இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த பிரித்தானிய தொழிற் கட்சி முயற்சி எடுக்கும் – ஸ்டீபன் கின்னொக்


“இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்கும் விடயத்தில் பிரித்தானிய தொழிற்கட்சி காத்திரமான முயற்சிகளை முன்னெடுத்துவருகிறது என தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டின்போது பிரித்தானிய தொழிற்கட்சிக்கான தமிழர்கள் என்ற அமைப்பு ஒழுங்குசெய்திருந்த சந்திப்பில் பேசிய தொழிற்கட்சியின் வெளிவிவகார நிழலமைச்சர் லீசா நன்டி தெரிவித்துள்ளார்.

ஆசியாவுக்கான நிழலமைச்சர் ஸ்டீபன் கின்னொக், பிறெண்ட் நோர்த் பா.உ., பரி கார்டினர், பெண்கள் சமத்துவத்துக்கான இராஜாங்க நிழலமைச்சர் டோண் பட்லர், ஈஸ்ட் ஹாம் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பிநர் ஸ்டீபன் ரிம்ஸ், மிட்சம், மோர்டென் தொகுதி பா.உ. சஸ்லோபெய்ன் மக்டோனா உள்ளிட்ட பல தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இம் மாநாட்டில் கலந்துகொண்டார்கள்.

மார்ச் மாதம் ஐ.நா.மனித உரிமைகள் சபை தீர்மானம் நிறைவேற்றியபோது தகவல்களைத் திரட்டுவதற்கென 12 மாதகால அவகாசம் கொடுத்தது. அதேவேளை அதற்குத் தேவையான நிதியுதவியை 50% தத்தால் குறைத்துக்கொண்டது.
— ஃபிரான்சிஸ் ஹரிசன்
Tweet

சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் பி.பி.சி நிருபருமான ஃபிரான்சிஸ் ஹரிசன், PEARL அமைப்பின் பிரித்தானிய பொறுப்பதிகாரி ஆரபி ராஜ்குமார், மனித உரிமைகள் முன்னெடுப்பாளர் சுபாஷினி நாதன், ‘சித்திரவதையிலிருந்து விடுதலை’ அமைப்பின் முதன்மை நிர்வாகி சொன்யா ஸ்கீட்ஸ் ஆகியோர் பேச்சாளர்களாக இருந்த இவ்வமர்வை, ‘தொழிற்கட்சிக்கான தமிழர்கள்’ அமைப்பைச் சேர்ந்த சென் கந்தையா நெறிப்படுத்தியிருந்தார்.

இவ்வமர்வில் பேசிய ஆசியாவுக்கான நிழலமைச்சர் ஸ்டீபன் கின்னொக், “தமிழர்களின் இனப்படுகொலையோடு தொடர்புடைய பலர் இலங்கை அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். நாட்டை விட்டு வெளியே வரும்போது அவர்களைக் கைதுசெய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். குற்றமிழைத்ததற்கான ஆதாரங்கள் இருந்தும் தற்போதைய அரசு இலங்கையைக் குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க மறுத்து வருகிறது. சீனாவும் ரஷ்யாவும் பாதுகாப்புச் சபையில் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை முறியடித்துவிடுவார்கள் எனத் தாம் அஞ்சுவதாக அரசு தெரிவிக்கிறது. எமது வெளிவிவகாரக் கொள்கையை வெளிநாடுகளா தீர்மானிப்பது? அதிகாரத்தை வைத்துக்கொண்டிருக்கும் பிரித்தானிய அரசு இதைவிட அதிகமாகச் செய்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் இருக்கும் இராணுவ அதிகாரி, மனித உரிமை மீறல்களைச் செய்தவர்கள் எனத் திட்டவட்டமாகத் தெரிந்தபின்னரும் இலங்கை இராணுவ ஜெனரல்களுக்கு ஆலோசனை வழங்கி வருவது ஏன்? ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் போதுமான அளவு இறுக்கமாக இல்லை. இலங்கைக்கு கொடுத்த 18 மாத கால அவகாசம் நீண்டுபோய்விட்டது. ஜி.எஸ்.பி+ விடயத்தில் தாம் என்ன செய்யப்போகிறோமென்று தெளிவாக அரசாங்கம் கூறுவதாகவில்லை. மனித உரிமை மீறல்களைச் செய்தவர்களோடு தொடர்ந்து வர்த்தகம் செய்துகொள்வதை இந்த அரசு விரும்புகிறது. தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் தனது வர்த்தக்கக் கொள்கையைத் தார்மீக அடிப்படையிலேயே வரித்துக்கொள்ளும்” எனத் தெரிவித்தார்.



முன்னாள் பி.பி.சி. நிருபர் ஃபிரான்சிஸ் ஹரிசன் பேசும்போது, “மார்ச் மாதம் ஐ.நா.மநித உரிமைகள் சபை தீர்மானம் நிறைவேற்றியபோது தகவல்களைத் திரட்டுவதற்கென 12 மாதகால அவகாசம் கொடுத்தது. அதேவேளை அதற்குத் தேவையான நிதியுதவியை 50% தத்தால் குறைத்துக்கொண்டது. ஷவேந்திர சில்வா மீது நடவடிக்கை எடுக்கும் விடயத்தில் வெளிவிவகார அமைச்சிடமிருந்து ஒத்துழைப்பைப் பெறமுடியாமலுள்ளது. இலங்கை அரச பொலிஸ் படையினருக்குப் பயிற்சியளிப்பதற்குத் தொடர்ந்தும் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆனால் பொலிசாரின் சித்திரவதையும், மனித உரிமை மீறல்களும் தொடர்ந்தவண்ணமிருக்கின்றன. இளம் தமிழ் வாலிபர்கள் தொடர்ந்த்தும் கடலைத் தாண்டி இங்கு வந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் போரில் ஈடுபட்டவர்களல்ல. இராணுவத்தின் சித்திரவதைகளுக்கு முகம்கொடுக்கமுடியாமல் தமது உயிராபத்தான நிலைகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 2009 இல் என்ன நடைபெற்றது என்பதற்குப் பொறுப்புக்கூறல் விடயத்தில் நாம் மினக்கெடுகிறோம். ஆனால் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதுவே முக்கியம். ராஜதந்திரிகளைத் தேர்வு செய்வது, , ஐ.நா. அமைதிப்படைகளுக்குப் பயிற்சியளிப்பது, மக்னிற்ஸ்கி தடைகளை, ஷவேந்த்திர சில்வாவில் மட்டுமல்ல பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண போன்றோர் மீதும் கொண்டுவருதல் போன்ற விடயங்களில் தொழிற்கட்சி கவனம் செலுத்தவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.