Spread the love
அ.இ.அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேறியது

December 11, 2019

இலங்கை அகதிகளும் உள்வாங்கப்பட வேண்டும் - தமிழ்க் கட்சிகள் 1
றோஹிங்யா அகதிகள் – [படம்: youtube.com]

இந்திய அரசியலமைப்பில் உள்ள குடியுரிமை பற்றிய கட்டளையில் கொண்டுவரப்பட்ட திருத்தம் நேற்று மேல் சபையில் நிறைவேறியது. இத் திருத்தத்தின் பிரகாரம் இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்து 6 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் அல்லாதவர்கள், குறிப்பாக பாகிஸ்தான், பங்களா தேசம், ஆப்கானிஸ்தான் ஆகியநாடுகளிலிருந்து வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிக்கள், சமணர்கள், பெளத்தர்கள், இந்தியக் குடியுரிமை பெற உரித்துடையவர்கள் ஆகிறார்கள். இதில் இலங்கையிலிருந்து வந்த எவரும் சேர்க்கப்படவில்லை.

இலங்கை அகதிகளும் உள்வாங்கப்பட வேண்டும் - தமிழ்க் கட்சிகள் 2
கமல் ஹாசன்

இக் குடியுரிமைத் திருத்த மசோதா (Citizenship Amendment Bill (CAB)) பா.ஜ.க.வின் பெரும்பான்மை காரணமாகக் கீழ் சபையில் சில நாட்களுக்குமுன் இலகுவாக நிறைவேறியிருந்தது. இன்று மேற்சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது, பா.ஜ.க. பெரும்பான்மையில்லாமலிருந்தும் 125-105 என்ற வாக்குப் பெரும்பான்மையில் வெற்றியீட்டியிருக்கிறது. அ.இ.அ.தி.மு.க. இதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. மேல் சபையில் அ.இ.அ.தி.மு.க. விற்கு 11 ஆசனங்களும், தி .மு.க.விற்கு 5 ஆசனங்களும் இருக்கின்றன.

இருப்பினும் 64 வருடங்களாக இருந்து வந்த மதசார்பற்ற குடியுரிமைச் சட்டம் மாற்றப்படுவதையும், முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாரபட்சம் கட்டப்படுவதையும், காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகளும், கல்விமான்களும் எதிர்த்துக் குரலெழுப்பி வருகின்றனர். அஸ்ஸாம் மானிலத்தில் வேறு காரணங்களுக்காக அம் மாநில மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இச் சட்டத்தால் அனுமதிக்கப்படும் மக்கள் குழுமத்தில் இலங்கை அகதிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு ,எதிராகத் தி.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம், சிவ சேனை ஆகிய கட்சிகள் குரலெழுப்பி வருகிறார்கள். கடந்த திங்களன்று இம் மசோதா கீழ்ச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்திருந்தனர்.

“திட்டமிடப்பட்டு இனப்படுகொலை செய்யப்படும் இலங்கைத் தமிழர்களும், பாகுபாடு காட்டப்படும் முஸ்லிம்களும் ஏன் இம் மசோதாவில் சேர்க்கப்படவில்லை” என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் ஹாசன் குரலெழுப்பியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட 3 இலட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டின் முகாம்களிலும், இதர பாகங்களிலும் கடந்த 30 வருடங்களாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களில் பலர் உயர் கல்வி கற்றவர்களாகவும், சுமார் 4000 பேர் பட்டதாரிகளாகவும் உள்ளதாக அறியப்படுகிறது.

இலங்கையர்களைப் போலவே மியன்மாரிலிருந்து அகதிகளாக வந்த றொஹிங்யா முஸ்லிம்களும் பங்களா தேச எல்லைகளினூடு இந்தியாவிற்குள் வந்து அகதிகளாக வாழ்கிறார்கள்.

இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பவேண்டுமென முந்தைய அரசாங்கம் கேட்டிருந்தது. அதன் பிரகாரம் கடந்த சில வருடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் சுமார் 600 குடும்பங்கள் முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களில் குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக நிலங்களும் வீடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்களின் மீள்குடியேற்றத்துக்காக ஐ.நா. அகதிகள் சபையும், இலங்கை அரசாங்கமும் சிறு உதவிப்பணத்தைக் கொடுத்தாலும் அவர்களுக்கு குறைந்தது 6 மாதங்களுக்காவது, மாதமொன்றுக்குத் தலா 50,000 ரூபாய்கள் தேவைப்படுகிறது. இவர்களின் பயணச் செலவை இந்தியா ஏற்றுக்கொள்கிறது.

இம் மீள் குடியேற்றம் ஏற்கெனவே நடைமுறையிலுள்ளதாலும், வட கிழக்கில் தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களில் இவ்வகதிகள் மீள் குடியேற விரும்பினால் அதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டுமென இலங்கையும், இந்தியாவும் விரும்புவதாலும் நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமத் திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் சேர்க்கப்படாமலிருக்கலாம் எனவும் சில அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Print Friendly, PDF & Email
Related:  தூத்துக்குடி பொலிஸ் கொலைகள் | நடந்தது என்ன?