இலங்கையைச் சேர்ந்த ஆலை முகாமையாளர் ஒருவர் பாகிஸ்தானில் அடித்துக் கொலை

மத நிந்தனை (blasphemy) காரணமெனக் கூறப்படுகிறது



பாகிஸ்தானில் ஆலையொன்றில் முகாமையாளராகக் கடமையாற்றிய இலங்கையர் ஒருவரை குழுவொன்று அடித்துக் கொலைசெய்துவிட்டு உடலைத் தெருவில் வைத்துத் தீமூட்டி எரித்துள்ளதாக பாகிஸ்தான் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் மத நிந்தனை செய்தார் என்பதற்காகவே கொல்லப்பட்டார் எனக் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தான் நேரடியாகக் கண்காணிக்கவிருப்பதாகவும், இது பாகிஸ்தானுக்கு அவமானம் தரும் நாளெனவும் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இச் சமபவம், இன்று (வெள்ளி), இஸ்லாமாபாத்திலிருந்து தென்கிழக்கே. 200 கி.மீ. தொலைவிலுள்ள சியால்கொட் என்னுமிடத்தில் நடைபெற்றுள்ளது.

மத நிந்தனை போன்றவை பாகிஸ்தானில் மிகவும் கொந்தளிப்பான விடயங்கள் ஆகும். அதுவும் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை முடிந்து வருகின்ற கூட்டத்தினர் இவ் விடயங்களில் மிக இலகுவாக உணர்ச்சிவசப்பட்டு ஆர்ப்பாட்டங்களிலும் தாக்குதல்களிலும் இறங்கிவிடுவதுண்டு எனக் கூறப்படுகிறது.

இஸ்லாமிய புனித வாசகங்களைக் கொண்ட சுவரொட்டியொன்றைக் கிழித்தெறிந்தார் என்பதனால் ஆத்திரமடைந்த ஆலைத் தொழிலாளர்களால் இச் சம்பவம் பெரிதாக்கப்பட்டது எனவும் அதனாலேயே ஆலையின் முகாமையாளர் கொல்லப்பட்டதாகவும் பெயர் குறிப்பிடப்பட விரும்பாத பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பார்ப்பதற்கு அச்சமூட்டக்கூடிய பல படங்களும், காணொளிகளும் பல சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.



இச் சம்பவம் குறித்து இதுவரை 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். மத நிந்தனைக்கெதிரான தெஹ்றீக்-ஈ-லப்பால்க் பாகிஸ்தான் (TLP) கட்சியின் ஆதரவாளர்களே இதன் பின்னணியில் இருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது.

பாரிஸ், பிரான்ஸில், சார்லீ ஹெப்டோ சஞ்சிகையினால் மேற்கொள்ளப்பட்ட முஹம்மது நபி நிந்தனையின்போது TLP தமது ஆர்ப்பாட்டங்களின் மூலம் பாகிஸ்தானையே ஸ்தம்பிதமடையச் செய்திருந்தது.

பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கை ராஜதந்திரிகளுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும், குற்றவாளிகள் அனைவரும் விரைவில் நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்கள் என பாகிஸ்தான் உறுதியளித்துள்ளதாகவும் தெரிகிறது.