Spread the love
இலங்கையில் IMHO வின் கோவிட்-19 நிவாரண முயற்சிகள் 1
கருகிப்போகும் தேயிலைத் தளிர்கள்- படம்: விக்னேஷ் IMHO Srilanka

கடந்த சில வாரங்களாக, அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO), இலங்கையில் கோவிட்-19 நோய்தடுப்பு நடவடிக்கைகளினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

வடக்கு, கிழக்கு, மலையகம் என்று பல மாவட்டங்களிலும் வாழும் மக்களில் பலர் தினச் சம்பளத்துக்குப் பணிபுரிந்து வருபவர்கள். நோய்த் தடுப்பு, பரவல் கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்கொண்ட அரசாங்கம் இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் எதையும் வழங்காத நிலையில், பல புலம் பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகளும், தனிப்பட்டவர்களும் கடந்த சில வாரங்களாகத் தாயகத்தில் பல நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கிவரும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு 2004 ஆழிப்பேரலைக் காலத்திலிருந்து பலவிதமான அனர்த்த நிவாரணம், மருத்துவ உதவிகள், வறுமையொழிப்பு, கல்வி, போஷாக்கு வழங்குதல் போன்ற பல பணிகளில் ஈடுபட்டு வருகிறது. போர்க்காலத்தில் இவ்வமைப்பு மேற்கொண்ட பல பணிகள் மகத்தானவை. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அதன் கிளை மூலம் நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

மலையக மக்களைப் பொறுத்த வரையில், 90-95% மானோர் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்பதும், லயன்கள் எனப்படும் வரிசைக் குடிசைகளில் வாழும் இவர்களுக்கு தேயிலை கொய்வதால் கிடைக்கும் வருமானத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்பதும் மலையகத்துக்கு வெளியில் வாழும் பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. தேயிலை பறிக்காவிட்டால் இவர்களுக்கு வருமானமில்லை. துர்ப்பாக்கியமாக, கடந்த சில வாரங்களாகக் காணப்படும் அதீத வெப்பநிலையால் தேயிலைக் கொழுந்துகள் கருகிவிடுவதானால் இவர்களது வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கிறார் அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் இலங்கைப் பணியாளர் விக்னேஷ். இத் தொழிலாளர்களுக்கு சமுர்த்தியோ அல்லது வேறெந்த உதவிப்பணமோ கிடைப்பதில்லை என்பதுடன் வெளிநாடுகளிலும் இவர்களுக்கு உறவினர்கள் என்று எவரும் இல்லாததால், மிகவும் பாதிக்கப்பட்ட மக்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

கடந்த சில வாரங்களாக, அனைத்துலக மருத்துவ நல அமைப்பு, மலையக மக்களுக்குத் தமது நிவாரணப் பணிகளை அதிகரித்திருக்கிறது.

Print Friendly, PDF & Email