இலங்கையில் விரைவில் சீனாவின் இராணுவத் தளம்? – எச்சரிக்கிறது பென்டகன்


அமெரிக்க காங்கிரஸின் பணிப்பின்படி அமெரிக்க பாதுகாப்புத் திணைகளமான பெண்டகன் தனது வருடாந்த அறிக்கையை நவம்பர் 3 இல் வெளியிட்டிருக்கிறது. இந்தத் தடவை அவ்வறிக்கை பெரும்பாலும் சீனாவை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் ‘மக்கள் விடுதலை இராணுவத்தின் (Peoples Liberation Army (PLA)) வளர்ச்சி, முதிர்ச்சி பற்றி பெண்டகனின் அடிப்படையான கணிப்பு இவ்வறிக்கையில் வெளியாகியிருக்கிறது.

சீனா தொடர்பான பெண்டகனின் வருடாந்த அறிக்கை (2021)

உலக ஆதிக்கத்தை நோக்கமாகக் கொண்டு மக்கள் சீனக் குடியரசு (Peoples Republic of China (PRC)) தனது பல ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கிச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் நோக்கம் சர்வாதிகார ஆட்சிமுறையுடன் இணங்கவல்லதாக உலக ஒழுங்கை மாற்றியமைப்பது. இதை நடைமுறைப்படுத்த, 2017 இல் நடைபெற்ற கட்சி மாநாட்டில் அதன் பொதுச் செயலாளர் சி ஜின்பிங் ஒரு முக்கிய திட்டத்தை அறிவித்திருந்தார். அதற்காக இரண்டு படிநிலைகளைக் கொண்ட குறிக்கோள் முன்வைக்கப்பட்டது. முதலாவது, 2035 இற்கு முதல் தனது இராணுவத்தை (PLA) நவீனமயப்படுத்திக் கொள்வது, இரண்டாவது, 2049 இற்கு முதல் அதை ஒரு உலகத் தர இராணுவமாக உயர்த்திக் கொள்வது.

இத்திட்டத்தின் பிரகாரம் துரிதமாகச் செயற்பட்ட மக்கள் விடுதலை இராணுவம், 2020 இல் போரொன்றுக்கான தயார் நிலைக்குத் (combat readyness) தன்னைத் தயார் செய்துகொண்டது. கண்டங்களைத் தாண்டித் தாக்கவல்ல ஏவுகணை வல்லமை, விண்வெளியில் இருந்து தாக்குதலையோ அல்லது எதிர்த்தாக்குதலையோ மேற்கொள்ளும் வல்லமை, பெருமளவிலான அணுவாயுத வல்லமை ஆகிய துறைகளில் அது தனது தாக்கு திறனை உருவாக்கிக் கொண்டது. துரிதமாக வளர்ந்துவரும் செயற்கை விவேக (AI) தொழில்நுட்பத்தைப் பாவித்து, 2027 இல் அது தன்னை முற்றாக சுய விவேகத்துடன் (ஏறத்தாள தானியக்க முறை) செயற்படவல்ல ஒரு இராணுவமாக (inteligentized) வளர்த்துக்கொள்ளும் குறிக்கோளுடன் செயற்பட்டு வருகிறது.



தனது நோக்கத்தை அது நிறைவேற்றிக்கொள்ள சீன மக்கள் குடியரசு பலவிதமான உத்திகளைக் கையாண்டு வருகிறது. அதில் முக்கியமானவை: (1). தனது இராணுவத்தை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களை முழுமையாக வாங்கிக் கொள்வது (acqusition).

(2). வெளிநாடுகளின் முதலீடுகளை சீனாவுக்குக் கொண்டுவருதலின் மூலம் அத் தொழில்நுட்பங்களைப் பெற்றுக் கொள்தல்

(3). வெளீநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாக வியாபாரம் மேற்கொள்வதன் மூலம் அவற்றின் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்தல்

(4). வெளிநாட்டு நிறுவனங்களைத் தமது நிறுவனங்களுடன் இணைத்துக் கொள்தல் (mergers and acqusitions)

(5). வெளிநாட்டுத் தொழில்துறை மற்றும் தொழில்நுட்பத் துறைகளை வேவு பார்த்து தகவல்களைச் சேகரித்தல் (industrial and technical espionage)

2017 இல் கட்சி மாநாட்டில் வரித்துக்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் சீன மக்கள் குடியரசு இப்போது கணிசமான முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது.

  • உலகிலேயே அதி பெரிய இராணுவமாக வளர்ந்துள்ள மக்கள் விடுதலை இராணுவத்தின் இராணுவப் படையில் (PLAA) இப்போது 975,000 தயார்நிலைப் படையினர் இருக்கிறார்கள்
  • உலகில் அதி பெரிய கடற்படையில் (PLAN) நீர்மூழ்கிகள் உட்பட 355 போர்க்கப்பல்கள் இருக்கின்றன
  • உலகில் அதி பெரிய விமானப் படையில் (PLAAF) 2,800 போர் விமானங்கள் இருக்கின்றன. இதைவிட பல்லாயிரக் கணக்கான தாக்குதிறனுள்ள ஆளில்லா வேவு விமானங்களும் இருக்கின்றன
  • மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) இன்னுமொரு புதிய பிரிவான ஏவுகணைப் பிரிவு (rocket force (PLARF)) தரையிலிருந்து ஏவுகணைகளை ஏவும் திறனைக் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கிறது
  • மற்றுமொரு புதிய பிரிவாக கட்டளைத் தள உபாயப் படை (strategic support force (PLASSF)) உருவாக்கப்பட்டிருக்கிறது.
  • இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதஙகளின் ஆராய்ச்சிக்கென இன்னுமொரு பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது

உலக ஆதிக்கம்

கோவிட் பெருந்தொற்றைக் காரணமாகக் காட்டி இலங்கை போன்ற வறிய உலக நாடுகளைத் தமது பிடியில் வீழ்த்தி ஆங்காங்கே தனது இராணுவத் தளங்களை அமைப்பதற்கு மக்கள் விடுதலை இராணுவம் தனது உத்திகளைப் பிரயோகித்து வெற்றிகளையும் ஈட்டி வருகிறது. இந்த அணுகுமுறையின் ஒரு அம்சமாக வெளிநாடுகளில், பண்டப் பரிமாற்றம் மற்றும் கட்டுமானத் (logistical infrastructure projects) திட்டங்களை மேற்கொண்டுவருகிறது. இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் இதற்கு ஒரு முக்கிய உதாரணம். ட்ஜிபூதி (Djibuti) என்னும் ஆபிரிக்க நாட்டில் ஏற்கெனவே சீனாவின் இராணுவத் தளம் அமைக்கப்பட்டுவிட்டது. இதேபோன்று இலங்கை, கம்போடியா, மியன்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், கென்யா, சேஷெல்ஸ், தான்சானியா, அங்கோலா மற்றும் தஜிக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் தனது இராணுவத் தளங்களை அமைக்க சீன மக்கள் குடியரசு திட்டங்களைத் தீட்டி வருகிறது.

தனது திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள சீன மக்கள் குடியரசு நான்கு வகையான உத்திகளைக் கையாண்டு வருகிறது. (1). உளவியல் ரீதியான் போர்முறை (Psychological Warfare) (2). பிரச்சாரப் போர்முறை (Public opinion Warfare) (3). சட்ட ரீதியான போர்முறை (Legal Warfare) (4). செயற்கை விவேக போர்முறை (Artificial Intelligence Warfare) ஆகியனவே அவை.

இவ்வறிக்கையின் விரிவான ஆங்கிலப் பிரசுரத்தை இத் தொடுப்பின் மூலம் வாசிக்கலாம்