துள்ளது. குறிப்பாக இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதாரச் சவால்கள் மிகவும் நெருக்கடியான சூழலை உருவாக்கியிருக்கும் இக்காலகட்டத்தில் பொதுமக்கள் பாவனைக்கு மட்டுமல்லாது உற்பத்தித் துறையின் இருப்புக்கும் மின்சாரம் அத்தியாவசியமானது. அது மட்டுமல்லாது அதானி குழுமத்தின் வெளியேற்றம் எதிர்கால முதலீட்டாளர்களையும் அச்சுறுத்துவதற்கு வாய்ப்புண்டு.

உதாஅனுர அரசின் இந்த செயற்பாடு அதன் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா என்ற சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் LNG திட்டங்கள் ஏற்கெனவே இலங்கையின் மின்சார உற்பத்தியில் பங்கெடுக்க முயன்றமையும், சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தமது திட்டங்களை ஆரம்பிக்க முயல்வதுவும் அதானியின் வெளியேற்றத்திற்குக் காரணமாக இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.